வங்கதேசத்தினர் கைது நடைமுறையில் மாற்றம்; ஒரு மாதத்துக்குள் நாடு திருப்பி அனுப்ப உத்தரவு
வங்கதேசத்தினர் கைது நடைமுறையில் மாற்றம்; ஒரு மாதத்துக்குள் நாடு திருப்பி அனுப்ப உத்தரவு
UPDATED : ஜன 26, 2026 11:42 AM
ADDED : ஜன 26, 2026 11:36 AM

நமது நிருபர்
முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினரை கைது செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு, 30 நாட்களுக்குள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்துறையில் வேலை பெற வேண்டும் என்பதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர் அதிகளவில் ஊடுருவியுள்ளனர். மத்திய உளவு பிரிவு, மாநில போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் திருப்பூர் மாவட்டம் முழுதும், 200 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோர்ட் அளிக்கும் தண்டனை காலம் முடிவதற்குள், கைதானவர்களை அவர்களது தாய்நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை துவக்குவது வழக்கம். இதை விரைந்து முடிப்பதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவர்களிடம் அந்நாட்டு அடையாள ஆவணங்களை பெற்று, அதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், போலீசாரால் கைது செய்யப்படுபவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், நேரடியாக முகாமில் அடைக்கும் வகையில், தற்போது நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அதன்பின், அங்கிருந்து அவர்கள் மேற்கு வங்கம் வழியாக, அந்நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்த நடைமுறையை, தற்போது தமிழக போலீசார் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் நால்வரை கைது செய்த போலீசார், அவர்களை சேலம், ஆத்துாரில் உள்ள முகாமில், முதன் முறையாக புதிய நடைமுறைப்படி அடைத்தனர்.
போலீசார் கூறியதாவது: வங்கதேசத்தினரின் தண்டனைக்காலம் முடிந்த பின், நாடு கடத்தப்படுவது போன்ற அடுத்தடுத்து விஷயங்களை செய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம், கடந்தாண்டு இறுதியில் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. போலீசாரால் கைது செய்யப்படும் வங்கதேசத்தினரை மட்டும் முகாமில் தங்க வைத்து, ரயில் வாயிலாக மேற்கு வங்கம் அழைத்து சென்று, எல்லை பாதுகாப்பு படையினர் வாயிலாக, அந்நாட்டுக்கு அவர்களை அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து பணிகளும், 30 நாட்களுக்குள் முடித்து அந்நாட்டுக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பிடிபடுவோரின் கைரேகை முதல் அனைத்து ஆவணங்களும் சேகரிக்கப்படும். மீண்டும் அவர்கள் நம் நாட்டுக்குள் ஊடுருவி, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை பெற முயன்றால், எளிதாக கண்டுபிடித்து விடலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

