ADDED : மார் 14, 2024 02:33 AM

மும்பை: பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பதற்றம் தரும் வகையில், பல செய்திகள் வர துவங்கி உள்ளன. குறிப்பாக செபியின் தலைவர் மாதபி புரி புச், சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு பிரிவில், மோசடியான விலை ஏற்ற இறக்கங்களுக்கான அறிகுறிகளை செபி கண்டறிந்துள்ளது என கூறியதை அடுத்து, பங்குச் சந்தைகளில் அதிர்வலைகள் தொடரத் துவங்கி உள்ளன.
சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு பிரிவில் உள்ள பல பங்குகளின் விலை, அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலீட்டாளர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாதபி புரி புச் எச்சரித்துஇருந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக, சிறு மற்றும் நடுத்தர குறியீட்டுப் பங்குகள், பங்குச் சந்தைகளில் விற்பனை அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. நேற்று மட்டும் மும்பை பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 5.11 சதவீதமும்; மிட்கேப் குறியீடு 4.20 சதவீதமும் சரிந்தன.
சரிவு
கடந்த மாதம் 19ம் தேதி முதல், மும்பை பங்கு சந்தையின் ஸ்மால் கேப் குறியீட்டில் உள்ள 80 சதவீத பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
நேற்று, தேசிய பங்கு சந்தையின் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுக் குறியீடுகளும் சமீப காலத்தில் அதன் மோசமான சரிவைச் சந்தித்தன.
5,000 கோடி ரூபாய்க்கும் குறைவான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் சிறு மூலதன பிரிவின் கீழ் வரும். 5,000 முதல் 20,000 கோடி ரூபாய்க்குள்ளான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் நடுத்தர முதலீட்டுப் பிரிவில் அடங்கும்.
இப்பிரிவு பங்குகளின் மதிப்பீடுகள் போலியாக அதிகரிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக முதலீடுகளில் தேவையற்ற உற்சாகம் காட்டப்படுவதாகவும் செபி தலைவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் சவுகான், “பெரியளவிலான ரிஸ்க்குகளை கையாள இயலாத சிறு முதலீட்டாளர்கள், அதுபோன்ற முதலீடுகளில் ஈடுபட கூடாது” என்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பருக்கு பின், ஸ்மால் கேப் குறியீடு, நேற்று அதிகபட்சமாக சரிந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க் எடுக்கக் கூடிய நிலையில் உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமே ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற பங்குகளில் முதலீடு மேற்கொள்ள அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதே தன் கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
இந்நிலையில், இந்த சரிவு ஒரு தொடக்கப்புள்ளி தான் என்றும், வரும் நாட்களில் மேலும் சரிவை எதிர்பார்க்கலாம் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிக மதிப்பீடு காரணமாக, தேவையற்ற உற்சாகம் காட்டப்பட்டு வந்த நிலையில், இந்த சரிவு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்ததுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்பிரிவு பங்குகள் குறைந்தபட்சம் இன்னும் 5 சதவீதம் வரை சரியக்கூடும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த மாதம் 19ம் தேதி முதல், மும்பை பங்கு சந்தையின் ஸ்மால் கேப் குறியீட்டில் உள்ள 80 சதவீத பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன
