/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : நகை கடனில் வேறுபாடுகள் ஏன்?
/
ஆயிரம் சந்தேகங்கள் : நகை கடனில் வேறுபாடுகள் ஏன்?
ADDED : அக் 21, 2024 12:59 AM

அரசு நிறுவனம் ஒன்றில், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வைப்புத் தொகை வைத்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன், நான் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று கூறி, என் வட்டிப் பணத்தில் 20 சதவீதம் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும் என்று பதிவு தபால் அனுப்பினர். மூத்த குடிமகனான நான், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராததால், வருமான கணக்கு தாக்கல் செய்ததில்லை. வருமான உச்ச வரம்பிற்குள் வராத என்னை போன்றவர்கள், ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது '15 ஹெச்' படிவம் மட்டும் அந்த நிறுவனத்துக்கு கொடுத்தால் போதுமா? என் ஆதார், பான் கார்டை வைத்து பார்த்து, என் வைப்புத் தொகை எவ்வளவு என்று தெரிந்துகொள்ள முடியாதா? என்னை ஏன் இம்சிக்க வேண்டும்?
கே.எம்.ஆறுச்சாமி, கோவை
நீங்கள் படிவம் '15 ஹெச்' கொடுத்தாலே போதுமானது. டி.டி.எஸ்., பிடித்தம் செய்யமாட்டார்கள். அதை, ஒவ்வொரு நிதியாண்டு துவக்கத்திலும் கொடுக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், உங்கள் ஆண்டு வருவாய், வருமான வரி விலக்கு வரம்புக்குள் தான் இருக்கிறது என்பது எப்படி வங்கிக்கோ, அரசுத் துறைக்கோ தெரியும்? நீங்கள் தானே சொல்ல வேண்டும்?
மேலும், உங்கள் வைப்புத் தொகை எவ்வளவு என்பதை எப்படி அரசோ, வங்கித் துறையோ பார்க்க முடியும்? பார்க்கவும் கூடாது. அது, உங்களுடைய தனியுரிமை தகவல் இல்லையா? உங்களை போன்ற மூத்த குடிமக்களை இம்சிக்க வேண்டும் என்பது அரசுத் துறையின் எண்ணமல்ல; அவர்களுடைய விதிப்படி நடந்து கொள்கின்றனர்.
ஒரு நபரால் தன் ஆதார் எண் வாயிலாக எத்தனை சிம் கார்டுகள் வேறு வேறு நம்பர்களில் வாங்க இயலும்?
ராஜன், மின்னஞ்சல்
ஒரு ஆதார் அட்டை வாயிலாக ஒன்பது சிம் கார்டுகள் வரை வாங்கலாம். ஜம்மு - காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் ஆறு சிம் கார்டுகளுக்கு மேல் வாங்க முடியாது. சிம் கார்டை பல்வேறு ஆப்பரேட்டர்களிடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம்.
இன்றைக்கு தொலை தொடர்பு சட்டங்கள் கடுமையாகியுள்ளன. போதிய, சரியான ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டுகள் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளது.
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் இருக்குமானால், https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற சுட்டிக்குச் செல்லுங்கள்.
உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிட்டு தேடினால், உங்கள் பெயரில் உள்ள அத்தனை சிம் கார்டு விபரங்களும் தெரியவரும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத எண் ஏதேனும் அதில் தென்பட்டால், 'நாட் மை நம்பர்' என்ற பொத்தானை தட்டி, புகார் அளிக்கலாம்.
பழைய இரும்பு, பிளாஸ்டிக் தொழில் செய்வதற்கான லைசென்ஸ் பெற எங்கே? எப்படி அப்ளை செய்ய வேண்டும்?
எம்.சவுந்தரபாண்டியன், விருதுநகர்
உங்கள் நகராட்சி அலுவலகத்துக்குப் போய் 'டிரேட் லைசென்ஸ்' பெறுவதற்கான விண்ணப்பம் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணங்களை செலுத்தி, மனு அளியுங்கள். அங்கே பெரிதாக சிக்கல் இருக்கக்கூடாது. அதிகாரிகளே உங்களுக்கு உதவக்கூடும்.
தனியார் வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் நகை கடனுக்கான கடன் தொகை வழங்குவதில் வங்கிக்கு வங்கி ஏன் இந்த வித்தியாசம்? அது மட்டுமல்ல; வட்டி நிர்ணயத்திலும் வித்தியாசம். சேவை கட்டணம், நகை மதிப்பீட்டாளர் கட்டணம் வசூல் செய்வதிலும் வித்தியாசம். நகை கடன் மற்றும் வட்டியில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் உண்டா?
எம்.திலகவதி, கோவை
கந்துவட்டி அளவுக்கு வட்டி வாங்கக் கூடாது என்பது மட்டும் தான் ஆர்.பி.ஐ., வரையறை. மற்றபடி, ஒவ்வொரு வங்கியும், தனியார் நிதி நிறுவனமும் தத்தமது 'ரிக்ஸ்' எடுக்கும் சக்திக்கு ஏற்ப கடன் தொகை, வட்டி விகிதம், சேவை கட்டணம், மதிப்பீட்டாளர் கட்டணம் ஆகியவற்றை நிர்ணயித்துக் கொள்கின்றன.
மக்களுடைய தேவைக்கேற்ப, அவரவருக்கு ஏற்புடைய வங்கிக்கு போய் அடகு வைக்கின்றனர். பெரும்பாலும், கிராமுக்கு யார் அதிக கடன் தருகின்றனர் என்பது தான் பிரதான அளவுகோலாக இருக்கிறது.
எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால், அப்புறம் சுவாரசியமே இருக்காது! மூத்த குடிமக்களுக்கு என்று எந்த வட்டி சலுகையும் இருப்பது போல் தெரியவில்லை.
வருமான வரி துறையிலிருந்து வந்த இ - மெயிலில், நான் அதிகமாக செலுத்திய வருமான வரி திருப்பிக் கொடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை தொகை வரவில்லை. இதற்கான கால அளவு ஏதாவது உண்டா?
ராஜகோபாலன் ஸ்ரீதர்,
மின் அஞ்சல்
'இ - வெரிபை' முடிந்து நான்கு முதல் ஐந்து வாரங்களில் ரீபண்டு வந்துவிடும். இல்லையெனில், நீங்கள் வருமான வரி துறையின் https://www.incometax.gov.in/ வலைதளத்துக்குப் போய், உள்ளே 'Know your refund status' என்றொரு சுட்டியை தட்டினீர்கள் என்றால், இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்ற விபரம் தெரியும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881