/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் :ஜூலை 31ல் வருமான வரி கட்டாதவர்கள் என்ன செய்வது?
/
ஆயிரம் சந்தேகங்கள் :ஜூலை 31ல் வருமான வரி கட்டாதவர்கள் என்ன செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் :ஜூலை 31ல் வருமான வரி கட்டாதவர்கள் என்ன செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் :ஜூலை 31ல் வருமான வரி கட்டாதவர்கள் என்ன செய்வது?
UPDATED : ஆக 05, 2024 08:50 PM
ADDED : ஆக 05, 2024 12:34 AM

நான் கூட்டுறவு வங்கி ஒன்றில் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன் . அதில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு, மூத்த குடிமக்களுக்கு வழக்கமாக கிடைக்கும் 50,000 ரூபாய் வருமான வரிச் சலுகை யோடு, கூடுதலாக வரிச்சலுகை உண்டா?
ஏ.ஜோதி சுப்பிரமணியம், தஞ்சை.
இல்லை. கிடைக்காது. கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்திருப்பதனால் கூடுதலாக வரிச் சலுகை ஏதும் இல்லை. மொத்தம் 50,000 ரூபாய் கழிவுக்குள் தான் கூட்டுறவு வங்கி முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டியும் அடங்கும்.
நீண்ட கால முதலீட்டுக்காக, அமெரிக்க 'நாஸ்டாக்' பங்குச் சந்தையில் உள்ள ஒரு கம்பெனி பங்கில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து கொண்டே முறையாக எப்படி அமெரிக்க பங்குச் சந்தை யில் பங்குகள் வாங்குவது? நீண்ட கால முதலீட்டுக்கு எப்படி வரி விதிக்கப்படும்?
உமாநாத், மதுரை.
ஒரு நிதியாண்டில், இந்தியர்களாகிய நாம், வெளிநாடுகளுக்கு 2.50 லட்சம் டாலர் வரை, பல்வேறு தேவைகளுக்காக பணம் அனுப்புவதற்கு அனுமதி இருக்கிறது. இந்தத் தொகைக்குள், நீங்கள் நாஸ்டாக் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
நம் நாட்டில் பல தனியார் புரோக்கிங் நிறுவனங்கள், சர்வதேச புரோக்கிங் நிறுவனங்களோடு கைகோத்துள்ளன. அந்தத் தளங்களில், 'ஓவர்சீஸ் டிரேடிங்' கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம். அல்லது, இந்தியாவிலேயே இருக்கும் வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்களில் டிரேடிங் கணக்கு ஆரம்பித்தும் முதலீடு செய்யலாம்.
அல்லது நம் நாட்டு மியூச்சுவல் பண்டுகளிலேயே சர்வதேச நாடுகளில் முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன. இதேபோல் இ.டி.எப்.,களும் உள்ளன. அவற்றில் முதலீடு செய்யலாம். இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகளைச் செய்யும், அவற்றை உங்கள் வருமான வரிப் படிவத்தில் 'வெளிநாட்டுச் சொத்துகளில் முதலீடு' என்ற பிரிவில் காண்பிக்க வேண்டும்.
மியூச்சுவல் பண்டின் வாயிலாக கிடைக்கும் வருமானம் ஏஜென்ட் கமிஷன், நுழைவுக் கட்டணம், பணவீக்கம், மூலதன வரி போன்றவற்றை கருத்தில் கொண்டால், எவ்வளவு துாரம் லாபகரமானதாக இருக்கும்?
கி.தொல்காப்பியன்,
கோயமுத்துார்.
நீங்கள் சொன்ன அத்தனை செலவுகளையும் உள்ளடக்கிய பின், லாபம் கையில் தங்கவேண்டுமானால், அந்த அளவுக்கு லாபம் ஈட்டக்கூடிய மியூச்சுவல் பண்டு வகைகள் இருக்க வேண்டும்.
பொதுத் துறை வங்கிகள், உள்கட்டுமானம், உற்பத்தி, மிட்கேப், ஸ்மால்கேப் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள், கடந்த மூன்றாண்டுகளில் 20 முதல் 40 சதவீத ரிட்டர்னைக் கொடுத்துள்ளன. எதிர்காலத்திலும் இதே அளவுக்கு ரிட்டர்ன் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது.
ஆனால், இவையெல்லாம் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் என்பது மட்டும் நிச்சயம். மேலும் 'மல்டி அசெட் அலகேஷன் பண்டுகள்' என்ற மியூச்சுவல் பண்டுத் திட்டம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருகிறது. இதில் எந்த நிறுவனத்தின் பண்டுத் திட்டம் லாபகரமானது என்று பார்த்து, நீங்கள் முதலீடு செய்யலாம்.
ஜூலை 31ல் வருமான வரி கட்டாதவர்கள் என்ன செய்வது? கட்டுவதற்கு கால அவகாசம் மீண்டும் தரப்படுமா?
பா.கு.ராஜன்,
திருவள்ளூர்.
இல்லை, வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. ஆனால், டிசம்பர் 31 வரை வரி கட்டலாம். அதற்கு 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ஐந்து லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளோர், ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் போதும்.
ஒருவேளை நீங்கள் வரி பாக்கி கட்டவேண்டியிருந்தால், வருமான வரிப் படிவம் தாக்கல் வரை, அதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சதவீத அபராதம் கட்ட வேண்டும்.
பழைய வரித் திட்டத்தில் உள்ளவர்களுக்கு இன்னொரு இழப்பும் உள்ளது. அவர்கள், பல்வேறு வரிக் கழிவுகளைக் கோர முடியாது. அதேபோல், மூலதன நஷ்டம் இருக்குமானால், அதன் பயனை எதிர்வரும் ஆண்டுகளுக்கு எடுத்துக்கொண்டு போகவும் முடியாது.
பட்ஜெட்டில் 'என்.பி.எஸ்., வாத்ஸல்யா' என்றொரு திட்டத்தைப் பற்றி நிதி அமைச்சர் தெரிவித்தாரே? அது என்ன?
வெ.குற்றாலநாதன்,
நெல்லை.
இப்போதுள்ள தேசிய பென்ஷன் திட்டம் பெரியவர்களுக்கானது. இந்த வாத்ஸல்யா திட்டம், குழந்தை பருவத்தில் இருந்தே துவங்கக்கூடியது. மிகச் சிறிய வயதில் இருந்தே, குழந்தையின் பெயரில், ஒரு என்.பி.எஸ்., கணக்கை ஆரம்பிக்கலாம்.
அதில் பெற்றோரோ, பாதுகாப்பாளரோ குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாய் என ஆண்டுக்கு
6,000 ரூபாய் பணம் போட்டு வரலாம்.
குழந்தைக்கு 18 வயது ஆகும்போது, அது வழக்கமான பெரியவர்களுக்கான என்.பி.எஸ்., கணக்காக ஆகிவிடும். மிகச் சின்ன வயதில் இருந்தே, அந்தக் குழந்தையின் ஓய்வுக்காலத்துக்காக
முதலீடு செய்வது துவங்கிவிடுவதால், அந்தப் பணம் பன்மடங்கு உயர்வது சர்வ நிச்சயம்.
இதில் இரண்டு மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெற்றோரோ, பாதுகாப்பாளரோ தான் என்.பி.எஸ்., வாத்ஸல்யா திட்டத்தில் பணம் போட முடியும்.
இதில் தாத்தா பாட்டி, பிற நெருங்கிய உறவினர்களும்
பணம் போடலாம் என்ற வசதி வேண்டும். இரண்டு, கல்விச் செலவுகளுக்காக நடுவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை எடுத்துக்கொள்வதற்கும், இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை,
'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014
என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881