/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் எந்த விதமான தங்க முதலீட்டுக்கு வரி விதிப்பு குறைவு?
/
ஆயிரம் சந்தேகங்கள் எந்த விதமான தங்க முதலீட்டுக்கு வரி விதிப்பு குறைவு?
ஆயிரம் சந்தேகங்கள் எந்த விதமான தங்க முதலீட்டுக்கு வரி விதிப்பு குறைவு?
ஆயிரம் சந்தேகங்கள் எந்த விதமான தங்க முதலீட்டுக்கு வரி விதிப்பு குறைவு?
ADDED : மார் 31, 2025 01:17 AM

என் நண்பர் நகை வாங்குவதில் விருப்பமில்லை என்றால், 'பேப்பர் கோல்டு' வாங்குங்க என்றார். அப்படி என்றால் என்ன?
பொ.ஸ்தானிகபிரபு
வத்தலக்குண்டு
தங்க இ.டி.எப்., டிஜிட்டல் கோல்டு, தங்க முதலீட்டு பத்திரம், தங்க மியூச்சுவல் பண்டு ஆகியவற்றையே பேப்பர் கோல்டு என்று அழைப்பர். அதாவது தங்கத்தை ஆபரணமாக வாங்காமல், அதன் காகித வடிவங்களை வாங்குவதையே இப்படி குறிப்பிடுவர்.
என் உறவினர் நிலம் வாங்க வங்கியில் கடன் பெற்றார். கடன் வாங்கும் முன் வட்டி 8.30 சதவீதம் என்றனர். கடன் வாங்கிய பின் வட்டி 8.35 சதவீதம் என்றனர். கேட்டபோது உறவினரின் சிபில் ஸ்கோர் குறைவு என்றனர். உறவினர் எந்த வங்கியிலும், பைனான்சிலும் இதற்கு முன் கடன் வாங்கவே இல்லை. இதை கூறினால், அதற்கு அவர்கள் கிரெடிட் கார்டு வாங்கவே இல்லை; அதனால் ஸ்கோர் குறைவு என்றனர். இது சரியா?
ஏ.கந்தசாமி, சென்னை
கிரெடிட் கார்டை பயன்படுத்தி முறையாக கடனை கட்டவில்லை என்றால் தான் சிபில் ஸ்கோர் குறையும் என்றில்லை. மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், ஓ.டி.டி., பிளாட்பார்ம்களுக்கு செலுத்தும் சந்தா உள்ளிட்ட விஷயங்கள் கூட சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்கின்றனர்.
அதாவது, சாதாரணமாக இவையெல்லாம் கிரெடிட் ஏஜன்சிகளுக்கு தகவல் அனுப்பாது. ஒருவேளை, இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதில் சீரற்ற நிலை இருக்குமானால், அவற்றில் கணிசமான தொகை செலுத்தப்பட வேண்டுமானால், அப்போது இந்நிறுவனங்கள் கிரெடிட் ஏஜன்சிகளுக்குத் தகவல் தரும்.
அவ்வளவு ஏன், பற்பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஏதோவொரு கடனில் துளியூண்டு கொசுறு தொகை மிச்சமாக இருக்குமானால் கூட, அது கிரெடிட் ஏஜன்சிகளின் பார்வையில் 'டிபால்டாக'வே காண்பிக்கும். கிரெடிட் ஸ்கோர் அடி வாங்கும்.
உங்கள் நண்பரை சிபில் ஸ்கோர் வலைதளத்துக்குச் சென்று பணம் செலுத்தி, முழு ஸ்கோரை வாங்கி பார்க்கச் சொல்லவும். எதனால் ஸ்கோர் குறைவானது என்பது தெரியும். அதை பின்னர் சீர் செய்து கொள்ளலாம்.
வரி விதிப்பு கோணத்தில் இருந்து பார்த்தால், எந்தவிதமான தங்க முதலீட்டை செய்வது சரியாக இருக்கும்?
வி.காயத்ரி, சென்னை
நல்ல கேள்வி. கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம். சமீபத்திய பட்ஜெட்டுக்குப் பின், தங்கத்தின் மீதான வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி, ஆபரணங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால், அதில் கிடைக்கும் லாபம், உங்கள் வருவாயோடு சேர்க்கப்பட்டு, உங்கள் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து, பின்னர் விற்பனை செய்தால், இண்டக்சேஷன் வாய்ப்பு இல்லாமல், விற்பனை விலைக்கும், வாங்கிய விலைக்கும் இடையே இருக்கும் லாபத்துக்கு 12.50 சதவீத வரி கட்ட வேண்டும்.
தங்க மியூச்சுவல் பண்டுகளுக்கும் இதே நிலைமை தான். ஆனால், ஏப்ரல் 2023க்கு முன், தங்க மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை வாங்கியிருந்தால், அங்கே இண்டக்சேஷன் வாய்ப்பு கிடைக்கும்.
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்தால், ஓராண்டுக்குள் விற்பனை செய்துவிட வேண்டும். அதில் கிடைக்கும் லாபம், நீங்கள் செலுத்தும் வரி அடுக்குக்கு ஏற்ப இருக்கும். ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால், 12.50 சதவீத வரி கட்ட வேண்டும்.
தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திருந்து, ஓராண்டுக்குள் விற்பனை செய்தால், அந்த லாபம் உங்கள் வருவாயோடு சேர்க்கப்பட்டு, உங்கள் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து, விற்பனை செய்தால், இண்டக்சேஷன் வாய்ப்பு இல்லாமல், 12.50 சதவீத வரி செலுத்த வேண்டும்.
ஆனால், இங்கே தான் ஒரு டுவிஸ்ட். இந்த தங்க முதலீட்டு பத்திரத்தை ஆர்.பி.ஐ.,யிடமே 'ரெடீம்' செய்தாலோ, முதிர்வுக் காலம் வரை வைத்திருந்து பின்னர் கொடுத்தாலோ, இதில் இருந்து கிடைக்கும் லாபம் முழுமைக்கும் வரி விலக்கு உண்டு.
வரி விதிப்பு கோணத்தில் இருந்து பார்த்தால், தங்க முதலீட்டு பத்திரம் தான் லாபகரமானது. ஆனால், அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதால், இந்தத் திட்டத்தின் அடுத்த தவணைகளை வெளியிடுவதை அரசு நிறுத்தி விட்டது. அதனால் தான், செகண்டரி சந்தையில் இந்தப் பத்திரங்களை வாங்குவதற்கு பலரும் அலைமோதுகின்றனர்.
இ.டி.எப்., என்றால் என்ன?
எஸ்.அருணா, மதுரை
எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு என்பதன் சுருக்கமே இ.டி.எப்., இது மியூச்சுவல் பண்டு போன்றே உள்ள ஒரு முதலீட்டு வடிவம். உதாரணமாக, தேசிய பங்குச் சந்தையான நிப்டி குறியீடு, 50 நிறுவனங்களின் பங்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், பல துறை சார்ந்த நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட மதிப்பு அதாவது 'வெயிட்டேஜ்' கொண்டிருக்கும். உதாரணமாக, நிப்டியில் உள்ள ரிலையன்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகளின் வெயிட்டேஜ், கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9.21 சதவீதம் மற்றும் 7.47 சதவீதமாகும்.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், நிப்டி 50ஐ அப்படியே பிரதிபலிக்கும் இ.டி.எப்., திட்டம் ஒன்றை வெளியிடும். அதிலும், நிப்டி 50ல் உள்ள அதே 50 பங்குகள், அதே வெயிட்டேஜோடு வாங்கி சேகரிக்கப்படும். அதாவது, நிப்டி 50ல் என்ன வளர்ச்சி அல்லது சரிவு ஏற்படுகிறதோ, அவை இந்த இ.டி.எப்., திட்டத்திலும் பிரதிபலிக்கும்.
உங்களிடம் 50 நிறுவன பங்குகளையும் வாங்கும் வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், நிப்டி 50 இ.டி.எப்., யூனிட்டுகளை வாங்கினால், நீங்கள் அதில் உள்ள 50 பங்குகளின் வளர்ச்சியை அப்படியே வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும், இந்த இ.டி.எப்., யூனிட்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், பங்குகளை வாங்கி விற்பது போல் இ.டி.எப்., யூனிட்டுகளையும் வாங்கலாம், விற்கலாம்.
மற்ற மியூச்சுவல் பண்டுகளை நிர்வகிப்பதற்கான கட்டணம் சற்றே அதிகம். இ.டி.எப்.,பில் நிர்வாகக் கட்டணம் குறைவு. எந்தப் பங்கு ஏறினாலும், இறங்கினாலும் பரவாயில்லை, குறியீடு எப்படி நகர்கிறதோ, அதன் பலன் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் கொஞ்சம் ரிஸ்க் குறைவான முதலீடு இது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881