sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்குமா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்குமா?

ஆயிரம் சந்தேகங்கள்: கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்குமா?

ஆயிரம் சந்தேகங்கள்: கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்குமா?


ADDED : நவ 24, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவரின் சிறுசேமிப்பு வங்கி கணக்கை வாடகைக்கு விட்டு அதன்மூலம் எந்த முதலீடும் செய்யாமல் வருமானம் வருவதாகவும், அதுபோல் கேரளா வின் வயநாடு பகுதியில் நுாற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. சிறுசேமிப்பு கணக்கை வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பது எப்படி? மேலும் இதுபோன்ற வங்கி கணக்கை அடகு வைத்த செயல்கள் தமிழகத்தில் நடந்துள்ளதா, அடகுவைத்து எப்படி வருமானம் வருகிறது என்பதை விளக்க முடியுமா?

- அப்துல் மாலிக் திண்டுக்கல்

இது ஏதோ ஏழை எளியவர்கள் செய்யும் தப்பு காரியம். இதையெல்லாம் விளக்கினால், எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடலாம்; வேண்டாம். இப்படியெல்லாம் நடக்கிறது, இதை செய்யக்கூடாது என்று வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றனவே தவிர, அவை முன்னுதாரணங்கள் அல்ல.

என் மகனின் மேற்படிப்புக்காக, குறைந்த முதலீட்டில் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைந்த லாபம் தரும் முதலீடு எது? மெய்நிகர் நாணயம் எனப்படும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பயனடையலாம் என்று ஒரு நிறுவனம் சொல்கிறதே, இது உண்மையா?

- செல்வி, தேனி

மெய்நிகர் நாணயங்கள் எப்போதும் லாபத்தை மட்டுமே ஈட்டும். அதுவும் விரைவாக ஈட்டும் என்ற நம்பிக்கையில் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். யதார்த்தம் அப்படி இல்லை.

உதாரணமாக, அக்டோபர் மாதத்தில், 1.20 லட்சம் டாலரை தொட்ட பிட்காயின், இப்போது 81,000 டாலருக்கு விழுந்துள்ளது. ஈத்தர் என்ற மற்றொரு மெய்நிகர் நாணயம், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் மட்டும், முதலீட்டாளர்கள், 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டை இழந்துள்ளனர்.

உங்களுக்கு இத்தகைய மலையளவு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் இருந்து, சரியான மெய்நிகர் நாணயங்கள் எவை என்பதை பற்றி போதிய ஞானமும் இருந்தால் களத்தில் குதியுங்கள்.

யாரோ சொன்னார் என்று எவரையும் நம்பி இறங்க வேண்டாம். நஷ்டம் ஏற்பட்டால், அந்த நிறுவனமோ, நபர்களோ உங்கள் முதலீட்டை திருப்பி தரப்போவதில்லை.

நான், 10 ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவதற்கு ஏற்ப முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். லார்ஜ் கேப் இ.டி.எப்., தங்க இ.டி.எப்., மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள் மற்றும் ப்ளெக்சி கேப் ஆகியவற்றில் முதலீடு செய்ய திட்டம். என் அணுகுமுறை சரியானதுதானா?

- தீபக் குமார், கரூர்



மிக நல்ல அணுகுமுறை. கையில் போதிய பணத்தை சேமித்துக்கொண்டு, அதன்பின் வீடு கட்டுவது கடன் என்ற பெருஞ்சுமையை குறைக்க உதவும். ஒரு சின்ன வழிமுறையை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் மாதாமாதம் 10,000 ரூபாய் சேமிக்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அதில், 25 சதவீதத்தை ப்ளெக்சிகேப், 20 சதவீதத்தை மல்டிகேப், 20 சதவீதத்தை லார்ஜ் அண்டு மிட்கேப், 20 சதவீதத்தை மிட்கேப், 15 சதவீதத்தை ஸ்மால் கேப் பண்டுகளிலோ, இ.டி.எப்.களிலோ முதலீடு செய்யுங்கள்.

அதே போல் ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி.' என்ற முறையில், 10 சதவீதம் அதிகப்படுத்தி கொண்டே வாருங்கள்.

அதாவது, இந்த ஆண்டு, மாதம் 10,000 முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு அதுவே 11,000 முதலீடு செய்ய வேண்டும். இப்படி செய்தால், அடுத்த 12 முதல் 14 ஆண்டுகளில் 1 கோடி ரூபாயை எட்ட முடியும்.

நீங்கள் எவ்வளவு தொகையில் வீடு கட்ட திட்டமிடுகிறீர்களோ, அதற்கேற்ப மாதாந்திர இ.எம்.ஐ.யை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். 10, 12 ஆண்டு களில் கணிசமான தொகை சேரும். அப்போது, வங்கியில் இருந்து வீட்டுக்கடன் வாங்க வேண்டும் என்றாலும், அதுவும் சிறிய தொகையாக தான் இருக்கும்.

அஞ்சலகத்தில் விபத்து காப்பீட்டிற்கு தனி கணக்கு, முதலீடுகளுக்கு தனி கணக்கு என்று குறைந்தபட்சம் 500 ரூபாயில் கணக்கு துவங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது சரியா? ஒரே கணக்கை உபயோகித்தால் என்ன பிரச்னை?

- ஜானகிராம், வாட்ஸாப்

காப்பீடும், முதலீடும் இருவேறு பிராடக்டுகள். அதற்கான விதிமுறைகளும், சலுகைகளும் வேறு மாதிரி இருக்கலாம். அதனால், இரண்டு தனி கணக்குகளை துவங்குமாறு கூறலாம். மேலும், அது ஓர் அமைதியான நிதானமான அரசுத்துறை. தனியார் துறைக்கான புதுமையாக்கம் எல்லாம் அங்கே விரைந்து நடைமுறைக்கு வராது. ஆனால், அஞ்சலகம் தரக்கூடிய வட்டியையும், பாதுகாப்பையும் வேறு எவராலும் தரமுடியாது. கொஞ்சம் இம்சைகளை சகித்துக்கொண்டு, நல்லவற்றை எடுத்து கொள்ளுங்களேன்.

மூத்த குடிமக்களுக்கு ஒரு சில வங்கிகள் கால் சதவீதம் கூடுதல் வட்டி தருகின்றன. ஒரு சில வங்கிகள் அரை சதவீதம் தருகின்றன. இவற்றில் எது சரியானது? சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியில் தனிச்சலுகை உண்டா?

- ராமன், கோவை

இது, அந்தந்த வங்கிகளின் நிதித்தேவைகளை ஒட்டி எடுக்கப்படும் முடிவு. ஒரு குறிப்பிட்ட வங்கியில் ஏராளமான தனிநபர்களும், நிறுவனங்களும் கடன் கேட்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த தொகைக்கு இணையாக அவர்களிடம் போதிய பண இருப்பு இருக்க வேண்டும். பல சமயங்களில் இருக்காது.

அப்போது தான் வைப்புநிதி சேகரிப்பில் அந்த வங்கி கூடுதல் கவனம் செலுத்தும். அதிக வட்டி கொடுத்து, கூடுதல் நிதி சேகரிக்கும். இதனால், அவர்களுக்கு நஷ்டமில்லை. 'காஸ்ட் ஆப் பாரோயிங்' என்ற 'கடன் வாங்குவதற்கான செலவு' என்பது வைப்புநிதி சேகரிப்பில் தான் குறைவு. நீங்கள் பார்க்க வேண்டியது, அந்த வங்கி தரமானதுதானா என்பதை மட்டுமே.

ஒரு சில பொதுத்துறை வங்கிகள், மிக மூத்த குடிமக்களுக்கு கால் சதவீதம் வரை கூடுதல் வட்டி தருகின்றன. அதே சமயம், அவை ஓராண்டுக்கான வட்டி விகிதமல்ல, 400 முதல் 500 நாட்கள் வரையான காலகட்டத்துக்கு வழங்கப்படுகின்றன.

வாசகர்களே,

நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us