/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: மரணமடைந்தவரின் ஆதார், பான் கார்டை சரண்டர் செய்வது அவசியமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: மரணமடைந்தவரின் ஆதார், பான் கார்டை சரண்டர் செய்வது அவசியமா?
ஆயிரம் சந்தேகங்கள்: மரணமடைந்தவரின் ஆதார், பான் கார்டை சரண்டர் செய்வது அவசியமா?
ஆயிரம் சந்தேகங்கள்: மரணமடைந்தவரின் ஆதார், பான் கார்டை சரண்டர் செய்வது அவசியமா?
ADDED : ஆக 25, 2025 12:44 AM

அவசரத் தேவைக்கான பணம் என்பதை வங்கிக் கணக்கில் தான் வைத்துக்கொள்ள வேண்டுமா? நகையாக வைத்துக்கொள்ளக் கூடாதா?
பிருந்தா ஜெகன்னாதன், திருவள்ளூர்
நகையை உடனே அடகு வைத்து பணம் வாங்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், ஆபரணமாக வைத்துக்கொள்ளுங்கள். வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது விரைவாக கரைந்து போய்விடுவதாக பலர் தெரிவிக்கின்றனர். பலரும் அவசரத் தேவைக்கான பணத்தை, அவர்களுடைய வழக்கமான சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதே இதற்குக் காரணம்.
அதற்குப் பதில் இன்னொரு தனி சேமிப்புக் கணக்கு துவங்கி, ஆபத்துக் கால பணத்தை சேமித்துவிட்டு, அதை மறந்து போய்விடுவது உத்தமம். அப்படியே ஞாபகம் இருந்தாலும், அதைத் தொடக்கூடாது என்ற திட சித்தம் இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அந்தப் பணம், உண்மையான அவசர சூழல்களில் பயன்படுவதற்கு வசதியாக இருக்கும்.
மருத்துவ காப்பீடுகளின் மீது ஜி.எஸ்.டி. வரி நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறதே, டிசம்பர் வரைக்கும் பொறுத்திருந்து காப்பீடு பாலிசி வாங்கலாமா?
என்.ஸ்ரீதர், தாம்பரம்
பிரதமர், ஜி.எஸ்.டி., வரி விகிதம் திருத்தப்படும் என்று தான் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் நிலைக்குழுவும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகள் இருந்தால் போதும், 12 மற்றும் 28 சதவீத அடுக்குகள் நீக்கப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
காப்பீடு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி., எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவில் தான் தெரியும். மருத்துவக் காப்பீடு விஷயத்தில், ஜி.எஸ்.டி., முழுதும் நீக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.
ஆனால், 18 சதவீத ஜி.எஸ்.டி., உண்மையில் நீக்கப்பட்டாலும், அதன் முழுப்பலனை வாடிக்கையாளர்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவார்களா என்பது இன்னொரு கேள்வி.
ஏனெனில், வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் ஜி.எஸ்.டி., தொகையை அரசுக்கு செலுத்தும் போது, அவர்கள் 'இன்புட்டாக்ஸ் கிரெடிட்' பெற்றுக்கொள்கின்றனர். இதையே தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, வினியோகம் போன்ற செலவுகளை ஈடுகட்ட பயன்படுத்துவர்.
இப்போது ஜி.எஸ்.டி., முழுமையாக நீக்கப்பட்டால், மேலே கூறிய செலவுகள் நேரடியாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டியிருக்கும். அதனால், பிரீமியம் தொகை சிறிது உயரக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
'கத்திரிக்காய் விளைந்தால், கடைத்தெருவுக்குத் தான் வந்தாக வேண்டும்' என்பதுபோல், அறிவிப்பு வெளி வரும் வரை கொஞ்சம் காத்திருப்பது நலம்.
இறந்தவர்களின் 'ஆதார், பான்' கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டுமா? அப்படியானால் எத்தனை நாட்களுக்குள் யாருக்கு அனுப்ப வேண்டும்? சரண்டர் செய்யாவிட்டால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும்?
ரா.ரவீந்திரன், சென்னை
சரண்டர் செய்ய வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், நம்முடைய பாதுகாப்புக்காக இ-சேவை மையங்களில் போய் இறந்தவருடைய மரண சான்றிதழைக் காண்பித்து, அவரது ஆதாரை செயலற்றதாக்குவது நல்லது.
பான் விஷயத்தில், எந்த அலுவலகத்தில் இருந்து பான் எண் கொடுக்கப்பட்டதோ, அந்த அலுவலருக்குக் கடிதம் எழுதி, பான் அட்டையின் பிரதியை வைத்து, கொடுப்பது அவசியம்.
இறந்தவருடைய பான், ஆதாரை வைத்துக்கொண்டு, பல்வேறு முறையற்ற பரிவர்த் தனைகளையும் முறைகேடுகளையும் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மற்றபடி, பான், ஆதார் எண்கள் நீக்கப்படாது. மரணம் அடைந்துவிட்டால், அவை செயலற்றதாகிவிடும்.
ஒரு தனியார் வங்கியில், 7.20 சதவீத வட்டியில், எங்கள் அடுக்ககத்தின் கார்ப்பஸ் நிதியை முதலீடு செய்து வைத்திருக்கிறோம். இதைவிட அதிக வருவாய் தரக்கூடிய பாதுகாப்பான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா?
ஐ.ஆர். ஸ்ரீனிவாசுலு, கோவை
உங்கள் நோக்கம் நல்லது தான். கார்ப்பஸ் நிதிக்கு கூடுதல் வட்டி கிடைத்தால், அசோசியேஷனுக்காக நல்ல பல பணிகளை மேற்கொள்ளலாம் என்பது உண்மை தான். ஆனால், ஒரு விஷயம். இது பொதுப் பணம். அத்தனை அடுக்கக உரிமையாளர்களும் கொடுத்துள்ள தொகை. இதற்கு 7.20 சதவீத வட்டி கிடைப்பதே போதுமானது.
இங்கே வட்டியை விட, அசல் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் முதல் முன்னுரிமை. உங்கள் அசோசியேஷன் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஏகமனதாக சம்மதித்தால், கார்ப்பஸ் நிதியின் ஒரு பகுதியை, சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்யலாம். இன்னும் கொஞ்சம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
அதே சமயம், முதலீட்டுக்கும் 5 லட்சம் ரூபா ய் வரை பாதுகாப்பும் இருக்கும்.
மியூச்சுவல் பண்டில் உள்ள 'மொமென்டம் ஸ்ட்ராட்டஜி' பண்டு பற்றிய தெளிவான விளக்கம் தாருங்கள்.
ராம லட்சுமணன், கோவை
எந்தெந்த நிறுவனப் பங்குகள் வேகமாக வளர்கின்றனவோ, அவற்றைக் கண்டுபிடித்து, அவற்றில் முதலீடு செய்து, லாபம் ஈட்டுவதையே, மொமென்டம் பண்டுகள் செய்கின்றன. பல நிறுவனங்கள் அடுத்தடுத்த காலாண்டுகளில் தொடர்ச்சியாக வளர்ச்சியைக் காண்பிக்கும் என்ற நம்பிக்கையே இதன் பின்னணியில் இருக்கிறது.
பல மொமென்டம் பண்டுகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தான் துவங்கப்பட்டுள்ளன. அதனால், அவற்றின் வருவாய் ஈட்டும் திறனைக் கணிக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் பண்டுகள் தோராயமாக 17 - 18 சதவீதம் ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளன.
பங்குச் சந்தை வேகமாக வளரும் காலகட்டத்தில், இத்தகைய பண்டுகள் நல்ல வருவாயைத் தரலாம். சந்தை தள்ளாட்டத்துடன் இருக்கும்போதோ, சரிவில் இருக்கும்போதோ, இவை அதிக அளவில் வருவாயை ஈட்டுவதில்லை.
பல்வேறு பண்டுகளில் பணத்தைப் பிரித்துப் போடும்போது, இந்த வகை பண்டுகளிலும் ஒரு பகுதி தொகையைப் போட்டு வைக்கலாம். சர்வதேச போர்கள், அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பு அச்சுறுத்தல், ஒரு சில தொழில்துறைகளின் வளர்ச்சியில் தேக்கம் உள்ளிட்டவை அடுத்து வரும் காலாண்டுகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
அதனால், எது வேகமாக ஓடும் குதிரை என்பதைக் கண்டு பிடிப்பது, அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881