/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போதைக்கு குறையாதா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போதைக்கு குறையாதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போதைக்கு குறையாதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போதைக்கு குறையாதா?
ADDED : ஜூன் 10, 2024 01:33 AM

மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., திட்டத்தில் செய்திருந்த முதலீட்டிலிருந்து, 'லாக் இன்' காலத்திற்கு பிறகு, சிறிதளவு பணம் எடுத்தேன். ஆனால், வட்டி மற்றும் முதலீடு இரண்டும் குறைந்துவிட்டன. எந்த அடிப்படையில் இவை குறைக்கப்படுகின்றன?
எஸ்.கணேஷ், சென்னை-.
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் நீங்கள் பணத்தை திரும்ப எடுக்கிறீர்கள் என்றால், அதில் உள்ள யூனிட்டுகளை, பண்டு நிறுவனத்துக்கே விற்பனை செய்கிறீர்கள் என்று அர்த்தம். 10 ரூபாய் உள்ள ஒரு யூனிட், இன்றைக்கு 20 ரூபாய் ஆகியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு யூனிட்டை விற்பனை செய்தால், அசல் முதலீட்டுத் தொகையில் 20 ரூபாய் குறையத்தானே செய்யும்? ஆனால், நீங்கள் ஒரு யூனிட் மட்டுமே வைத்திருக்கப் போவதில்லை. உங்கள் முதலீட்டுக்கு ஏற்ப, ஆயிரம், இரண்டாயிரம் யூனிட்கள் இருக்கும்தானே? அவை எல்லாம் தற்போதைய விலை உயர்வை பிரதிபலித்துக்கொண்டு இருக்குமே?
இன்னொரு விஷயம் நடந்திருக்கலாம். நீங்கள் யூனிட்டை விற்பனை செய்யப் போன நாள், ஜூன் 4 ஆக இருக்கலாம். அன்றைக்கு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள் அனைத்தும் சரிந்திருந்தன. பண்டுகளின் அடிப்படையாக இருக்கும் பங்குகளின் விலை சரிந்திருந்தால், அன்றைக்கு மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளின் என்.ஏ.வி.யும் குறைந்து தான் இருக்கும்.
சேமிப்பு, நகைக் கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றை பெற்று, ஒரு வீட்டை வாங்கியுள்ளேன். இப்போது எனக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதிலிருந்து கடனை அடைத்துவிட்டு, மிகுதி தொகையை வைப்புத் தொகையாக வைத்தால், மூலதன ஆதாய வரி கட்டவேண்டுமா?
இரா.சீனிவாசன், அரக்கோணம்; ஆர்.செந்தில், மதுரை.
சொந்தமான இடத்தை விற்றால், அதில் அபரிமிதமான லாபம் இருக்குமானால், அதற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். அபரிமிதமான லாபம் இல்லை, ஓரளவுக்கு லாபம் உண்டு என்றால், வரி கட்ட வேண்டாம். அப்போது, அந்தத் தொகையைக் கொண்டு, புது வீட்டுக்கான கடனை அடைத்துவிட்டு, மீதமிருந்தால், வங்கியில் வைப்பு நிதியில் போட்டுக்கொள்ளலாம்.
உங்கள் விஷயத்தில், நீங்கள் புது வீட்டை வாங்க இருப்பதால், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியிருக்காது. மூலதன ஆதாய வரிக்கான விதிமுறைகளின்படி, கிடைக்கும் அபரிமிதமான லாபத்தை, நீங்கள் இன்னொரு வீடு வாங்க பயன்படுத்த வேண்டும். அல்லது, அதற்கான வரி சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும். சொத்தை விற்று வரும் அபரிமிதமான லாபம் என்பது என்ன? அதற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா என்பதை, நல்லதொரு ஆடிட்டரிடம் ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள். அவர் 'இண்டக்சேஷன்' அட்டவணையை அடிப்படையாக வைத்து, வழிமுறை சொல்வார்.
இம்முறையும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லையே! வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு குறையாது இல்லையா?
இரா.கபிலன், கோவை.
குறைவது இருக்கட்டும், மாறாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. வங்கிகளில் கடன் கொடுக்க போதிய மூலதனம் இல்லை என்பதால், டிபாசிட்டுக்கான வட்டிகள் உயர்ந்துள்ளன. கூடுதல் வட்டி கொடுத்து நிதி திரட்டுவதால், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் சிறுகச் சிறுக உயர்கின்றன. பொதுத்துறை வங்கிகளே, 0.10 முதல் 0.30 சதவீதம் வரை வீட்டுக்கடனுக் கான வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டன.
அதாவது, கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்போது, 'ரெப்போ' விகிதம் பிளஸ் 2.50 சதவீதம் 'ஸ்ப்ரெட்' என்று சொல்லப்படும், வங்கிகளுக்கான செலவினங்களையும் சேர்த்தே கணக்கிடுவார்கள். இந்தச் செலவினங்கள் உயர்ந்துள்ளதால் தான், வட்டியை உயர்த்துகிறார்கள். அதிகமான வட்டி விகிதம், நீண்ட காலம் நீடித்தால், இப்படித் தான் எதிர்விளைவுகள் ஏற்படும்.
என் மனைவி இதுவரை வருமான வரி தாக்கல் செய்ததில்லை. 2023-24 நிதியாண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தால், தொடர்ச்சியாக செய்ய வேண்டுமா?
எஸ்.ஆர்.பார்த்தசாரதி, சென்னை.
இந்த ஆண்டு வரி பிடித்தம் செய்யப்பட்டது, அதை ரீபண்டு வாங்குவதற்காக வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள். அடுத்த ஆண்டு, வரிப் பிடித்தம் ஏதும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அது எப்படி வருமான வரித் துறைக்குத் தெரியும்? வரிப் பிடித்தம் செய்யப்பட்டால், வருமான வரி தாக்கல் செய்வது, இல்லையென்றால் தாக்கல் செய்வதில்லை என்பது சரியல்ல.
யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் என்பதற்கு 12 வரையறைகளை வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. உதாரணமாக உங்கள் மகனையோ, மகளையோ பார்ப்பதற்காக வெளிநாடு சென்று, அதற்காக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால் கூட, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ஒரு வரையறை சொல்கிறது.
அதனால், வருமான வரி தாக்கல் செய்வதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். வரி கட்ட வேண்டுமென்றால் கட்டுங்கள். இல்லையென்றால் கட்டும் அளவு வருவாய் இல்லை என்பதைச் சொல்லும் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்யுங்கள்.
தனியார் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளேன். 2019 முதல் அந்தக் கணக்கு செயல்பாட்டில் இல்லை. மீண்டும் புதுப்பிக்கச் சென்ற போது, பான் அட்டை, ஆதார் அட்டை, 1000 ரூபாய் கட்டச் சொன்னார். அவற்றைத் தயார் செய்துகொண்டு போனபோது, 8,000 ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். கணக்கைப் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், கணக்கை மூட வேண்டும் என்றாலும் இந்தப் பணத்தைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். நான் என்ன செய்யவேண்டும்?
வி.கவிதா, திருப்பூர்.
உங்கள் சேமிப்புக் கணக்கைப் பராமரிப்பதற்கு, வங்கிக்கு ஒரு செலவு இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் உங்கள் கணக்கு 'டார்மென்ட்'ஆகி இருக்கும். இந்நிலையில், அதைப் புதுப்பிக்கச் செல்லும்போது, பராமரிப்புச் செலவையும், அபராதத்தையும் அதன்மீது போடப்பட்டுள்ள கூட்டு வட்டியையும் சேர்த்துக் கட்டச் சொல்கிறார்கள். அது வங்கிக்கே உள்ள நியாயம். தவறு சொல்ல முடியாது.
பொதுவாக இதுபோன்ற சூழல்களில், நம் மக்கள் புத்திசாலிகளாக நடந்துகொள்வர். சேமிப்புக் கணக்கில் நிறைய தொகை இருக்குமானால், பராமரிப்பு கட்டணம், அபராதம் எல்லாவற்றையும் செலுத்தி, புதுப்பித்துக் கொள்வர். இல்லையென்றால், அந்தக் கணக்கையே மறந்துவிடுவர்!
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph:98410 53881

