/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: சரியான 'பண்ட்'டை எப்படி கண்டுபிடிப்பது?
/
ஆயிரம் சந்தேகங்கள்: சரியான 'பண்ட்'டை எப்படி கண்டுபிடிப்பது?
ஆயிரம் சந்தேகங்கள்: சரியான 'பண்ட்'டை எப்படி கண்டுபிடிப்பது?
ஆயிரம் சந்தேகங்கள்: சரியான 'பண்ட்'டை எப்படி கண்டுபிடிப்பது?
ADDED : செப் 02, 2024 01:24 AM

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ததில், இ- - சான்று மட்டும் உடனே கிடைத்தது. வரிபாக்கி எதுவுமில்லை என்ற தகவல் கிடைக்க, தனியே மெயில் அனுப்ப வேண்டுமா?
என்.சம்பத், சென்னை.
வருமான வரி படிவத்தை சமர்ப்பித்தால் தானே இ---சான்று கிடைக்கும்? அந்தப் படிவத்திலேயே வரிபாக்கி எதுவும் இல்லை என்பது தெரிந்திருக்குமே? அல்லது ரீபண்டு தொகை இருக்குமானால், அந்தத் தொகை பற்றிய விபரமும் குறிப்பிடப்பட்டு இருக்குமே? இனிமேல் ரீபண்டு இருந்தால், அந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும். இல்லையெனில், நீங்கள் பாக்கியில்லாமல் வரி செலுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றேன். ஆனால், எனது 'பிராவிடன்ட் பண்டு' கணக்கில் உள்ள எனது சேமிப்பை இன்று வரை எடுக்கவில்லை. இதற்கான வட்டித் தொகை கடந்த 2021--22 மற்றும் 2022--23 ஆண்டுகளுக்கு கிடைத்தது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வட்டி கிடைக்கும்? இந்த வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? ஆம் எனில் வரி எவ்வளவு செலுத்த வேண்டும்?
ஸ்ரீதர் ராஜகோபாலன், சென்னை.
நீங்கள் எந்த வயதில் ஓய்வு பெற்றீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. தாங்கள் 58 வயதில் ஓய்வு பெற்றதாகக் கருதிக்கொள்கிறேன். அதன்பிறகு பி.எப்.பில் தொடர்ச்சியாக உங்கள் பங்களிப்பு இருக்காது. இப்படி 36 மாதங்கள் வரை பங்களிப்பு இல்லை எனில், அது டார்மென்ட் அக்கவுன்ட் ஆகிவிடும்.
இந்த மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு வட்டி கிடைக்கும். ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு வட்டி பெற்றிருக்கிறீர்கள். இன்னும் ஓராண்டுக்கு வட்டி கிடைக்கும். அந்த வட்டிக்கு வரி கிடையாது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், பண்டு திட்டங்களும் ஏராளமான உள்ளனவே? எப்படி சரியான பண்ட்டை தேடி முதலீடு செய்வது?
ஆண்டாள் ஸ்ரீராமன், சென்னை.
மியூச்சுவல் பண்டுகளைப் பற்றி கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள். இதில், எந்த 'ஷார்ட்கட்' வழிமுறையும் கிடையாது. முதலில் கடந்த பத்து ஆண்டுகளாக, குறிப்பிட்ட பண்டு திட்டம் சீராக வருவாய் ஈட்டித் தந்திருக்கிறதா, குறிப்பாக பங்குச் சந்தை சரிந்திருந்த காலத்திலும், அந்த பண்டு திட்டம் வருவாய் ஈட்டியிருக்கிறதா என்று பாருங்கள்.
அந்த பண்டு, எந்த குறியீட்டு டன் ஒப்பிடப்படுகிறதோ, அந்தக் குறியீட்டை விட தொடர்ச்சியாக நல்ல வருவாயை ஈட்டியிருக்கிறதா என்று பாருங்கள்.
அத்துடன் அந்த பண்டு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது, மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் ஒளிந்திருக்கின்றனவா என்றும் பாருங்கள். இன்னும் 'ஷார்ப் ரேஷியோ, சார்டினோ ரேஷியோ, இன்பர்மேஷன் ரேஷியோ' உள்ளிட்ட பல்வேறு விகிதங்கள் உள்ளன. அவற்றையும் கவனியுங்கள்.
கூடவே, பண்டு திட்டத்தை நிர்வகிக்கும் மேலாளருடைய தகுதி என்ன, எத்தனை ஆண்டுகளாக, எவ்வளவு வெற்றிகரமாக அவர் வருவாய் ஈட்டித் தந்திருக்கிறார் என்பதையும் பாருங்கள். பல பேர் பல ஆலோசனைகளை சொல்வர்.
மேலே சொன்ன அத்தனை அம்சங்களும், விகிதங்களும் இன்று எல்லோருக்கும் படிக்கக் கிடைக்கின்றன. உங்கள் பணம் நல்லபடியாக வளர வேண்டு மென்றால், நீங்கள்தான் உழைத்து, சரியானதைக் கண்டுபிடித்து முதலீடு செய்ய வேண்டும்.
தங்க முதலீட்டுப் பத்திரத்தின் அடுத்த தவணை எப்போது வரும்?
கே.கண்ணன், கும்பகோணம்.
வருமா என்றே தெரியவில்லை. இதுவரை 67 தவணைகளில் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு நினைத்துப் பார்த்திராத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதுவரை நான்கு தவணை தங்கப் பத்திரங்கள் முதிர்வு அடைந்துள்ளன.
முதல் பத்திர வெளியீட்டின் போது, தங்கத்தின் விலை கிராம் ஒன்று 2,684ஆக இருந்தது. சமீபத்தில் அந்தப் பத்திரம் முதிர்வடைந்தபோது, தங்கம் கிராம் ஒன்று 6,132க்கு விற்பனை ஆயிற்று. அதாவது, முதலீடு கிட்டத்தட்ட 120 சதவீதம் உயர்ந்து விட்டது.
இதில்லாமல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்கப்பட்ட 2.50 சதவீத வட்டியையும் கணக்கிட்டால், முதலீடு செய்தவர்கள் 148 சதவீதம் அளவுக்கு லாபம் அடைந்துள்ளனர். அரசுத் தரப்புக்கோ படுநஷ்டம்.
இந்த முதல் தவணையின்போது, இந்த பத்திரங்களின் வாயிலாக அரசு திரட்டியது 245 கோடி ரூபாய். தற்போது முதிர்வின்போது, அது திருப்பித்தர வேண்டிய தொகை 610 கோடியாக உயர்ந்து விட்டது. வழக்கமான அரசுக் கடன் பத்திரங்களின் வாயிலாக மத்திய அரசு பணம் திரட்டியிருந்தால், மொத்த செலவு 400 கோடி ரூபாய்தான் ஆகியிருக்கும்.
மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையுமா, அந்நாட்டு அதிபர் தேர்தலில் என்ன முடிவு வரும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும். நிலைமை இப்படி இருப்பதால் கூடுதல் செலவு வைக்கக்கூடிய தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தை, நமது அரசு தொடருமா என்பது கேள்விக்குறியே.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881