/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: இரண்டாவது வீடு வாங்குவது இ.எம்.ஐ.., சுமையைை தவிர்க்குமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: இரண்டாவது வீடு வாங்குவது இ.எம்.ஐ.., சுமையைை தவிர்க்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: இரண்டாவது வீடு வாங்குவது இ.எம்.ஐ.., சுமையைை தவிர்க்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: இரண்டாவது வீடு வாங்குவது இ.எம்.ஐ.., சுமையைை தவிர்க்குமா?
ADDED : செப் 08, 2025 01:11 AM

சென்னை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியபோது, என் அண்ணன் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை; அண்ணியும், அம்மாவும் மட்டுமே வாரிசுதாரர்கள். இருவருக்கும் அரசாங்கத்தால் பணப்பலன்கள் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டன. பென்ஷன் மட்டும் அண்ணிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அம்மாவும் பெற வழி என்ன?
ர.ஜெயச்சந்திரன்,
கைவண்டூர், திருவள்ளூர்
அரசு ஊழியர் ஒருவர் பணியி ல் இருக்கும்போது மரணமடைந்தால், குடும்ப ஓய்வூதியம் பெரும்பாலும் முதலில் மனைவிக்கே வழங்கப்படும். குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவி உயிருடன் இருக்கும் வரை, தாய் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
ஆனால், மனைவி இறந்து விட்டாலோ, ஒருவேளை மறுமணம் புரிந்து கொண்டாலோ, அப்போது, தாய், 'டிபென்டண்ட் மதர்' என்ற முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறக்கூடிய உரிமை உண்டு. தற்போது அண்ணி உயிருடன் இருப்பதால், பென்ஷன் அவருக்கு மட்டுமே வழங் கப்படும். குடும்ப பென்ஷனை அம்மா கோர முடியாது.
என் வங்கி தொடர்பாக எல்லா பரிவர்த்தனைகளும் சரியான காலகட்டத்தில் செலுத்தி உள்ளேன். ஆனால், சிபில் தோராயமாக 700 முதல் 750 வரை தான் உள்ளது. சிபில் ஸ்கோரை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன?
சதிஷ்குமார், கோவை
பலரும் இந்த வரம்பில் தான் சிக்கிக் கொள்கின்றனர். மேலே உயரவே மாட்டேன் என்கிறது. பெரும்பாலும், 'கிரெடிட் யுட்டிலைசேஷன்' விகிதம் மற்றும் கடன் 'மிக்ஸ்' குறைவாக இருப்பதே பிரச்னை என்று நினைக்கிறேன்.
உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டில் 1 லட்சம் ரூபாய் வரை வரம்பு இருந்தால், அதில் நீங்கள் 30,000 ரூபாய் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், நிறைய பேர் 80,000 - 90,000 வரை பயன்படுத்துவர். அதாவது, அவர்கள் தங்கள் கடனை வரம்புக்குள் வைத்துக்கொள்ள தவறிவிட்டனர் என்று பொருள்.
அதேபோல், பாதுகாப்பான, பாதுகாப்பில்லாத என்று இரண்டு வகை கடன்களையும் வைத்திருக்க வேண்டும். அதாவது, நகைக்கடன், வீட்டுக்கடன் போன்ற பாதுகாப்பான கடன்கள், பர்சனல் லோன் போன்ற பாதுகாப்பில்லாத கடன்கள் இருக்க வேண்டும். இந்த கடன் கலவை சமச்சீராக இருக்குமானால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயரும்.
கிரெடிட் கார்டுக்கு மினிமம் பேலன்ஸ் மட்டுமே செலுத்துவது தவறு. கட்ட வேண்டிய முழு தொகையையும் செலுத்த வேண்டும். கிரெடிட் ஸ்கோர் என்பது உண்மையில் கம்ப சூத்திரம் மாதிரி தான் இருக்கிறது. மேலே சொன்னவற்றை முயன்று பாருங்கள்; பலன் கிடைக்கலாம்.
சமீபத்தில் டாலர் மதிப்பு இந்திய ரூபாயில் 88 என்ற அளவில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணம் என்ன? இதன் தாக்கம் எதில், எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?
அ.யாழினி பர்வதம், சென்னை
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருப்பது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றனர்.
டாலரின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை டாலர் தேவையை சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளன. இதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தான் உண்மை.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், மின்னணு, மருந்து பொருட்கள் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை உயர்வதால், உள்ளூரில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்.
வர்த்தக போர் முடிந்து, ரஷ்யா -- உக்ரைன், இஸ்ரேல் -- காசா போர்கள் முடிந்தால் தான் கொஞ்சம் நிம்மதி ஏற்படும். அது வரை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முடியாதோ என்ற அச்சம் தான், பல பொருளாதார அறிஞர்களிடம் இருக்கிறது.
இரண்டாவது பிளாட் வாங்க யோசனை உள்ளது. வாடகையை கொண்டு இ.எம்.ஐ.யை செலுத்திவிட முடியும் என்று என் மாமனார் தெரிவித்தார். செய்யலாமா? உங்கள் கருத்து என்ன?
மஞ்சுளா கோபிநாத், மின்னஞ்சல்
வரும் வாடகையை வைத்து இ.எம்.ஐ., கட்டும் காலம் 2010க்கு முன்பே முடிந்துவிட்டது. 1 கோடி ரூபாயில் வீடு வாங்கினால், அது ஈட்டும் மாத வாடகை 20,000 - 25,000 மேல் இல்லை. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 2 முதல் 3 சதவீத ரிட்டர்ன் மட்டுமே தரும். ஆனால், நீங்கள் செலுத்தக்கூடிய மாதாந்திர தவணைத் தொகையோ, இந்த வாடகையைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு இருக்கும்.
இன்னொரு பிரச்னை, வீட்டை வாங்கிய உடனே, வாடகைக்கு நபர் வருவர் என்று எதிர்பார்க்கவும் கூடாது. பல பிளாட்கள் மாதக்கணக்கில் காலியாக இருக்கின்றன. அந்த சமயத்தில் அந்த வீட்டுக்கான பராமரிப்பு செலவுக்காக மட்டுமே மாதம் 2,000 - 3,000 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
இரண்டாம் வீடு ஏதோ சொத்து போல தோன்றலாம். கூட்டிக் கழித்து பார்த்தால், அதனால் பெரிய லாபமில்லை. அதற்கு பதில் வீடு வாங்க வைத்துள்ள தொகையை, வேறு நல்ல இடத்தில் முதலீடு செய்தால், வீட்டு வாடகையை விட பன்மடங்கு லாபம் பெறுவது உறுதி.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881