/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: 5 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது உண்மையா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: 5 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது உண்மையா?
ஆயிரம் சந்தேகங்கள்: 5 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது உண்மையா?
ஆயிரம் சந்தேகங்கள்: 5 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது உண்மையா?
ADDED : ஜன 20, 2025 01:23 AM

மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோவை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும்?
சோ.ராமு, திண்டுக்கல்.
இதில் மாதங்கள் முக்கியமில்லை. ஒவ்வொரு பண்டும் கடந்த ஓராண்டில் என்ன வருவாய் ஈட்டியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டாக இருந்தால், அந்த பண்டு வகையின் சராசரி வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்று பார்த்து, ஒப்பிட வேண்டும்.
சராசரி வளர்ச்சியை ஒட்டித்தான் உங்களிடம் இருக்கும் பண்டும் வளர்ந்திருக்கிறது என்றால், அதை விற்பனை செய்ய வேண்டி ய தில்லை. சராசரியை விட அதிகமாக வருவாய் ஈட்டியிருந்தால், பண்டு மேலாளர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று அர்த்தம்.
இதேபோல், பண்டு மேலாளர் மாறி, புதிய மேலாளர் வந்திருந்தால், அவருடைய கடந்த கால வரலாறை தெரிந்துகொண்டு, அந்த பண்டில் தொடரவேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். ஒருவேளை, பங்குச்சந்தை சீரான வளர்ச்சியைப் பெற வாய்ப்பில்லை என்று உங்களுக்குத் தோன்றினால், அப்போது, கடன் பத்திரங்கள் சார்ந்த பண்டு திட்டத்திலும் கொஞ்சம் பணம் போட்டு, போர்ட்போலியோவை பேலன்ஸ் செய்யலாம்.
என் சிபில் ரிப்போர்ட்டை எப்படி டவுன்லோட் செய்வது? எப்படி பார்ப்பது?
தினேஷ், திருப்பூர்.
நீங்கள் https://www.cibil.com/ எனும் வலைதளத்துக்கு செல்லுங்கள். அதில் புதிய பயனராக பதிவுசெய்து கொண்டு பணம் கட்டினீர்கள் என்றால், சமீபத்திய ஸ்கோர் தெரியும். அந்த முழு அறிக்கையையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நான் அரசு ஊழியர். தற்போது என் குடும்ப பாகப்பிரிவினை வாயிலாக 2.50 ஏக்கர் விவசாய நிலம் கிடைத்தது. விவசாயம் செய்ய அரசிடமிருந்து கடன் மானியம் மற்றும் உதவிபெற எனக்கு தகுதி உண்டா? விவசாய வருமானத்துக்கு அரசுக்கு வரி கட்ட வேண்டுமா?
பி.ஜெயமுருகன், சென்னை.
ஏராளமான உதவித் திட்டங்கள் உள்ளன. இந்தச் சுட்டியில் https://www.manage.gov.in/fpoacademy/SGSchemes/tamilnadu.pdf போய்ப் பாருங்கள். உங்களுக்கு எது உபயோகமாக இருக்குமோ அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவசாய வருமானத்துக்கு தான் வருமான வரி இல்லையே. இந்தியாவின் மிகப்பெரும் அரசியல்வாதிகள் எல்லோரும் விவசாயிகள் தான்!
5 ரூபாய் நாணயம் செல்லாது என்ற தகவல் உண்மையா?
என்.சம்பத், சென்னை.
ஆர்.பி.ஐ., வலைதளத்தில், இது தொடர்பாக எந்த சுற்றறிக்கையும் என் கண்ணுக்குப் படவில்லை. ஆனால், பல ஆங்கில நாளிதழ்கள் வேறொரு காரணத்தைச் சொல்கின்றன. இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. ஒன்று பித்தளையில், மற்றொன்று கெட்டியான வேறொரு உலோகத்தில் அச்சடிக்கப்பட்டது.
இந்த கெட்டியான உலோக 5 ரூபாய் நாணயத்தை வங்கதேசத்துக்குக் கடத்திச் சென்று, உருக்கி, அதிலிருந்து 5 சவர பிளேடுகளை தயாரிக்கின்றனராம். அதனால், இந்தக் கெட்டி உலோக 5 ரூபாய் நாணயத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்குக் கடத்தப்பட்டாலும் பயனற்ற வகையில் இருக்கும்படி, தக்கையான வேறொரு உலோகத்தில் 5 ரூபாய் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்தி. எது எப்படியாகினும், 5 ரூபாய் நாணயத்துக்கு இன்னும் மதிப்பு உண்டு; செல்லத்தக்கது தான்.
என் அம்மாவின் பேமிலி பென்சன் வங்கியில் உள்ளது. வாரிசு சான்று, இறப்பு சான்று போன்ற அனைத்தும் கொடுத்து இருமாதமாகியும் பணம் வரவில்லை. என்ன செய்வது?
சே.ஆறுமுகம், செங்கல்பட்டு.
இதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது. வங்கிக் கிளையிலேயே நேரடியாக போய் கேட்டுப் பாருங்கள். ஏதேனும் க்ளெரிக்கல் தவறு இருக்கக்கூடும். மற்றபடி, உரிய ஆவணங்களைச் சமப்பித்தால், வாரிசுக்குப் பணம் கொடுத்துவிடுவர்.
நான் பென்ஷனர், 94 வயது. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் கூடுதல் ஆனதால், நான் வருமான வரி கட்ட வேண்டுமா?
எஸ்.ராமனாதன், மதுரை.
வருமான வரியில், 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்தில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை உங்கள் வருமானம் இருக்குமானால், அப்போது 20 சதவீதம் வரி கட்ட வேண்டும். இதற்கு நீங்கள் தனியே வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டாம்.
உங்களுக்கு பென்ஷனும், வைப்பு நிதியில் இருந்து வட்டி யும் மட்டும் தான் வருகிறது; வேறு வருமானம் ஏதும் இல்லை என்றால், உங்களுக்கு பென்ஷன் தரும் வங்கியில் போய் ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் போதும். அவர்களே உரிய வரியைப் பிடித்தம் செய்துகொள்வர்.
நீங்கள் பென்ஷனர் என்பதால், புதிய வரித் திட்டத்தின்படி, 75,000 ரூபாய் ஸ்டாண்டர்டு டிடக்ஷன் பெற முடியும். நீங்கள் வரி ஏதும் செலுத்த வேண்டியிராது. எதற்கும் உங்கள் வங்கியில் போய் விசாரியுங்கள்.
தற்போது என் வீட்டுக்கடன் புளோட்டிங் விகிதத்தில் இருக்கிறது. இதை பிக்சட் ரேட்டுக்கு மாற்றிக்கொள்வது சரியாக இருக்குமா?
எஸ்.தேவராஜன், வண்ணை.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் நம் நாட்டில் வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. வரும் பிப்ரவரி பணக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை இந்த ஆண்டு முடிவுக்குள் முக்கால் சதவீதம் அல்லது 1 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படுமானால், அப்போது நீங்கள் பிக்சட் விகித வட்டிக்கு மாறிக்கொள்ளலாம்.
சமீபத்தில், ஆர்.பி.ஐ., ஒரு தெளிவை வழங்கியிருக்கிறது. வீட்டுக்கடன், நுகர்வோர் கடன், கல்விக்கடன், பங்குகள், கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கான கடன் ஆகியவற்றில், வாடிக்கையாளர்கள், புளோட்டிங் ரேட்டில் இருந்து பிக்சட் ரேட்டுக்கும்; பிக்சட் ரேட்டில் இருந்து புளோட்டிங் ரேட்டுக்கும் மாறுவதற்கு கண்டிப்பாக வாய்ப்பு தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
எத்தனை முறை இதுபோன்று மாறலாம், அதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை அந்தந்த வங்கிகளே முடிவு செய்து, வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. எப்படி இருந்தாலும் ரெப்போ விகிதங்கள் குறைந்து தான் ஆகவேண்டும். அதுவரை பொறுமையாக இருங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881