/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: மறைந்தவர் பி.பி.எப்., கணக்கை நாமினி தொடரலாமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: மறைந்தவர் பி.பி.எப்., கணக்கை நாமினி தொடரலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: மறைந்தவர் பி.பி.எப்., கணக்கை நாமினி தொடரலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: மறைந்தவர் பி.பி.எப்., கணக்கை நாமினி தொடரலாமா?
ADDED : அக் 20, 2025 12:04 AM

பிற நாடுகளை விட, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் இந்தியாவில் மட்டும் விலை அதிகமாக இருப்பது ஏன்?
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
தங்கம், வெள்ளி விஷயத்தில், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பது, விலையேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணம். அதில்லாமல் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, நாணய மாற்று மதிப்பில் உள்ள ஏற்ற, இறக்கம் ஆகியவையும் இதர காரணங்கள்.
பெட்ரோல், டீசல் விஷயத்தில், நாம் 80 சதவீதம் வரை வெளிநாட்டு கச்சா எண்ணெயை வாங்கித் தான் சுத்திகரித்து பயன்படுத்துகிறோம். ஒரு பக்கம் டாலர் மதிப்பு உயர்கிறது, மறுபக்கம் நம் ரூபாயின் மதிப்பு சரிகிறது. அதனால், கூடுதல் ரூபாய் கொடுத்து, கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைமை.
இத்தனைக்கும் நடுவில், நாம் ரஷ்யாவிடம் இருந்து பெரும்பகுதி சகாயமான விலைக்கு தான் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அதை காரணம் காட்டியே, அமெரிக்கா நம் மீது கடுமையான வரி விதித்துள்ளது. இதில்லாமல், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும், விலை உயர்வுக்கு காரணம்.
என் மனைவியின் பெயரில், 3 கோடி ரூபாய்க்கு பேங்க் லோன் பெற்று, வீடு வாங்கினேன். ஆரம்பம் முதல் அனைத்து பணமும் என் வருமானத்தால் மட்டும் செலுத்தியதற்கான ரசீதுகள் உள்ளன. ஆனால், எனக்குத் தெரியாமல் என் மனைவி வீட்டை விற்றுவிட்டார். எங்களுக்கிடையே விவாகரத்து எதுவும் இல்லை. சட்டப்படி பணம் பெற வழி என்ன ?
பி.கே. சுப்பிரமணிய ராஜா, ராஜபாளையம்
நல்ல வக்கீலை பாருங்கள். இது சட்ட சிக்கல் கொண்டதால், நிறைய விபரங்கள் தேவைப்படும். அவர்களை அணுகுவதே பயனளிக்கும்.
எனது சகோதரர் சமீபத்தில் மறைந்து விட்டார். அவர் வங்கியில் வைத்திருந்த பொது வருங்கால வைப்பு நிதியில், என்னை நாமினியாக பதிந்திருந்தார். நான் அந்தக் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி வரலாமா?
டி.எஸ். சதீஷ், குரோம்பேட்டை.
முடியாது. நீங்கள் உங்கள் சகோதரர் மறைந்த விபரத்தை வங்கிக்கு தெரிவித்து, அந்த பி.பி.எப்., கணக்கை மூட வேண்டும். அதில் சேமிக்கப்பட்ட பணத்தை பெறுவதற்கு, அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் வங்கி கோரும் வேறு ஆவணங்களோடு, படிவம் ஜி என்பதையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக நீங்கள் இன்னொரு பி.பி.எப்., கணக்கு துவங்கி, முதலீடு செய்து வரலாம்.
ஓய்வு கால வருமான திட்டத்தில் 'பையர்' என்று ஒன்றை பற்றி பலரும் பேசுகின்றனர். அப்படியென்றால் என்ன?
கார்த்திக் தியாகராஜன், முகலிவாக்கம்.
சின்ன வயதில் மிக விரைவாக பணம் சேர்த்து, விரைவாக ஓய்வு பெறுவதையே ஆங்கிலத்தில் 'பைனான்ஷியல் இன்டிபெண்டன்ஸ், ரிட்டயர் எர்லி' என்றும், அதன் சுருக்க குறியீடாக 'பையர்' என்றும் குறிப்பிடுகின்றனர். அதாவது, பெரும்பாலானோர் தங்களுக்கு விருப்பமற்ற வேலையை செய்கிறார்கள்.
இந்தக் கொடுமையில் இருந்து விடுதலை பெற்று, 40 வயதுக்கு மேல், தங்கள் சொந்த ஆர்வங்களில் ஈடுபடுவதற்கு, இந்த திட்டம் உதவும் என்றொரு எண்ணம் விதைக்கப்படுகிறது.
இன்னொரு வகையில், இளைய வயதில் சேமிக்க தயங்கும் இளைஞர்களை, 'விரைவில் ஓய்வு' எனும் உத்தியைக் காண்பித்து, சேமிக்க துாண்டும் உத்தியாகவும் இதை பார்க்கலாம். யதார்த்தத்தில், இந்திய சூழலில், அதுவும் கீழ் மத்தியதர, மத்தியதர வாழ்க்கை வாழும் எவருக்கும், இந்த கனவு நிறைவேறவே வாய்ப்பில்லை.
பலருக்கும் 35 வயதுக்கு மேல் தான் திருமணம், 40 வயதில் தான் குழந்தைப்பேறு எனும்போது, 70 வயதில் கூட ஓய்வு கிடைக்காத சூழல். மற்றபடி, சேமிப்பு மனநிலைக்கு ஊக்கமளிப்பதால், பையரை வரவேற்கலாம்.
திருமணத்துக்கு முன்பு வீடு வாங்கினேன். என் சகோதரியை, இணை கடனாளியாக காண்பித்திருந்தேன். இப்போது திருமணமாகி, சில ஆண்டுகள் ஆகியுள்ளன. என் மனைவியை இணை கடனாளி என்று பெயர் மாற்றம் செய்யமுடியுமா?
வை. கிறிஸ்டோபர், செங்கல்பட்டு .
சொத்து பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை பொறுத்தான் கடனாளி, இணை கடனாளி விபரங்களை தீர்மானம் செய்ய முடியும். உங்கள் பெயரும், உங்கள் சகோதரியின் பெயரும் தான் சொத்து பத்திரத்தில் இருக்கிறது என்றால், திருமணத்துக்கு பின்னரும் அவர் பெயரே கடன் ஆவணத்திலும் நீடிக்கும்.
மேலும், அவருக்கு அந்த சொத்தில் உரிமை உண்டு. உங்கள் மனைவி, இணை உரிமையாளராக உங்கள் சொத்து பத்திரத்தில் பதியப்படவில்லை என்றால், வீட்டுக் கடனில் அவரது பெயரை சேர்க்க முடியாது.
வெளிநாட்டு சுற்றுலா போவதற்கெல்லாம் 'ஹாலிடே லோன்' தருகிறார்களே? இதற்கெல்லாமா கடன் வாங்குவார்?
எஸ். திவ்யா, முகப்பேர்.
ஒரு பொருளை வாங்காமல் போய்விட்டோமே, அது விலை உயர்ந்துகொண்டே போகிறதே என்று பரபரப்பதை ஆங்கிலத்தில் 'பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்' என்பர்.
அதை 'போமோ' என்றும் சொல்வர். அதேபோல், 'ஒருமுறை தான் வாழ்கிறோம், அதை அனுபவிக்க வேண்டாமா' என்ற கருத்தை 'யு ஒன்லி லிவ் ஒன்ஸ்' எனப்படும் 'யோலோ' என்று அழைக்கின்றனர்.
அதேபோல், வீட்டுக் கடன் இ.எம்.ஐ., பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ செலவு என்று ஒரே பிக்கல் பிடுங்கல்.
இவற்றில் இருந்து
தற்காலிகமாக தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் கடன் வாங்கியாவது சுற்றுலா போய், தங்கள் மனதை திருப்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் தான் இத்தகைய ஹாலிடே லோன் வாங்குகின்றனர்.
இதெல்லாமே சரிதான். ஆனால், கையில் பணம் சேர்த்து வைத்து சுற்றுலா செல்வது தான் சரியாக இருக்கும்.
இல்லையெனில் ஹாலிடே லோன் உங்கள் கழுத்தை நெரிக்கக்கூடும். இது பாதுகாப்பற்ற கடன் வகையில் வருவதால், வட்டி அதிகம். 2 லட்சம் ரூபாய் லோன் வாங்கினால், இ.எம்.ஐ., கட்டி முடிப்பதற்குள் 3 லட்சம் வரை செலுத்தியிருப்பீர்கள்.
இதனால், இ.எம்.ஐ., தொகையை செலுத்த வேண்டுமே என்று ஒவ்வொரு மாதமும் உங்கள் அன்றாட செலவுகளை சுருக்கி கொள்வீர்கள். சுற்றுலா சென்றால், மனமகிழ்ச்சி தான் கிடைக்கும். அதனால் எந்தவிதமான சொத்தும் சேராது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை, ரசனை இருக்கிறது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881