/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: எடுத்த காப்பீடு பாலிசியிலிருந்து வெளியேற முடியுமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: எடுத்த காப்பீடு பாலிசியிலிருந்து வெளியேற முடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: எடுத்த காப்பீடு பாலிசியிலிருந்து வெளியேற முடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: எடுத்த காப்பீடு பாலிசியிலிருந்து வெளியேற முடியுமா?
UPDATED : மார் 10, 2025 08:01 AM
ADDED : மார் 03, 2025 07:02 AM

என் வயது 59. அண்மையில் ஓய்வு பெற்ற நான், இதுநாள் வரை சேமித்த பணத்தை வங்கிகளில் வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்தால், அதற்கு என்ன வரி கட்ட வேண்டியிருக்கும்? அதே தொகையை, கடன்பத்திரம் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்து, எஸ்.டபிள்யு.பி., முறையில் பணத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு என்ன வரி கட்ட வேண்டியிருக்கும்?
முரளிதரன், மின்னஞ்சல்.
வைப்பு நிதியில் இருந்து வட்டி மட்டுமே பெற்று வாழ நினைத்தீர்கள் என்றால், புதிய வரித் திட்டத்தில், எந்த வரியுமே கட்ட வேண்டியிருக்காது. உங்களுக்கு இன்னும் 60 வயது ஆகவில்லை.
அதனால், 50,000 ரூபாய் வரை வட்டிக்கு டி.டி.எஸ்., கிடையாது. 60 வயதுக்கு மேல் என்றால், ஒரு லட்சம் வரை வைப்பு நிதி வட்டிக்கு டி.டி.எஸ்., கிடையாது.
உங்கள் விஷயத்தில், 50,000 ரூபாய்க்கு மேல் வரும் வட்டிக்கு டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். அதை, வருமான வரி படிவத்தில் காண்பித்து, ரீபண்டு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை உங்கள் ஆண்டு வட்டி வருவாய் 12 லட்சத்துக்கு மேல் இருந்தால் தான், வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இரண்டாவது கேள்வி, மிகவும் நேர்த்தியானது. நல்லதொரு ஆடிட்டரை கலந்தாலோசிக்கவும். அவர் அதற்கு வழி சொல்லக்கூடும்.
எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து, மாதம் 85,000 ரூபாய் சம்பளம் வருகிறது. வீடு வாங்க திட்டமிடுகிறோம். பொதுத் துறை வங்கிகளில் எவ்வளவு லோன் தருவர்?
ஜெ. சட்டநாதன், திண்டுக்கல்.
மொத்த சம்பளத்தைப் போல், 30 மடங்கு, நிகர வருவாயைப் போன்று 36 மடங்கு என்று சொல்லப்படுவதுண்டு. இன்னொரு கணக்கு போடுவர். இருவரது நிகர வருவாயில் 50 சதவீதம் வரை இ.எம்.ஐ., கட்ட முடியும் என்று கணக்கு எடுத்துக்கொள்வர்.
அதாவது, உங்கள் விஷயத்தில் மாதாமாதம் 42,500 வரை, இ.எம்.ஐ., கட்ட முடியும் என்று கணக்கிடுவர். அதற்கு ஏற்ப, எத்தனை லட்சம் கடன் தர முடியும்; எத்தனை ஆண்டுகளுக்குத் தர முடியும் என்று முடிவு செய்வர்.
இதில் உங்கள் வயது, இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வீஸ் இருக்கிறது, வேறு கடன்கள் உள்ளனவா, உங்கள் கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பவற்றையும் பார்ப்பார்கள். நீங்கள் ஒரு எல்லை வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் இருவரது மொத்த மாதாந்திர வருவாயில் 40 சதவீதத்துக்கு மேல் இ.எம்.ஐ., போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நான் பொதுத் துறை வங்கியில் வாங்கிய கார் கடனில், இப்பொழுது மீதியிருக்கும் 30 தவணைகளை முழுதுமாக அடைக்க உள்ளேன். மொத்த கடன் தொகையில் எவ்வளவு குறையும்? இதேதான் வீட்டுக் கடனுக்குமா?
பி.முரளிதரன், கோவை.
வட்டி முழுதும் குறையும். 30 மாத தவணை மொத்தமும் ரத்தாகும். நீங்கள் கட்டுவது மொத்தமும் அசலில் தான் வரவு வைக்கப்படும். அப்படியானால், வட்டி பகுதியை கட்ட வேண்டாம். அது தான் நீங்கள் அடையும் லாபம்.
வீடு விஷயத்திலும் இது தான் நடைமுறை. இன்னொரு சந்தோஷம், கடனை குறித்த காலத்துக்கு முன்னதாகவே முடித்துவிடுவீர்கள். அடுத்த கடன் கேட்க தயார் ஆகலாம். அல்லது நிம்மதியாக, கடனில்லா பெருவாழ்வு வாழலாம்.
தங்க நகைகள் வாங்குவதற்கு பதிலாக, தங்க இ.டி.எப்., வாங்கினால் நல்லது; விற்பதும் எளிது என நீங்கள் சொல்வது நல்ல யோசனை தான். ஆனால், இதையும் விற்கப்போனால் கேப்பிடல் கெய்ன் 20 சதவீதம் வரையில் செலுத்த வேண்டியிருக்குமே? ஐ.டி. ரிட்டர்ன் செய்ய ஆடிட்டர்களிடம் அல்லவா போக வேண்டியிருக்கும்? உங்கள் விளக்கம்?
மனோகர், மைசூரு.
வரி கட்டாமல் எப்படி இருக்க முடியும்? சேதாரம், செய்கூலி, வாங்கும் விலை உள்ளிட்ட இம்சைகள் வேண்டாம் என்று தான் இ.டி.எப்., எனும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னேனே தவிர, அதில் மூலதன ஆதாய வரி இல்லை என்று சொல்லவில்லையே? அதேபோல், வெறும் சம்பளம், பென்ஷன், வைப்பு நிதி வட்டி உள்ளிட்டவை தவிர, வேறு முதலீடுகளில் இருந்து வருவாய் இருக்குமானால், ஆடிட்டர் உதவியை நாடித் தான் ஆகவேண்டும்.
இதுபோன்ற முதலீடுகளைக் காண்பித்து, எப்படி ஐ.டி.ஆர்., சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மெல்ல மெல்ல கற்றுக்கொள்ளலாம்.
என்னுடைய வங்கி மேலாளர் என்னை வற்புறுத்தி, இருவேறு காப்பீடுகளை எடுக்க வைத்துவிட்டார். பிரீமியம் கட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது. இதிலிருந்து வெளியே வரமுடியுமா? இதுவரை செலுத்திய பணம் என்ன ஆகும்?
ஸ்ரீவத்ஸ குமார்,
சென்னை.
நீங்கள் பாலிசி வாங்கி எத்தனை நாட்கள் ஆகியுள்ளன என்று பாருங்கள். இப்போது காப்பீடு பாலிசிக்கு 'பிரீ லுக்' காலகட்டம் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இருக்கிறது. உங்களிடம் தவறாக விபரம் சொல்லி, காப்பீடுத் திட்டம் விற்கப்பட்டு இருக்குமேயானால், அல்லது, அதிலுள்ள விதிமுறைகளைப் படித்துப் பார்த்தபோது, திருப்தி ஏற்படவில்லையானால், நீங்கள் பாலிசியை திருப்பிக் கொடுத்துவிடலாம்.
ஆனால், அதை இந்தக் குறிபிட்ட காலத்துக்குள் செய்ய வேண்டும். அதற்கு, எந்த காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து காப்பீடு வாங்கினீர்களோ, அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஏன் பாலிசியை கேன்சல் செய்ய விரும்புகிறீர்கள் என்று விளக்கம் சொல்ல வேண்டும்.
உடனே காப்பீடு நிறுவனம் உங்களோடு பேசி, தீர்வு காண முயற்சி செய்யும். ஒரு மாதத்துக்கு மேல் போய்விட்டால், இந்த பிரீ லுக் பீரியட் சலுகை கிடைக்காது. ஆனால், எதிர்காலத்தில் இந்த ஒரு மாத காலம் என்பது ஓராண்டாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய நிதித் துறை, காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசுவதாகத் தெரிகிறது.