/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: அறக்கட்டளை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
/
ஆயிரம் சந்தேகங்கள்: அறக்கட்டளை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆயிரம் சந்தேகங்கள்: அறக்கட்டளை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆயிரம் சந்தேகங்கள்: அறக்கட்டளை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED : ஜன 27, 2025 01:10 AM

எனக்கும், என் தாய்க்கும் சேர்த்து ஜாயின்டாக, மியூச்சுவல் பண்டில் பணம் இருக்கிறது. அதை என் பெயரில் மட்டும் மாற்றுமாறு தாய் சொல்கிறார். அதைச் செய்ய, தாய்க்கு பான் கார்டு வேண்டும் என்று மியூச்சுவல் பண்டு அலுவலகத்தில் கேட்கின்றனர். அவருக்கு பான் கார்டு கிடையாது. அது கண்டிப்பாக வேண்டுமா?
-சுவாமிநாதன், மதுரை
வேண்டும். நம் நாட்டில் எந்த ஒரு நிதிப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டாலும், கொடுப்போரையும் வாங்குவோரையும் அடையாளப்படுத்துவது பான் எண் தான். பான் எண் பெறுவது தான் சுலபமாக இருக்கிறதே. ஆன்லைனிலேயே மனு செய்யலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில், 'பாரெக்ஸ் டிரேடிங்' செய்வது சட்டப்பூர்வமானதா?
மோகன் குமார், திருப்பூர்
சில குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, நம் நாட்டில் அன்னிய செலாவணி வர்த்தகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எந்த இரு நாணயங்களுக்கு இடையே வர்த்தகம் மேற்கொள்ளலாம் என்பதும் வரையறை செய்யப்பட்டு உள்ளது.
வர்த்தகம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட புரோக்கர்களையும் ஆர்.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது. யூக வணிகம் அல்லாத முறையில் மட்டுமே செலாவணி டிரேடிங் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ. வலைதளத்துக்கு சென்றால், எந்தெந்த புரோக்கர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக ஓர் அ றக்கட்டளை ஆரம்பிக்கலாம் என்ற ஆசை உள்ளது . என்ன செய்ய வேண்டும்?
தி.பாலன், திருப்பூர்
உங்கள் நல்லெண்ணத்தை செயல்படுத்துவதற்கு எதற்கு அறக்கட்டளை? உங்கள் குழந்தைகளுக்குச் செய்ததைப் போன்று, மற்ற மாணவர்களின் கல்விக்கும் உதவ விரும்புகிறீர்கள். வலது கை செய்வதை இடது கை அறியாமல் செய்யுங்கள்.
உங்களுக்கு தெரிந்த ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அமைதியாகச் செலுத்திவிட்டு, மனதிருப்தியோடு இருங்கள்; அல்லது இதுபோன்ற கல்வி உதவி செய்யும் நேர்மையான அறக்கட்டளை ஏதேனும் ஒன்றின் பணிகளுக்கு, உங்களால் ஆன உதவியை செய்யுங்கள்.
எங்கள் கிராமத்து வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினேன். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தவணை கட்டினேன். கொரோனா காலம் முதல் என் வாழ்வியல் சூழலால், கட்ட இயலவில்லை. என் வீடு எனக்கு திரும்ப கிடைக்குமா?
டி.குணசேகரன், திருச்சி
சொத்துக்களை அபகரிப்பதற்காக வங்கிகள் காத்திருக்கவில்லை. கடன் கொடுத்து, லாபம் ஈட்டவே அவை முயல்கின்றன. எந்த வங்கிக் கிளையில் கடன் வாங்கினீர்களோ, அங்கே போய் விசாரியுங்கள்.
கட்ட வேண்டிய மீதத் தொகை, அதற்கு வட்டி, அபராத வட்டி எல்லாம் சேர்ந்து ஒரு கணிசமான தொகை நிலுவையில் இருக்கும். அதை மீண்டும் கட்டுவதற்கான வழிமுறை என்ன, கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பதையெல்லாம் விசாரித்து தெரிந்துகொண்டு, மேல் நடவடிக்கை எடுங்கள்.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், வீட்டை மீட்க முடியாது என்பது ஞாபகம் இருக்கட்டும்.
சிறந்த நிதி ஆலோசகரை தேர்வு செய்வது எப்படி? அவரது சேவைக்கு எவ்வாறு கட்டணம் செலுத்துவது?
கார்த்திக், வாட்ஸாப்
சிறந்த என்ற சொல்லுக்கு தாங்கள் என்ன பொருள் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அவரது ஆலோசனையின் வாயிலாக, அபரிமித லாபம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், அது சாத்தியமே இல்லை.
யாராலும், எந்த ஒரு பங்கு அல்லது இதர முதலீட்டு இனங்களின் எதிர்காலத்தை 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது. அவரால் வழிகாட்ட மட்டுமே முடியும். பல பொதுத் துறை, தனியார் துறை வங்கிகளில், நிதி ஆலோசகர்கள் இருக்கின்றனர். தனிப்பட்ட அளவிலும் பல நிதி ஆலோசனை நிறுவனங்கள் உள்ளன.
நான்கைந்து இடங்களில் போய் கதவைத் தட்டிப் பேசிப் பாருங்கள். யார் காட்டும் திசை உங்களுக்கு உகந்ததாகத் தோன்றுகிறதோ அவர்களைப் பின்பற்றுங்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழுவின் பலன் எந்த ஆண்டு கிடைக்கும்?
பி.குமாரவேலு, திருப்பூர்
இப்போதைக்கு, எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒரு தலைவரும், இரு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அவர்கள் பல்வேறு மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடமும் கருத்து கேட்டு, தங்கள் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்குவர்.
அதன் அடிப்படையில், 2026 ஜன., 1 முதல் எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வேண்டும். பரிந்துரைகள் வரும்போது, ஓய்வூதியர்களுக்கு எவ்வளவு கூடுதல் தொகை வழங்கலாம் என்ற விபரமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இப்போதைக்கு இல்லை; இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம்.
என் சேமிப்புத் தொகையை ஐந்து ஆண்டுகள் நிரந்தர வைப்பு நிதியாக வைக்க விரும்புகிறேன். 1 லட்சம் ரூபாய்க்கு அதிகபட்சமாக மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் வகையில், தேசியமயமாக்கப்பட்டதும் நம்பிக்கையுடையதுமான வங்கிகள் அல்லது அரசுத் துறை நிறுவனங்களின் விபரங்களை தெரிவிக்கவும்.
டி.தங்கம், மதுரை
லட்ச ரூபாய்க்கு மாதம் 1,000 ரூபாய் வட்டி என்றால், ஆண்டொன்றுக்கு 12,000 ரூபாய். அதாவது, 12 சதவீத வட்டியை எதிர்பார்க்கிறீர்கள்.
பொதுத் துறை வங்கிகளிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும் அதிகபட்சமாக 7.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு என்றால் அரை சதவீதம் கூடுதலாகவும் வட்டி கிடைக்கும். அதாவது ஐந்து ஆண்டுகள் செய்யப்படும் முதலீட்டுக்கு, லட்ச ரூபாய்க்கு தோராயமாக மாதம் 750 ரூபாய் வரை அதிகபட்ச வட்டி கிடைக்கும்.
கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்னும் சில மாதங்களில் நம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கத் துவங்கும். அப்போது, கடன் வாங்குவோர் அதிகமாவர். வங்கிகளில் பணத்தட்டுப்பாடு அதிகமாகும்.
முதலீட்டாளர்களிடம் கூடுதல் வட்டி கொடுத்து, முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் வங்கிகள் இறங்கும். மாதம் 1,000 ரூபாய் இல்லையென்றாலும், 900 வரையாவது வட்டி கிடைக்கக்கூடும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881