/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., நிதிகளை... அடிக்கடி மாற்றுவது ஏன் தவறானது?
/
எஸ்.ஐ.பி., நிதிகளை... அடிக்கடி மாற்றுவது ஏன் தவறானது?
எஸ்.ஐ.பி., நிதிகளை... அடிக்கடி மாற்றுவது ஏன் தவறானது?
எஸ்.ஐ.பி., நிதிகளை... அடிக்கடி மாற்றுவது ஏன் தவறானது?
ADDED : நவ 18, 2024 12:35 AM

மியூச்சுவல் பண்ட்களில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறு பற்றி ஒரு பார்வை.
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய, எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு சிறந்த வழியாக கருதப்படுகிறது. சமபங்கு நிதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து பொருத்தமான நிதிகளை தேர்வு செய்து, மாதாந்திரம் உள்பட குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக முதலீடு செய்து வரலாம்.
பங்கு முதலீடு விழிப்புணர்வு காரணமாக அண்மைக்காலமாக, எஸ்.ஐ.பி., முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், இடையே முதலீட்டை விலக்கி கொண்டு வெளியேறுவது மற்றும் நிதிகளை மாற்றிக்கொண்டே இருப்பது போன்ற பொதுவான தவறுகளை பலரும் செய்கின்றனர். எஸ்.ஐ.பி., முதலீடு மூலம் கிடைக்க கூடிய பலனை பாதிக்கும் என்பதால் இவை பற்றி முதலீட்டாளர்கள் சரியாக அறிந்திருப்பது அவசியம்.
நிறுத்தம் ஏன்?
சரியான நிதிகளை தேர்வு செய்த பிறகு, இலக்குகளை அடையும் வரை முதலீட்டை தொடர்வதே ஏற்ற வழி என்றாலும், பலரும் பாதியில் முதலீட்டை நிறுத்துவதை அறிய முடிகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, சந்தையின் சரிவு அல்லது இறங்குமுகத்தின் போது ஏற்படும் அச்சம் அமைகிறது. மேலும் இழப்பை தவிர்க்கும் எண்ணத்தில் முதலீட்டை நிறுத்தி விடுகின்றனர்.
ஆனால் ஏற்ற இறக்கங்களை மீறி, பலன் பெறுவதற்கான வழி தான் சீரான முதலீடு என்பதை மறந்துவிடுகின்றனர். உண்மையில், சந்தை இறங்கு முகத்தின் போதே, குறைந்த விலையில் அதிக பண்ட்களை வாங்க முடியும் என்கின்றனர்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது, முதலீட்டை நிறுத்தாமல் தொடர்வதே ஏற்றது என வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால், சரிவு தரும் அச்சம் தவிர, கே.ஒய்.சி., சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத வருமான சிக்கல்கள் போன்றவற்றாலும் முதலீட்டை நிறுத்தும் நிலை உண்டாவதாக கருதப்படுகிறது.
நிதிகள் தேர்வு
எனினும், முதலீட்டை தொடர்வதே பலன் பெறுவதற்கான சிறந்த வழி. வாய்ப்பு உள்ளவர்கள், சந்தை சரிவுக்கு உள்ளாகும் போது, முதலீட்டை அதிகமாக்குவதும் ஏற்ற உத்தியாக அமையும் என வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதே போலவே தேர்வு செய்த நிதிகளையும் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் தவறும் பலரால் செய்யப்படுவதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் பொருத்தமான நிதியை தேர்வு செய்வதும், அதன் செயல்பாடுகளை கவனித்து வருவதும் அவசியம்.
எதிர்பார்த்த பலனை அளிக்காத நிதியில் இருந்து வெளியேறி வேறு நல்ல நிதிக்கு மாறுவது தேவை என நினைக்கலாம். இந்த முடிவு, சரியான காரணங்கள் அடிப்படையில் கவனமான தேர்வாக அமைய வேண்டும். மாறாக, எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அடிக்கடி நிதிகளை மாற்றிக்கொண்டிருப்பது பாதகமாகவே அமையும்.
ஒரு நிதியின் செயல்பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சரிவு அல்லது பின்னடைவு என்பது தற்காலிகமானதாகவும் இருக்கலாம். அடிப்படை சரியாக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக, சரியான மாற்று நிதியை நாடும் போது, மீண்டு வரும் காலத்தில் இருந்து வெளியேறுவதாக அமையும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் புதிதாக தேர்வு செய்யும் நிதி, சிறந்த செயல்பாட்டிற்கு பின் மந்தமான செயல்பாடு காலத்தை எதிர்கொள்ளலாம். அவசரகதியிலான மாற்றம் பாதிப்பை உண்டாக்கும். நிதி இலக்குகளுக்கு ஏற்ற நிதிகளை தேர்வு செய்து, அவற்றில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.