sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: தீபாவளி போனஸ் தொகைக்கு வருமான வரி உண்டா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: தீபாவளி போனஸ் தொகைக்கு வருமான வரி உண்டா?

ஆயிரம் சந்தேகங்கள்: தீபாவளி போனஸ் தொகைக்கு வருமான வரி உண்டா?

ஆயிரம் சந்தேகங்கள்: தீபாவளி போனஸ் தொகைக்கு வருமான வரி உண்டா?


ADDED : அக் 28, 2024 02:31 AM

Google News

ADDED : அக் 28, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பர்கள், உறவினர்களுக்கு இடையே அவ்வப்போது தேவை ஏற்படும் சமயங்களில் பண உதவி செய்து கொள்கிறோம். தொகை சற்று கூடுதலாக இருக்கும் போதும் ரொக்கத்தில் பரிமாற்றம் செய்து கொள்ளலாமா? இதற்கு ஆண்டு உச்சவரம்பு ஏதாவது உள்ளதா? இதை வருமான வரி கணக்கு தாக்கலில் காட்ட வேண்டுமா?


ஜெயலட்சுமி, கோயம்புத்துார்.

வங்கிக் கணக்கு வாயிலாக பணம் அனுப்புவது தான் சரியான வழி. அதுவே உங்களுக்கு ஓர் ஆவணமாகவும் இருக்கும்.

ரொக்கமாக பணம் கொடுப்பது, வாங்குவது என்றால் 20,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. 50,000 ரூபாய் வரை உறவினர்களுக்குள் பணம் தருவதையோ, பெறுவதையோ 'பரிசு' என்று வகைப்படுத்தலாம். அதற்கு மேல் இருந்தால் வரி கட்ட வேண்டும்.

உங்கள் கேள்வியில் இருந்து, நீங்கள் வட்டி ஏதும் வாங்காமல், கைமாற்றாகத் தான் பணம் கொடுக்கிறீர்கள்; வாங்கு கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். மேலே சொன்னவை எல்லாம் வட்டி வாங்காமல் கொடுக்கப்படும் கடனுக்குப் பொருந்தும். வட்டி வாங்கினால், அங்கே அது வருவாயாக கருதப்படும்.

அந்த வட்டி, வங்கியின் கடன் வட்டிக்கு இணையாக இருக்க வேண்டும். அந்த வருவாய்க்கு வரி உண்டு. உங்கள் ஆடிட்டரிடம் இந்த விபரங்களை தெரிவித்தால், அதற்கேற்ப ஐ.டி.ஆர்., தாக்கல் செய்யும்போது, கணக்குகள் போட்டுக் கொடுப்பார்.

தற்போது பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில், எந்த வகை முதலீட்டு திட்டம் 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு நல்ல லாபமாக இருக்கும்?


செ.செல்வக்கோ பெருமாள்,

காஞ்சிபுரம்.

தற்போது நம் பணவீக்கம் 5.49 சதவீதமாக இருப்பதால், இது அதிகமாக தெரியலாம். அடுத்த சில ஆண்டுகளில், நம் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இது 4 சதவீதத்துக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கைஇருக்கிறது.

அப்படி பார்க்கும்போது, அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீதம் வருவாய் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்தால், பணவீக்கமும், வரியும் போக, கையில் 5 சதவீதம் லாபம் நிற்கும். இதற்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளே பொருத்தமாக இருக்கும்.

தீபாவளி போனஸ் தொகைக்கு வருமான வரி உண்டா?


பி.ஆர்.ரமா, சென்னை.

உண்டு. வருமான வரிப் பிரிவு 17ன் கீழ், போனஸ் தொகை உங்கள் சம்பளத்தோடு இணைக்கப்பட்டு, மொத்த தொகைக்கும் உங்கள் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப, உரிய வருமான வரி பிடித்தம் செய்யப்படும். போனஸ் தொகை எவ்வளவு இருந்தாலும், அந்தத் தொகை சம்பளத்தோடு சேர்க்கப்பட்டு, இவ்விதம் வரிப் பிடித்தம் செய்யப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, உடனடி சாம்பிராணி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். வங்கி மேலதிகாரியிடம் முத்ரா லோனில் 10 லட்சம் ரூபாய் கேட்டதற்கு, ஷூரிட்டி இல்லாமல் தரமாட்டேன் என்று கூறிவிட்டார். இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?


நா.பாலசந்திரன், மதுரை.

முத்ரா கடனுக்கு பிணை கேட்கக்கூடாது என்பது இந்தியா அறிந்த விதி. அதையும் மீறி, வங்கி மேலதிகாரி ஷூரிட்டி கேட்கிறார் என்றால், உங்கள் 'கிரெடிட் ஹிஸ்டரி' அவருக்கு நம்பிக்கை அளிக்கவில்லை போல் தெரிகிறது. என்ன பிரச்னை என்று அவரிடமே பேசித் தெரிந்து கொள்ளுங்கள்.

உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு புகார் கடிதம் அனுப்பி வையுங்கள். என்ன பதில் சொல்கின்றனர் என்று பாருங்கள். ஒரே வங்கியை நம்பியிருக்க வேண்டாம். வேறு வங்கிகளிலும் கடன் கேட்டுப் பாருங்கள்.

டிரேடிங் கற்றுக்கொள்வது கடினம் தான் என்று தெரிகிறது. இருந்தபோதிலும் அதை முழுமையாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ள யாரை நாடுவது சரியான வழியாக இருக்கும்?


எம்.எஸ்.கார்த்திகேயன்,

மின்னஞ்சல்.

'முழுமையாகவும், விரைவாகவும்' என்பது முரண் தொடர். அதுவும் டிரேடிங்கில் அது சாத்தியமே இல்லை. தேசிய பங்குச் சந்தை வலைதளத்துக்கு சென்று, 'பியூச்சர் அண்டு ஆப்ஷன்ஸ் டிரேடிங்' என்று தேடுங்கள். நல்ல படிப்புகள் தெரிய வரும். அதில் சேர்ந்தால், உங்களுக்கு டிரேடிங் தொடர்பான ஞானம் வரும். அதைப் பயன்படுத்தினால், லாபம் வரும் என்பதற்கு யாரும் உறுதி சொல்ல முடியாது.

நகைக் கடைகள் நடத்தும் நகை சேமிப்பு திட்டங்களில் சேருவது பாதுகாப்பானதா, லாபகரமானதா?


அ.யாழினி பர்வதம், சென்னை.

கடைகளில் நகை சேமிப்பு திட்டங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. 11 மாதங்கள் வரை தான் பணம் வாங்க முடியும். 12வது மாதத்தில் நகை வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் மக்களிடம் பாப்புலராக இருக்கிறது.

ஆனால், இதற்கு எந்த அரசு உத்தரவாதமும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில், எனக்கு தெரிந்தே இரண்டு பெரிய நகைக்கடைகள் காணாமல் போனபோது, நகைச்சீட்டு கட்டியவர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். குருவி போல சிறுக சிறுக சேமித்த பணத்தை திரும்ப வாங்க முடியவில்லை.

ஆனால், அந்தக் காலத்தில் இல்லாத வழிமுறைகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. இதே மாதாந்திர தொகையை தங்க இ.டி.எப்.,பில் முதலீடு செய்யலாம் அல்லது தங்க மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். அவை பாதுகாப்பையும், லாபத்தையும் தரக்கூடியவை.

ஆபரணமாகத் தான் வாங்க வேண்டும் என்று திட்டமிருந்தால், அதற்குரிய தொகையை மாதந்தோறும் ஆர்.டி.,யில் ஓராண்டுக்கு சேமித்து வாருங்கள். ஆண்டு முடிவில் அதை எடுத்து ஆபரணம் வாங்கிக் கொள்ளுங்கள்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us