/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன '8 - 4 - 3' முதலீட்டு உத்தி?
/
ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன '8 - 4 - 3' முதலீட்டு உத்தி?
ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன '8 - 4 - 3' முதலீட்டு உத்தி?
ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன '8 - 4 - 3' முதலீட்டு உத்தி?
ADDED : நவ 04, 2024 01:34 AM

இணையதள விளம்பரத்தின் வாயிலாக, 2 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும் என்ற விபரம் தெரியவந்தது. அதில் நான் என் தகவல்களைப் பதிவு செய்தவுடன், ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டு, பான், ஆதார் எண்கள் கேட்கப்பட்டன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையை 'பிராசஸிங்' கட்டணமாக கட்டச் சொன்னார்கள். நம்பலாமா?
எஸ்.விஸ்வநாதன், மின்னஞ்சல்.
இன்றைக்கு புற்றீசல் போல் வளர்ந்திருக்கும் கடன் நிறுவனங் கள், இப்படித்தான் வலைவிரிக்கின்றன. உண்மையிலேயே கடன் தேவைப்படுகிறதோ, இல்லையோ; யாரோ ஒருவர், 'சட்டென கடன் கொடுக்கிறேன்; ஆவணங்களோ, உத்தரவாதமோ தேவையில்லை' என்றவுடன், அந்த படுகுழியில் போய் பலரும் விழுகின்றனர்.
கடனுக்கான வட்டி என்ன? சரியாகச் செலுத்தவில்லை என்றால் அபராதங்கள் என்ன? மறைமுக கட்டணங்கள் ஏதேனும் உண்டா? கடன் கொடுக்க முறையாக அனுமதி பெற்ற நிறுவனம் தானா? முறையாக நடந்துகொள்ளும் நிறுவனம் தானா? அல்லது அடியாட்களை வைத்து வசூல் செய்யும் நிறுவனமா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா?
எப்படி கேள்விகளே இல்லாமல் ஒரு நிறுவனத்தை நம்புகிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் கொடுக்கிறீர்கள்? இனிமேல் அவர்களுடைய நச்சரிப்பில் இருந்து உங்களால் மீளவே முடியாது. அலைபேசி எண்ணை மாற்றி தப்பித்தால் தான் உண்டு!
எனது தந்தை, சைக்கிள் கடை நடத்தி வருகிறார். சில வாடிக்கையாளர்கள் யு.பி.ஐ., வாயிலாகப் பணம் செலுத்துகின்றனர். அதை தனது சொந்தச் சேமிப்பு கணக்கில் வரவு வைத்து வருகிறார். கடைக்கு என தனி கணக்கை பராமரிக்கலாமா, அல்லது சொந்த சேமிப்பு கணக்கிலேயே வரவு செய்து, வருமான வரி தாக்கல் செய்யலாமா?
குமரவேல், மின்னஞ்சல்.
நீங்களோ, உங்கள் தந்தையோ இப்படியே இருந்துவிடப் போவதில்லை. நிச்சயம், கடையை விரிவுபடுத்துவீர்கள், கூடுதல் சரக்குகள் வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் வளரும். கடன் தேவைப்படும். அந்த சமயத்தில், உங்கள் கடையின் விற்றுமுதல் என்ன என்ற கேள்வி எழும். அதையொட்டியே வங்கிகளோ, தனியார் நிறுவனங்களோ கடன் தொகையை முடிவு செய்வர்.
அதனால், உங்கள் கடைக்கு என்று தனி வங்கிக் கணக்கு ஒன்றைத் துவங்கி, அதில் கணக்கு வழக்குகளைத் தனியே பராமரித்து வாருங்கள். யு.பி.ஐ.யை அந்த வங்கிக் கணக்கோடு இணைத்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் பணம், நேரே அந்தக் கடையின் கணக்குக்கே போய்ச் சேரும். அது நீண்ட கால அளவில், வங்கியில் உங்களுக்கான 'கிரெடிட் ஹிஸ்டரி'யை வலுப்படுத்தும்.
அது என்ன 8 - 4 - 3 முதலீட்டு உத்தி? விளக்குங்கள்.
பி.ஜெ.சக்திபிரியா, திருப்பூர்.
'பவர் ஆப் காம்பவுண்டிங்' என்று சொல்லப்படும் பல்கிப் பெருகும் முதலீட்டைச் சுட்டிக்காட்ட இந்த உத்தி பயன்படுகிறது. அதாவது, ஒருவர் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை, ஏதேனும் ஒரு மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி. போட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீடு ஏறத்தாழ, ஆண்டுக்கு 12 சதவீத வட்டி தருகிறது என்று கருதுவோம்.
அவர் செய்துவரும் முதலீடு, முதல் எட்டு ஆண்டுகளின் முடிவில், 32 லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். இந்தப் பணத்தை எடுக்காமல், கூடவே எஸ்.ஐ.பி.,யையும் தொடர்வாரேயானால், அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தப் பணம், 64 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் மூன்று ஆண்டுகள் இதேபோன்ற முதலீடு தொடருமானால், அவர் ஒரு கோடி ரூபாயைத் தொடுவார். அதாவது, அந்த நபர் 15 ஆண்டுகளில், 36 லட்சம் ரூபாய் தான் முதலீடு செய்திருப்பார். ஆனால், அது ஒரு கோடி ரூபாயாக பெருகியிருக்கும். இதற்குத் தான் 8-4---3 விதி என்று பெயர்.
ஒரு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பர், என்னை அவரது கம்பனியில் எம்.எல்.எம்., முறையில், குரூப் பாட்னராக ஆக நியமிப்பதாக கூறுகிறார். பாலிசி பிரிமீயத்தில் 40 சதவீதம் கமிஷன், போனஸ் எல்லாம் கிடைக்கும் என்றும்; அதிக முகவர்களை சேர்க்க சேர்க்க, வருமானம் கொட்டும் என்கிறார். இது சாத்தியமா? பாலிசி எடுப்பவர்கள் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தங்களது ஆலோசனை என்ன?
எஸ்.ஸ்ரீவித்யா, மின்னஞ்சல்.
நீங்கள் சொல்வது எல்லாம் ரொம்ப அதீதமாகத் தெரிகிறது. அவ்வளவு கமிஷன், போனஸ் போன்றவை கொடுக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. காப்பீட்டில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும் சந்தேகத்துக்கிடமாகத் தான் இருக்கிறது. இவையெல்லாம் உங்களை வளைத்துப் போடுவதற்காகச் சொல்லப்படும் ஆசை வார்த்தைகளாக இருக்கலாம்.
ஆனால், காப்பீட்டுக்கான தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மருத்துவம், வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களில் கடுமையான நிச்சயமின்மையும் அச்சமும் நிலவுகிறது. அதனால், ஏதோ ஒருவகையில் எதிர்காலத்தையும், தம்மை நம்பியுள்ள குடும்பத்தாரையும் காப்பாற்ற விரும்புகிறார்கள்.
அதனால் கடன்பட்டுக் கூட, கூடுதல் பிரீமியம் செலுத்துகிறார்கள். இருப்பினும்,பாலிசி விற்பனை செய்வது அவ்வளவு சுலபமில்லை. 'தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்' போல் உங்களால் செயல்பட முடியுமானால், நல்ல காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகச் சேருங்கள், அது நல்லது.
'கிரிப்டோகரன்சி' பற்றி முழுவதும் கற்றுக் கொள்வதற்கும், அதில் முதலீடு செய்வதற்கும் சரியான வழியை கூறுக.
கே.குகன், மதுரை.
'கோர்ஸ்எரா, யுடெமி' உள்ளிட்ட இணைய கல்வி நிறுவன வலைதளங்களில், கிரிப்டோகரன்சி தொடர்பான பாடத் திட்டங்களைப் பார்த்திருக்கிறேன். இவை எவ்வளவு சிறப்பானவை என்பது எனக்குத் தெரியாது. அதைக் கற்று, முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க முடியுமா என்பதும் எனக்குத் தெரியாது.
நான் 'உண்மையான சொத்துகளில்' மட்டுமே கவனம் செலுத்துபவன், இதுபோன்ற 'இணைய சொத்துகள், ஊகச் சொத்துகள்' போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவன்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881