/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால் சர்வீஸ் சார்ஜ் போடலாமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால் சர்வீஸ் சார்ஜ் போடலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால் சர்வீஸ் சார்ஜ் போடலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால் சர்வீஸ் சார்ஜ் போடலாமா?
ADDED : பிப் 24, 2025 12:53 AM

தங்க காசு அல்லது தங்க நகை, இரண்டில் எதில் முதலீடு செய்து குறுகிய காலம் வைத்து விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும்?
பி.சரவணன், வாட்ஸாப்.
ஆபரணத்தை வாங்குவது போல் சுலபமாக விற்பனை செய்ய முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். கடந்த வார கேள்வி ஒன்றுக்கு, நஷ்டமில்லாமல் நகையை விற்பனை செய்ய முடியவில்லை என்பதைத் தெரிவித்திருந்தேன்.
அதுவும் நீங்கள் குறுகிய காலம் மட்டும் வைத்திருந்து விற்பனை செய்ய யோசனை கேட்கிறீர்கள்.
குறுகிய காலம் என்பது எத்தனை மாதங்கள், ஆண்டுகள் என்று தாங்கள் கூறவில்லை. தங்க இ.டி.எப். தான் என் சாய்ஸ்.
தங்கத்தின் மதிப்பு உயர்வை ஓரளவுக்கு சரியாகப் பிரதிபலித்து, விலையேற்றத்தின் பயனை, வாடிக்கையாளர்களுக்குத் தரக்கூடிய முதலீட்டு வகை இது.
வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள தொடர் வைப்பு வகைகளுக்குப் பதிலாக, முதலீட்டுக்கு இழப்பு ஏற்படாமல் அதிக வருமானம் தரும் முதலீட்டு இனங்கள் ஏதேனும் உண்டா?
ஜெயவேல், காஞ்சிபுரம்.
முதலீட்டுக்கு இழப்பு ஏற்படக் கூடாது, அதிக வருமானம் தரவேண்டும் என இரண்டு கண்டிஷன் போடுகிறீர்கள். வங்கி, அஞ்சலக சேமிப்புகள் தான் இந்த கண்டிஷன்களுக்கு பொருந்தக்கூடியவை. அதாவது, அரசுத் துறை முதலீடுகள் தான் இந்த வரையறைகளை நிறைவு செய்ய முடியும்.
உங்களுக்கு அரசுத் துறை கடன் பத்திரங்களைப் பற்றி தெரியும் என்றால், அதில் நேரடியாக முதலீடு செய்ய இந்த சுட்டியைப் பயன்படுத்தலாம் : https://rbiretaildirect.org.in/. அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
கடந்த வாரம் ஒரு நகைக்கடையில் நகை வாங்கினேன். அங்கே என் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினேன். 30,000 ரூபாய் பில்லோடு 600 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போட்டு, 30,600 ரூபாய் எடுத்துக்கொண்டனர். அடுத்த கடையில் போய் துணி வாங்கினேன். அங்கே சர்வீஸ் சார்ஜ் எடுக்கவில்லை. ஏன் ஒரு கடையில் இப்படியும் மற்றொரு கடையில் அப்படியுமாக நடந்துகொள்கின்றனர்?
அஷோக், வாட்ஸாப்.
கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக, வங்கிகள் கடைக்காரர்களிடம் பரிவர்த்தனை மதிப்பில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வசூலிக்கின்றனர். இந்தத் தொகையை கடைக்காரர்கள் தான் செலுத்த வேண்டும். இதனை வாடிக்கையாளர் தலையில் கட்டக் கூடாது என்று தெளிவாக இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 உத்தரவு இருக்கிறது.
அதனால், அடுத்த முறை எந்த நிறுவனமேனும் சர்வீஸ் சார்ஜ் கேட்டால், ஆர்.பி.ஐ., உத்தரவு பற்றிச் சொல்லுங்கள். அந்தக் கட்டணத்தைச் செலுத்த மறுத்துவிடுங்கள். பொருள் கொடுக்க மாட்டேன் என்றால், வேறு கடைக்கு செல்லுங்கள். அப்படியே மறக்காமல், அவர்களுடைய வங்கி எதுவோ, அவர்களிடம் இந்த சர்வீஸ் கட்டணம் பற்றி புகார் அளியுங்கள்.
அந்த வங்கி, குறிப்பிட்ட கடையை பிளாக் லிஸ்ட் செய்யும். பூனாவிலும், ஹைதராபாதிலும் இதுபோன்ற 2 சதவீத சர்வீஸ் சார்ஜ் வழக்குகள் நீதிமன்றத்தை எட்டி வெற்றியும் பெற்றுள்ளன.
கூகுள் பே வழியாக ஒரே பெயர் கொண்ட மற்றொருவருக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டேன். பெறுவதற்கு வழி இருக்கா?
அன்பு திருமலை,
திருவண்ணாமலை.
கூகுள் பே செயலியில் எந்த பரிவர்த்தனையில் தவறு நேர்ந்ததோ, அதைத் திறந்து, அந்தப் பரிவர்த்தனை அருகே இருக்கும் 'டிஸ்பியூட்' அல்லது 'ரிப்போர்ட்' என்ற பொத்தானைத் தட்டி புகார் அளியுங்கள். தவறான நபருக்குப் பணம் அனுப்பிவிட்டேன் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இரண்டாவது, கூகுள் பேவின் இந்திய வாடிக்கையாளர் சேவை மைய எண் 1-800- 419-0 157 எண்ணை தொடர்புகொண்டு விபரம் தெரிவித்து, பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையைக் கேளுங்கள்.
நம் நாட்டில் டிஜிட்டல் பேமென்ட்டுகளை நிர்வகிக்கும் 'நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வின் வலைதளத்துக்குச் (https://www.npci.org.in/)சென்று புகார் அளியுங்கள்.
இதையெல்லாம் செய்வதற்கு முன்பு, யாருக்கு பணத்தை தவறாக அனுப்பினீர்களோ, அவரையே அழைத்து, விபரம் சொல்லி, பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லுங்கள். அந்தப் பக்கம் நேர்மைக்கும் நீதிக்கும் கட்டுப்பட்டவர் இருந்தால், பணம் உடனே திரும்பி விடும்.
பங்குச் சந்தை, சரிவைக் கண்டு வரும் நிலையில், எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
சோ.ராமு, செம்பட்டி,
திண்டுக்கல்.
முதலில் எஸ்.ஐ.பி.,யை நிறுத்த வேண்டாம். நிறைய பேர் நஷ்டம் என்று கருதி நிறுத்தி விடுகின்றனர். கீழே இறங்கும் போதுதான் கூடுதல் முதலீடு செய்து, அதிக யூனிட்களை வாங்கி சேமிக்க வேண்டும்.
இரண்டு, இப்போதைக்கு புதிதாக மிட்கேப், ஸ்மால் கேப் பண்டு எஸ்.ஐ.பி.க்களை ஆரம்பிக்க வேண்டாம். அமெரிக்க அரசின் நடவடிக்கை கள் உலக அளவில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளால் தான் சந்தையில் இறங்குமுகம். ஏப்ரல் மாதம் வரை காத்திருங்கள்.
இந்திய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவரும். எந்தெந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பது தெரிந்துவிடும். அதேபோல், பணவீக்கம் எப்படி இருக்கிறது என்பதும், ரூபாயின் மதிப்பு சீராகிறதா என்பதை பார்த்தும் முடிவு செய்யலாம். மேலே உயர்ந்த சந்தை, கீழே இறங்குவதுபோல், கீழே விழுந்த சந்தை மேலே உயர்ந்துதான் ஆக வேண்டும். அச்சப்படாமல் காத்திருங்கள்.
என் மகள், 12.50 லட்சம் ஊதியம் வாங்குகிறார். எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
கே.ஜே.செல்வராஜ்,
நீலகிரி.
ஊதியம் வாங்குபவர் என்பதால், ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் உட்பட 12.75 லட்சம் வரை, புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்தாமல் இருக்க முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்லுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881

