/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் :தங்கம், அஞ்சலக சேமிப்பு எது சிறந்த முதலீடு?
/
ஆயிரம் சந்தேகங்கள் :தங்கம், அஞ்சலக சேமிப்பு எது சிறந்த முதலீடு?
ஆயிரம் சந்தேகங்கள் :தங்கம், அஞ்சலக சேமிப்பு எது சிறந்த முதலீடு?
ஆயிரம் சந்தேகங்கள் :தங்கம், அஞ்சலக சேமிப்பு எது சிறந்த முதலீடு?
ADDED : செப் 09, 2024 01:53 AM

சிறந்த சேவை வழங்கும் மருத்துவ பாலிசி நிறுவனங்கள் சிலவற்றின் பெயர்களை சொல்லுங்களேன்?
எஸ்.லிங்க காமாட்சிநாதன், மதுரை.
ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பெயரை என்னால் பரிந்துரைக்க இயலாது. ஆனால், மருத்துவ பாலிசிகளை வாங்குவதற்கு முன்பு, என்னென்ன அம்சங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
முதலில் 'காப்பீட்டுத் தொகை.' ஓராண்டில், இன்ஷூரன்ஸ் நிறுவனம், மருத்துவ செலவுகளுக்காக உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கும் என்ற கணக்கு இது. உங்கள் தேவைக்கேற்ப இதை உயர்த்திக்கொள்வது மிகவும் அவசியம். உங்கள் குடும்பத்தாரையும் உள்ளடக்கும், 'பிளெக்சி பாலிசி'யா அது என்றும் பாருங்கள்.
ஒருசில நோய்களுக்கான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு 'காத்திருக்கும் காலம்' குறிப்பிடப்படும். அது எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று பாருங்கள். 'கிளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ' என்ற விகிதத்தை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து வெளியிடும். அதில், எந்த நிறுவனம், அதிகபட்சமாக, கிளெய்ம் செய்யப்படும் தொகையை, விரைந்து தருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அறை வாடகை எவ்வளவு வரை அனுமதிக்கப்படும், ஆக்சிஜன் உள்பட பல்வேறு மருத்துவ கருவிகள், வசதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரையறை என்னென்ன, நாடெங்கும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்தக் காப்பீடு ஏற்கப்படுமா என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.
பலரும் நானும் மருத்துவ பாலிசி வாங்கியிருக்கிறேன் என்று சொல்கின்றனர். ஏதேனும் அவசர சிகிச்சை என்று வரும்போது தான், மருத்துவமனையில், அந்தப் பாலிசியின் உண்மை முகம் தெரிகிறது. போதிய கவரேஜ் இல்லாமல் தவித்துப் போகின்றனர். இன்ஷூரன்ஸ் முகவர்கள் சொல்வதை முழுதும் நம்ப வேண்டாம். உங்கள் தரப்பில் கொஞ்சம் ஆய்வு செய்து முடிவெடுங்கள்.
எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்ய எண்ணியுள்ளேன். எங்கேயிருந்து துவங்குவது?
பி.சீனிவாச ராமானுஜம், கடலுார்.
நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்கே செல்லுங்கள். இன்று பெரும்பாலான வங்கிகள், மியூச்சுவல் பண்டு வினியோக பிரிவை வைத்துள்ளன. அவர்களிடம், கே.ஒய்.சி., செய்வதற்கான விபரங்களைக் கொடுத்து, உங்களுடைய இலக்குக்கு ஏற்பவும், செலுத்தக்கூடிய கால அளவுக்கு ஏற்பவும் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டத்தில் எஸ்.ஐ.பி., ஆரம்பியுங்கள்.
என்.எப்.ஓ. என்று சொல்லப்படும் புதிய பண்டுத் திட்டங்கள் வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக, நல்ல வருவாய் ஈட்டித் தரும் பண்டுத் திட்டம் எது என்று ஆய்வுசெய்து தெரிந்து கொண்டு, அதில் எஸ்.ஐ.பி., போடுங்கள். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளேனும் எஸ்.ஐ.பி., போட்டுவந்தால் தான் கணிசமான லாபம் கிடைக்கும்.
தங்கத்தை வாங்குவதா? அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதா? எது சிறப்பான சேமிப்பு, முதலீடாக இருக்கும்?
அருணா, மதுரை.
'சிறப்பான முதலீடு' என்பது வயது, வசதி, வாய்ப்பு, இலக்கு, காத்திருக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து, நபருக்கு நபர் மாறுபடக்கூடும். நீங்கள் எந்த இலக்கை மனத்தில் வைத்து முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை ஒட்டியே, தங்கமா, அஞ்சலக சேமிப்பா என்பதை முடிவு செய்ய முடியும்.
அஞ்சலகத் திட்டங்கள் என்பவை நிலையான, உறுதியான, மற்றவற்றைவிட ஓரளவுக்கு கூடுதலான வட்டி தரக்கூடிய பத்திரமான சேமிப்பு முறை. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை காரணமாக, பல நாடுகளின் மத்திய வங்கிகளே தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.
அதனால் அதன் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இரண்டில் ஒன்று ஏன் தேர்வு செய்கிறீர்கள்? இரண்டிலுமே பணம் போட்டு வையுங்களேன்.
நான் எங்கள் குடும்ப பழைய நகைகளை விற்று பெறும் தொகைக்கு, நகை கடையில் பிடித்தம் செய்யப்படும் ஜி.எஸ்.டி., போக வேறு ஏதேனும் வரி கட்ட வேண்டுமா? நகையை விற்பதன் வாயிலாக பெறும் தொகை, எனது ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படுமா? வரி விலக்கு பெற வழிவகை ஏதும் உள்ளதா?
செ.நாகராஜன், விருதுநகர்.
பழைய குடும்ப நகை என்று தாங்கள் சொல்வதால், இது மூன்றாண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதிக்கொள்கிறேன். இதை விற்பனை செய்தீர்கள் என்றால், நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தவேண்டும். அதாவது, 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி பிளஸ் கல்வி, மருத்துவ தீர்வை நான்கு சதவீதம் என மொத்தம் 20.80 சதவீத வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு, நீண்டகால மூலதன ஆதாய கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்த வழி.
எனக்கு வயது 43 ஆகிறது. இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. என் குழந்தையின் எதிர்கால சேமிப்பிற்கு நான் இன்ஷூரன்ஸ் போகலாமா? அல்லது வேறு ஏதாவது நம்பகமான முதலீடுகள் இருக்கிறதா?
கார்த்திக், விருதுநகர்.
இன்ஷூரன்ஸும் போடுங்கள். ஆனால், அது மட்டும் போதாது. கூடவே, அஞ்சலகத்தில் உங்கள் குழந்தை பெயரில் 'பப்ளிக் பிராவிடண்டு பண்டு' திட்டத்தில் பணம் போட்டு வாருங்கள். 15 ஆண்டுகளில், அந்தத் தொகை கணிசமாக உயரும். நல்ல மியூச்சுவல் பண்டு திட்டத்தில், தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்து வாருங்கள்.
உயர்கல்வி, வெளிநாட்டுக் கல்வி, திருமணம் என்று குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவைப்படும் பணத்தைப் பொறுத்து, இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கேற்ப சேமிக்கத் துவங்குங்கள்.
இன்றைக்கு இருக்கும் ஆறு சதவீத பணவீக்கத்தை அப்படியே வைத்துக்கொண்டால் கூட, எதிர்காலத்தில் உங்களுக்குத் தேவைப்படும் தொகை எவ்வளவு வரும் என்பதையும் கணக்கிட்டு, அதற்கேற்ப சேமியுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881