/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளி இ.டி.எப்., முதலீடு லாபகரமானதா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளி இ.டி.எப்., முதலீடு லாபகரமானதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளி இ.டி.எப்., முதலீடு லாபகரமானதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளி இ.டி.எப்., முதலீடு லாபகரமானதா?
ADDED : ஜூலை 15, 2024 02:31 AM

ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு என் மனைவி கொடுத்த நன்கொடையை, நான் என் வருமான வரிப் படிவத்தில் காண்பித்து, விலக்கு கோர முடியுமா? என் மனைவிக்கு வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் கிடையாது.
எஸ்.ஜெயராமன், சென்னை.
அந்த இல்லம், யார் பெயரில் ரசீது கொடுத்துள்ளது என்று பாருங்கள். ரசீதில் உங்கள் மனைவி பெயர் இருந்தால், நீங்கள் வரி விலக்கு கோர முடியாது. யார் பெயரில் ரசீது உள்ளதோ, அவர் தான் தன் வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்கும்போது, நன்கொடைக்கான வரி விலக்கை கோர முடியும். உங்கள் பெயரில் ரசீது வாங்கியிருந்தால், '80ஜி' கீழ், இதுபோன்று வரிவிலக்கு தருவதற்கு ஏற்ப, அந்த இல்லம் வருமான வரித் துறையில் பதிவு செய்திருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
நான் பொதுத் துறை வங்கியில் கணிசமான தொகையை வைப்பு நிதியாக வைத்துள்ளேன். ஒருவேளை இவ்வங்கி திவால் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணப் பாதுகாப்பு இருக்குமா? அரசு துறை வங்கி என்பதால், பணத்திற்கு அரசு பொறுப்பு ஏற்குமல்லவா?
ராஜகோபால் காசிவிஸ்வநாதன், கோவை.
பொதுத் துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில், அது வகுத்துள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டாலும், அரசு நேரடியாக பொறுப்பாளி கிடையாது. உங்கள் முதலீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் இன்ஷூரன்ஸ் உண்டு.
இன்னொரு விஷயம். கடந்த பல ஆண்டுகளாக, எந்த ஒரு வங்கியும் மூழ்க விடப்படுவதில்லை. அதுவும் 2015க்குப் பின், தனியார் துறை, பொதுத் துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஏதேனும் வங்கி யின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆர்.பி.ஐ., கருதினால், அதை மேம்படுத்தி, மீண்டும் ஆரோக்கியமான வங்கியாக மாற்றுவதற்கான எல்லா முயற்சியையும் எடுக்கிறது.
அதனால், வங்கி மூழ்கிவிடுமோ என்ற கவலை வேண்டாம். அப்படியே நிதி நிலை படுமோசமாக இருக்குமானால், இன்னொரு பெரிய வங்கியோடு, பாதிக்கப்பட்ட வங்கி இணைக்கப்படும். முதலீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட நபருக்கு, எந்த சேமிப்பு பத்திரம் நல்லது?
பி.கே.என்.ஆறுமுகம், மதுரை.
நேராக அருகில் உள்ள பெரிய அஞ்சலகத்துக்கு செல்லுங்கள். அங்கே பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள், சேமிப்புப் பத்திரங்கள் உள்ளன. முகவர்களும், அதிகாரிகளும் இருப்பர். அவர்களோடு கலந்தாலோசித்து, எது உங்களுக்கு தேவையோ, அதில் முதலீடு செய்யுங்கள்.
தங்க இ.டி.எப்., மாதிரியே, வெள்ளி இ.டி.எப்., ஒன்று இருக்கிறதே, அதில் முதலீடு செய்யலாமா?
சு.ம.அருள்குமரன், கோவை.
சீனாவில் படிப்படியாக அவர்களுடைய பொருளாதாரம் மீண்டு வருகிறது. அதனால், அங்கே தொழிற்சாலைகளில் பயன்படும் உலோகங்களின் அளவு அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம், வெள்ளியை வெட்டி எடுத்து சுத்தப்படுத்தி, வர்த்தகத்துக்கு கொண்டு வருவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. பழைய வெள்ளியை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்தும் விதமாக மாற்றுவதிலும் பெரிய முன்னேற்றம் இல்லை.
நகை செய்வதற்கும், புகைப்படத் துறையில் பயன்படுத்துவதற்கும் தேவைப்படும் வெள்ளியின் அளவு கணிசமாக உயர்ந்து வருகிறது. இது போன்ற பல காரணங்களால், தொடர்ச்சியாக வெள்ளியின் விலை உயர்கிறது. வெள்ளி இ.டி.எப்.,பில் முதலீடு செய்வது நல்ல உத்தி தான். தங்கம் அளவுக்கு இல்லையெனிலும், வெள்ளி நிச்சயம் நீண்ட கால அளவில் லாபம் ஈட்டித் தரும்.
பல ஆண்டுகளாக பிரீமியம் கட்டி வந்தாலும், மருத்துவ காப்பீடைப் பயன்படுத்தியதே இல்லை. தேவையில்லாமல், ஒவ்வோர் ஆண்டும் பணம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். இன்ஷூரன்ஸ் தொகையை குறைத்துக்கொள்வது சரியாக இருக்குமா?
மு.முகமது அஸ்லாம், தேனி.
இருக்கவே இருக்காது. சொல்லப் போனால், மூன்றாண்டுகள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நீங்கள் எடுத்துள்ள மருத்துவ இன்ஷூரன்ஸ் மொத்தத் தொகையை உயர்த்திக்கொள்வதே புத்திசாலித்தனம். ஆண்டொன்று போனால், வயது ஒன்று கூடுகிறதே தவிர, குறையவில்லை என்பது ஞாபகம் இருக்கட்டும். உடல்நல பாதிப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
பல மருத்துவமனைகளில் புதிய நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 'ரோபோடிக்ஸ்' அறுவை சிகிச்சை உட்பட, நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. புது விதமான மருந்துகள் சந்தைக்கு வருகின்றன.
இவையெல்லாம் மருத்துவ உலகில் பெரிய புரட்சி என்றாலும், இவையெல்லாம் விலை குறைவாக கிடைப்பதில்லை. இந்நிலையில், இன்ஷூரன்ஸ் இல்லாமல் இனிமேல் மருத்துவமனை போகமுடியாது. அதுவும் போதுமான அளவு இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்க வேண்டும். குறைவான கவரேஜ் இருந்தும் பிரயோஜனமில்லை.
தேசிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் சேமிப்புக்கு, 50,000 ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் உயர்த்துவாரா?
கே. அரவிந்த் ராஜன், புதுச்சேரி.
ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல; ஓய்வு பெறும்போது, இந்த பண்டில் இருந்து 60 சதவீத தொகையைத் தான் எடுக்க முடியும். அதை 80 சதவீதமாக உயர்த்தவேண்டும். பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடு 75 சதவீதம் வரை தான் தற்போது அனுமதிக்கப்படுகிறது. அதை உயர்த்த வேண்டும்.
பப்ளிக் பிராவிடண்டு பண்டு மாதிரி, இதிலும் உத்தரவாதமான வருவாய் தரக்கூடிய வகையில் மாற்றவேண்டும். புதிய வரித் திட்டத்தின் கீழும், 50,000 ரூபாய் வரை என்.பி.எஸ்., முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய கோரிக்கைகள் உள்ளன. நிதியமைச்சர் கருணை காட்டினால் தான் உண்டு.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881

