sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடப்பதை மாற்ற முடியாதா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடப்பதை மாற்ற முடியாதா?

ஆயிரம் சந்தேகங்கள்: அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடப்பதை மாற்ற முடியாதா?

ஆயிரம் சந்தேகங்கள்: அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடப்பதை மாற்ற முடியாதா?


ADDED : டிச 09, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 09, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் கேள்விக்கு தாங்கள் அளித்த பதில்படி, பார்லி மென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்க மசோதா நிறைவேறியுள்ளதை அறிந்தேன். இது நடைமுறைக்கு எப்போது வரும்?


சுப்ரமணியன், விருதுநகர்

கடந்த வாரம் தானே லோக்சபாவில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இனி அது ராஜ்யசபாவிலும் ஏற்கப்பட்டு, குடியரசு தலைவர் கையெழுத்துக்குப் போகும். அதன்பின் அரசிதழில் வெளியிடப்படும். பின்னர் தான் நடைமுறைக்கு வரும்.

ஒவ்வொரு வங்கியும், நான்கு நாமினிகளை இணைப்பதற்கு ஏற்ப, படிவங்களை புதிதாக அச்சடித்து வழங்க வேண்டும்.

அதற்கேற்ப பேங்கிங் மென்பொருளில், நாமினிகளைச் சேர்ப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்ய வேண்டும். அது 'சைமன்டேனியஸா, சக்சஸிவ்வா' என்பதையும் குறிப்பிடுவதற்கு வசதி செய்ய வேண்டும்.

அதற்குள், இந்த வங்கித் துறை திருத்தங்களில் யாராவது குற்றங்குறை கண்டுபிடித்து, அதை எதிர்த்து நீதிமன்றங்களை நாடி வழக்கு தொடுக்காமல் இருக்க வேண்டும். என்ன விரைவாக நடந்தாலும், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களேனும் ஆகும்.

புதிய சட்டப்படி, நான்கு பேரை நாமினிகளாக நியமிக்கும்பட்சத்தில், அதில் பங்கு சதவீதம் என்று வரும்போது, முதலாவது நாமினி இறந்தால், அவரது பங்கு, பிறருக்கு பகிரப்படுமா இல்லை; வங்கியே வைத்துக்கொள்ளுமா?


நா.பாண்டிதுரைராஜ், மதுரை

சட்டம் முழுமை பெற்று அரசிதழில் வெளியாகட்டும். அதன் பின்னர், இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கொஞ்சம் பொறுமை காக்கவும்.

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களின் வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடப்பதை மாற்ற முடியாதா?


அ.யாழினி பர்வதம், சென்னை

தாராளமாக மாற்ற முடியும். அதனால் என்ன பயன் என்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைத்தால் போதும். பற்பல ஆண்டுகளாக, பல நாடுகளின் ரிசர்வ் கரன்சியாகவும் டிரேடிங் கரன்சியாகவும் டாலர் தான் இருக்கிறது. அதனால், வணிகம் மிகவும் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஐ.டி., சேவைகளின் ஏற்றுமதியில் பெரிய லாபத்தை நம் நாடு பெற்று வருகிறது. அதற்கு காரணம் டாலர் தான்.

டாலருக்கு மாற்றாக, இப்போது டொனால்டு டிரம்ப் வெகுண்டெழுந்திருக்கும் 'பிரிக்ஸ்' போன்ற கரன்சி ஒன்றுக்கு மாறினால், இதே அளவுக்கு லாபமான வர்த்தகம் நடைபெறுமா? வாய்ப்பில்லை.

பிரேசில் அதிபர் லுாலா தான் இந்த 'பிரிக்ஸ்' தீயைக் கொளுத்திப் போட்டார். அதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பது புத்திசாலித்தனம்.

தற்போது என் வசம் உள்ள தொகையை, ஒரு வங்கியில் வைப்புத் தொகையாக 560 நாட்களுக்கு முதலீடு செய்தால், 8.75 சதவீத வட்டி கால இறுதியில் கிடைக்கும். என் மியூச்சுவல் பண்டு ஆலோசகர், இப்பணத்தை பண்டில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15 சதவீதம் வருவாய் கிடைக்கும் என்று சொல்கிறார். இவ்விஷயத்தில் நான் செய்ய வேண்டியது என்ன?


கா.ராஜகோபால், கோவை

எல்லா ஆண்டுகளிலும், எல்லா பண்டுத் திட்டங்களும் 15 சதவீதம் வருவாய் ஈட்டித் தரும் என்று சொல்வதற்கில்லை. அதுவும் வரும் ஆண்டில் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. எண்ணற்ற அநித்தியங்கள் கண்ணெதிரே தெரிகின்றன.

அதனால், மியூச்சுவல் பண்டு களில், தங்கத்தில், வைப்பு நிதித் திட்டங்களில் என்று கொஞ்சம் பரவலாக பணத்தை முதலீடு செய்யுங்கள். ஒன்று அடிவாங்கினாலும், இன்னொன்று காப்பாற்றும்.

என் கணவர் ஓய்வு பெறுவதன் வாயிலாக கிடைக்கும் தொகையை, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி, வாடகைக்கு விடலாமா? அல்லது வங்கி, தபால் அலுவலகம் போன்றவற்றில் டிபாசிட் செய்யலாமா? அவருக்கு பென்ஷன் கிடையாது.


திருமதி.குமரன், சென்னை

உங்களிடம் ஏற்கனவே போதுமான சேமிப்பும், கையிருப்பும் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு, உங்கள் இருவருக்குமான மாதாந்திர செலவுகளுக்கு போதுமான தொகை வருகிறது என்றால், வீடு வாங்கி, வாடகைக்கு விடுங்கள். இல்லையெனில், அஞ்சலகத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

இப்போது, 8.20 சதவீதம் வட்டி கிடைக்கிறது. பாதுகாப்பான முதலீட்டுக்குக் கிடைக்கும் அதிகபட்ச வட்டி இதுதான். ஒவ்வொரு காலாண்டு முடியும்போதும், வட்டித் தொகை உங்கள் அஞ்சலக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வங்கியில் வைப்பு நிதிக்கு, மூத்த குடிமகனுக்கு 8 சதவீதமும் மற்றவர்களுக்கு 7.5 சதவீதமும் வழங்குகின்றனர். மூத்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் 0.5 சதவீத வட்டி யார் வழங்குகின்றனர்? அரசா? வங்கியா?


மா.பெ.குருசாமி,

ஸ்ரீவில்லிபுத்துார்

வங்கி தான் வழங்குகிறது. வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது, கணிசமான தொகை மூத்த குடிமக்களுக்கு கிடைக்கிறது. அதை அவர்கள் தங்கள் அந்திம கால வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ள விரும்புவர். பாதுகாப்பும் வேண்டும்; கூடுதல் வட்டியும் வேண்டும்.

அதனால், வங்கிகள் கூடுதல் வட்டி கொடுத்து, மூத்த குடிமக்கள் சேமிப்புகளை ஈர்க்கின்றன. வங்கிக்கு இது கூடுதல் சுமை அல்ல. அவர்களுடைய 'காஸ்ட் ஆப் பாரோயிங்' குறைவாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்களுக்கு, சற்றே கூடுதல் வட்டி கொடுக்க முடிகிறது.

என் தோழியின் மகனுக்கு, ஐ.டி., துறையில் கடந்த ஆண்டு வேலை இழப்பு ஏற்பட்டது. வேறு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். தனியார் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக 15 லட்சம் பர்சனல் லோன் பெற்று, இ.எம்.ஐ., கட்டி வருகிறார். தற்போது நிதி நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது. இ.எம்.ஐ., கட்ட முடியவில்லை. கடனை அடைக்க தள்ளுபடி கோர முடியுமா? சட்ட ரீதியான உதவி கிடைக்குமா? வேறு வாய்ப்பு உள்ளதா?


க.நாக நந்தினி,

ஸ்ரீவில்லிபுத்துார்

மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, நிலைமையை விளக்கிச் சொல்லி, மூன்று அல்லது ஆறு மாதங்கள் 'மாரடோரியம்' கேட்பது. அதாவது, இ.எம்.ஐ.,யை ஒத்திப் போடுவது. இரண்டு, மாதாந்திர தவணையை மாற்றியமைத்து, குறைத்துக்கொள்வது. மூன்றாவது, ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, 'ஒன் டைம் செட்டில்மென்ட்' கேட்பது.

இதில் தான் வட்டி, வட்டிக்கு வட்டி, அபராதம் உள்ளிட்டவற்றைத் தள்ளுபடி செய்யமுடியுமா என்று கேட்க முடியும். அசலை ஒன்றும் செய்ய முடியாது. கட்டித் தான் ஆகவேண்டும். இவை மூன்றுமே, அந்தத் தனியார் வங்கி, வாடிக்கையாளருக்குச் செய்து தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. கோரிக்கை தான் வைக்க முடியும். கேட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.






      Dinamalar
      Follow us