/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' திட்டம் சரியான தேர்வாக இருக்குமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' திட்டம் சரியான தேர்வாக இருக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' திட்டம் சரியான தேர்வாக இருக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' திட்டம் சரியான தேர்வாக இருக்குமா?
ADDED : ஆக 19, 2024 01:28 AM

நான், பொதுத் துறை வங்கி ஒன்றில், 10 ஆண்டுகளுக்கு முன் கணக்கு துவக்கினேன். பின், அதில் பணப் பரிவர்த்தனைகள் எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் அந்த வங்கிக்கு சென்று கணக்கை முடித்துக்கொள்ள எழுதிக்கொடுத்தபோது, 500 ரூபாய் செலுத்தவேண்டும்; அப்போது தான் கணக்கை முடித்து வைக்க முடியும் என்கின்றனர். கண்டிப்பாக 500 ரூபாய் செலுத்திதான் ஆக வேண்டுமா?
எம்.கல்யாணசுந்தரம், கோவை.
ஆமாம். அவர்கள் உங்கள் கணக்கைப் பராமரித்ததற்கும், காசோலை புத்தகம், பாஸ்புக், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட சேவைகளை வழங்கியதற்குமான கட்டணத்தைத் தான் கோருகின்றனர்.
ஒருசில வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால், அதற்கு தனியே அபராதம் போடும் பழக்கத்தையும் வைத்துள்ளனர். அந்த வங்கிக் கணக்கினால் பயனில்லை என்றால், அதற்கான பாக்கி கட்டணத்தைச் செலுத்திவிட்டு, கணக்கை முடித்துக்கொள்வதே சிறந்தது.
தனியார் வங்கி ஒன்றில், எனது மகனுக்காக கல்வி கடன் பெற்றிருந்தேன். சிறிது காலம் மாதாந்திர தவணை செலுத்திய பின், 12 ஆண்டுகளாக செலுத்தவில்லை. மகனுக்கு வேலையும் இல்லை. என்னாலும் செலுத்த முடியவில்லை. சிபில் அறிக்கையில் 4 லட்சம் ரூபாய் நிலுவை என காட்டுகிறது. வங்கி யில் 'ஒன் டைம் செட்டில்மென்ட்' செய்ய முயற்சித்தபோது, அவர்கள் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்கின்றனர். இது தொடர்பாக எவ்வித கடிதங்களும் வழங்க இயலாது எனவும், சிபிலில் உள்ள விபரங்களை நானே சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் வங்கியில் தெரிவிக்கின்றனர். எவ்வாறான நடவடிக்கை எடுத்து, சிபில் பிரச்னையை தீர்க்க முடியும் என கூறவும்.
ஜி.ராகவன், சென்னை.
நான்கு லட்சம் ரூபாய் என்பது நீங்கள் வாங்கிய கடனாக இருக்கும். உரிய தேதியில் திருப்பிச் செலுத்தாததால், வட்டி, அபராத வட்டி எல்லாம் சேர்ந்து, அது வங்கி சொல்லும் தொகையான 15 லட்சம் ரூபாயை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
வாங்கிய கடனை அடைக்காமல், மேலே துளிகூட நகர முடியாது. கடன் வாங்கிய வங்கியின் நோடல் அலுவலருக்குக் கடிதம் எழுதி, அசலைக் கட்டுகிறேன்; வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்து தாருங்கள் என்று கோரிக்கை வையுங்கள்.
வீடு, நகை உள்ளிட்ட சொத்துக்கள் இருந்தால், அதை வைத்து அடமானக் கடன் வாங்க முடியுமா என்று பாருங்கள். ஏதேனும் ஒருவகையில் செலுத்த வேண்டிய தொகையை கொஞ்சமாக குறைத்துக்கொள்ள முடியுமே தவிர, அது முழுமையாக தள்ளுபடி ஆகாது.
அடுத்து வரும் ஆட்சியாளர்கள் யாரேனும், தனியார் வங்கியில் பெற்றுள்ள கல்விக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தால் அன்றி, இந்த பிரச்னைக்குத் தீர்வில்லை. அது நடப்பதற்கான வாய்ப்பும் இல்லை.-----------------
நான் தமிழக அரசு ஓய்வூதியம் பெறுபவன். 79 வயதாகிறது. என் மனைவிக்கு 75 வயது. என் மனைவி பெயரில் ஒரு மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி. திட்டத்தில் 5 லட்சம் ரூபாயை மூன்று ஆண்டுகளுக்கு சேமிக்க விரும்புகிறேன். மூன்று ஆண்டுகளுக்குப்பின், உத்தரவாதமான உத்தேசத் தொகை எவ்வளவு பெற இயலும்? மேலும் மேற்கூறிய மியூச்சுவல் பண்டு திட்டத்தில் மாதந்தோறும் 20,000 ரூபாயை சேமிக்க விரும்புகிறேன். இயலுமா?
வி.சுப்பிரமணியன், சென்னை.
மியூச்சுவல் பண்டு லாபத்துக்கு யாராலும் 'உத்தரவாதமான உத்தேசத் தொகை' சொல்ல முடியாது. பங்குச் சந்தை அல்லது கடன்பத்திர சந்தையின் ஏற்ற இறக்கத்தை ஒட்டியே வளர்ச்சியோ, வீழ்ச்சியோ இருக்கும். மியூச்சுவல் பண்டுக்கு, மூன்று ஆண்டுகள் என்பதும் மிகவும் குறைந்த காலம். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் முதலீடு செய்தால் தான் கணிசமான வளர்ச்சியைக் காண முடியும்.
அமெரிக்காவில் அடுத்த அதிபராக யார் வரப் போகிறார் என்று தெரியவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர், ஜப்பான் யென் தடுமாற்றம், அதிகமாகவே உள்ள அமெரிக்க வட்டி விகிதம் என்று வரிசையாக பல பிரச்னைகள். எது எந்த நேரத்தில் பூதாகாரமாக வெடிக்கும்; உலக பொருளாதாரத்தைக் குலைக்கும் என்று சொல்வதற்கில்லை.
இதுபோன்ற நிச்சயமற்ற தன்மையையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் உங்களால் தாங்க முடியும் என்றால், மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., போடுங்கள். முடியாது என்றால், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் போடுங்கள். நீங்கள் கேட்கும் 'உத்தரவாதமான' வருவாய் அங்கே கிடைக்கும்.
காப்பீட்டில், 'பியூர் டேர்ம் பாலிசி' எடுப்பது தான் சிறந்தது; தேவையில்லாமல் 'காப்பீடு பிளஸ் முதலீடு' திட்டம் வேண்டாம் என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். ஆனால் , பாலிசி காலம் முழுதும் நான் வாழ்ந்து, அதன் பிறகும் வாழும்போது, அதுவரை கட்டின தொகை யெல்லாம் வீண் என்ற எண்ணம் தானே வரும்? என் பணத்தை யாரோ சாப்பிடுகின்றனர் என்று தானே அர்த்தம்? அப்படியானால், காப்பீடு பிளஸ் முதலீடு தானே சரியாக இருக்க முடியும்?
கே.நவநீதன், மதுரை.
இப்போதும் என் கருத்தில் மாற்றமில்லை. ஆனால், பியூர் டேர்ம் பாலிசியிலேயே இரண்டு புதுமைகளை, காப்பீட்டு நிறுவனங்கள் சமீப ஆண்டுகளில் அறிமுகம் செய்துள்ளன. பிரீமியத்தைத் திருப்பித் தரும் திட்டம் என்பது ஒன்று, 'ஜீரோ காஸ்ட்' திட்டம் என்பது மற்றொன்று.
அதாவது, பாலிசி காலத்தில் காப்பீடு எடுத்தவர் மறைந்துவிட்டால், அவரது நாமினிக்கு முழுத் தொகையும் போய்ச்சேரும். ஒருவேளை பாலிசி காலம் முழுதும் அவர் வாழ்ந்தார் என்றால், அதன் இறுதியில், அவர் அதுவரை செலுத்திய பிரீமியம் தொகையை, 18 சதவீத ஜி.எஸ்.டி., போக, மீதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
ஜீரோ காஸ்ட் திட்டத்தில், பாலிசி எடுப்பவர் முழு பாலிசி காலமும் பிரீமியம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.
இவை இரண்டுக்கும் செலுத்தப்படும் பிரீமியம் தொகை என்பது, வழக்கமான டேர்ம் பாலிசிக்குச் செலுத்துவதைவிட சற்றே அதிகம் தான். ஆனால், நீங்கள் சொல்வது போல், பணம் வீணாகப் போகாது. கடைசியில் பிரீமியம் தொகை திரும்ப வந்துவிடும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881