/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் :70 வயதுக்கு மேற்பட்டோருக்கான காப்பீடு எல்லா மருத்துவமனைகளிலும் பெறமுடியுமா?
/
ஆயிரம் சந்தேகங்கள் :70 வயதுக்கு மேற்பட்டோருக்கான காப்பீடு எல்லா மருத்துவமனைகளிலும் பெறமுடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள் :70 வயதுக்கு மேற்பட்டோருக்கான காப்பீடு எல்லா மருத்துவமனைகளிலும் பெறமுடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள் :70 வயதுக்கு மேற்பட்டோருக்கான காப்பீடு எல்லா மருத்துவமனைகளிலும் பெறமுடியுமா?
ADDED : செப் 16, 2024 01:49 AM

நான் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதை முழு நேர வேலையாக கொள்ளலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு முதல் தேவை? இதில் மாஸ்டர் ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? சரியான வழிகாட்டுதல்கள் தேவை.
எம்.எஸ்.கார்த்திகேயன், மின்னஞ்சல்.
பங்கு வர்த்தகத்தை ஒரு முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது தான், என் தாழ்மையான கருத்து. இன்றைக்கு இந்தத் தொழிலில் விபரம் தெரியாமல் ஏராளமானோர் இறங்கிவிட்டனர்.
சந்தையில் லாபம் ஈட்டுவோரைவிட, நஷ்டம் அடைபவரே அதிகம். பலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட பாதிப்படைகின்றனர். இது எச்சரிக்கை தான், முடிவு உங்களுடையது.
அப்படியே வர்த்தகத்தில் இறங்குவதாக இருந்தால், ஒரு விஷயத்தை உள்ளத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நஷ்டத்தை மட்டுமே எதிர்பாருங்கள்.
லாபம் வந்தால் அதிர்ஷ்டம். குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது முதல் தேவை. மாஸ்டர் ஆவது கிடக்கட்டும், சந்தையை புரிந்துகொள்ளவே ஐந்து ஆண்டுகள் ஆகும்.
என் வீடு, வங்கி டிபாசிட்டுகள் மற்றும் நகைகளை, என் காலத்துக்குப் பிறகு என் மகனும், மகளும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என் மகள், 'இப்போதே கொடு,' என்று பிடிவாதம் செய்கிறார். என் முடிவு போல நடந்திட, நான் உயில் எழுதி அதை பதிவு செய்து வைக்கலாமா? பிற்காலத்தில் சொத்துக்களை வாங்கிக்கொள்ள மகள் மறுத்தால் என்ன ஆகும்?
கே.முரளி, சென்னை
இவை உங்கள் சுய சம்பாத்தியம் என புரிந்துகொள்கிறேன். தாராளமாக உயில் எழுதி, பதிவுசெய்து, மகனுக்கும், மகளுக்கும் ஒரு பிரதி கொடுத்து வையுங்கள். உங்கள் கருத்துபோல் நீங்கள் நடந்துகொள்வது தான் சரி. யாருடைய அழுத்தத்துக்கும் இணங்க வேண்டாம். உங்கள் முடிவு சரியானது தான். வருங்காலத்தில் உங்கள் மகள் சொத்துக்களை வாங்கிக்கொள்ள மறுக்கமாட்டார். பணம், வீடு, நகைகள் ஆகியவற்றுக்கு, எத்தகைய பிடிவாதத்தையும் தளர்த்தும் வல்லமை உண்டு!
கணவரின் வயது 59; என் வயது 56. இருவரும் ஒரே விதமான பாலிசியில் ஐந்து ஆண்டுகள் பிரீமியத்தை முறையாகச் செலுத்தினோம். சமீபத்தில் அந்த பாலிசி முதிர்வடைந்து, முதிர்வுத் தொகையும் கணக்கில் வரவு ஆனது. ஆனால், எனக்கு கிடைத்த தொகையை விட, கணவருக்கு கிடைத்த தொகை 10,000 ரூபாய் குறைவாக வந்தது. வயது கூட ஆகும் போது, 'மார்ட்டாலிட்டி ரிஸ்க்' இருப்பதால் முதிர்வுத் தொகை குறைவாக உள்ளதாம். இது பற்றி பாலிசி எடுத்தபோது ஏஜென்ட் எந்த தகவலும் சொல்லவில்லை.
ஜெயலட்சுமி, கோவை
இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லும் காரணம் நியாயமானது தான். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அதை முன்னதாகவே உங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்பது தான் இதில் பிரச்னை. இதைப் பற்றி, அந்தக் குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வலை தளத்தில் உள்ள, வாடிக்கையாளர் குறைதீர் பகுதியில் புகார் அளிக்கலாம்.
'விபரங்களை தெரிந்துகொண்டு காப்பீடு எடுக்கவேண்டியது உங்கள் கடமை. எங்கள் முகவர் எல்லா விளக்கங்களும் கொடுத்துள்ளார்' என்று தான் உங்களுக்கு பதில் வரும். அந்த குறிப்பிட்ட ஏஜென்ட், இந்த விபரங்களை சொல்லவில்லை என்பதை உங்களால் நிரூபிக்கவும் முடியாது.
எப்படி போனாலும், குற்றச்சாட்டு இ - மெயில்கள் முன்னும் பின்னும் போய்வருமே தவிர, உங்கள் கணவருக்கு கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்பில்லை.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக கருத வேண்டாம். எந்த நிதி சார்ந்த சேவையையோ, புராடக்டையோ வாங்கும்முன், அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டியது வாடிக்கையாளர் கடமை. ஏனெனில், இறுதியில் நஷ்டம் நமக்கு தான்.
அண்மையில் 70 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே? எல்லா மருத்துவமனை களிலும் இந்த வசதி கிடைக்குமா? எப்போது முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கும்?
கோ.மதுஸ்ரீ, சென்னை.
இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. 'ஆயுஷ்மான் பாரத்' வலைதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கென பிரத்யேக அட்டை ஒன்று வழங்கப்படும்.
அதைக் கொண்டு, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ வசதிகளை பெற முடியும். எல்லா மருத்துமனைகளும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்த மாதிரி தெரியவில்லை.
இந்த மூத்த குடிமக்கள் அட்டையை பெற்ற பின்னர், நீங்கள் போகும் மருத்துவமனையில் அது ஏற்கப்படுகிறதா என்று தெரிந்துகொண்டு, மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவகையில் இந்த முயற்சி பெரிய சாதனை. 70 வயதுக்கு மேற்பட்ட ஏழை, எளியவர்கள், பல நாடுகளில் மருத்துவ பாதுகாப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். அந்த நிலைமை இங்கே இருக்காது.
அதேசமயம், இந்த திட்டத்தில் சேரும் மருத்துவனைகள், கிளினிக்குகள், பரிசோதனை நிலையங்களுக்கு உரிய நேரத்தில், செலவினங்கள் திரும்பத் தரப்படுவதில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.
இந்தக் குறை களையப்படுமானால், மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டம் மிகப் பெரிய நிம்மதியை தரும்.
நான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்று விட்டேன். 2023- -24க்கான வரிக்கணக்கையும் தாக்கல் செய்து விட்டேன். இப்போது பழைய வரி முறைக்கு பதில் புதிய வரி முறைக்கு மாற்றம் செய்ய முடியுமா? பகுதி நே ர ஆலோசகர் ஆக பணி புரிகிறேன். வருமானத்தை நெறிப்படுத்த விரும்புகிறேன்.
டி.ஆர்.கோவிந்தராஜன், சென்னை
தாராளமாக மாற்றம் செய்துகொள்ள முடியும். சொல்லப் போனால், புதிய வரி முறை தான் இப்போது 'டிபால்ட்' வரிமுறை. பழைய வரிமுறைக்கு மாறவேண்டும் என்றால் தான் அதைக் குறிப்பிட வேண்டும். எந்த வரி முறை உங்களுக்கு லாபமாக இருக்கிறது என்பதை நீங்கள் தான் கணக்கு போட்டு பார்க்கவேண்டும்.
இன்று இணையத்தில் இரண்டு வரிமுறைகளுக்கான பல கால்குலேட்டர்கள் உள்ளன. வீட்டுக்கடன், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், இ.எல்.எஸ்.எஸ்., மியூச்சுவல் பண்டு முதலீடு போன்றவற்றை வைத்திருந்தால், அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, எது உங்களுக்கு லாபகரமாக இருக்கிறது என்பதை கணக்கிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph98410 53881