/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீட்டுக்கடன் வட்டியை நாம் கேட்காமலே வங்கி குறைக்குமா?
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீட்டுக்கடன் வட்டியை நாம் கேட்காமலே வங்கி குறைக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீட்டுக்கடன் வட்டியை நாம் கேட்காமலே வங்கி குறைக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீட்டுக்கடன் வட்டியை நாம் கேட்காமலே வங்கி குறைக்குமா?
ADDED : மே 04, 2025 09:46 PM

வங்கிகளில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக செய்திகளில் படித்தேன். கடன் பெற்ற தனியார் வங்கியில், இதுபற்றி கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என கூறுகின்றனர்.
ச.கண்ணன், வத்தலக்குண்டு.
வீட்டுக் கடனுக்கு வங்கி வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. இச்சலுகை பெற வங்கியிடம் விண்ணப்பம் செய்ய வேண்டுமா, அல்லது வங்கியே குறைத்து விடுமா?
ராமநாதன், ராமநாதபுரம்.
வீட்டுக்கடன் வட்டி விகிதத்துக்கான அடிப்படை, ஆர்.பி.ஐ., நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதம் தான். அது 6.50 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு முறை, கால் சதவீதம் குறைப்பதற்கான வாய்ப்புண்டு.
ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்பது தான் எதிர்பார்ப்பு. அதை எப்போது செய்ய வேண்டும் என்பது அந்தந்த வங்கிகளின் முடிவு.
குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் பலனை, ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. இனிமேல் கடன் வாங்கும் புதிய கடனாளிகளுக்கே புதிய வட்டி விகிதம் பொருந்தும் என்று வரையறை செய்யவும் வாய்ப்புண்டு.
புதிய குறைக்கப்பட்ட வட்டி விகிதத்துக்கு மாற்றிக்கொள்ள, வங்கிகள் 'கன்வர்ஷன்' கட்டணம் வசூலிக்கக் கூடும். இது வங்கிகளுக்கு லாபம் தரும் வணிகம். அதனால், நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
எந்த வங்கி, விரைந்து இந்த குறைக்கப்பட்ட ரெப்போ விகித பலனை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டு, புதிய கடனை அங்கே வாங்க வேண்டும். அல்லது பழைய கடனை புதிய வங்கிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, போட்டி ஏற்பட்டு, வாடிக்கையாளர் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே, வங்கிகள் ரெப்போ விகித பலனை பயனர்களுக்கு வழங்கும்.
எஸ்.ஐ.பி., வாயிலாக மியூச்சுவல் பண்டில் மாதம் 5,000 ரூபாய் செலுத்துவது சிறப்பா அல்லது, 'லம்ப்சம்' வகையில் வாரம் 1,000 ரூபாய் செலுத்துவது சிறந்ததா?
பி. பாலச்சந்தர், சென்னை
தற்போது இண்டக்ஸ் பண்டும் லாபம் வழங்கவில்லை. செக்டார் பண்டுகளோ, மிகவும் விலை கூடிப் போயிருக்கின்றன. இந்த நிலையில், 'லம்ப்சம்' முதலீடு வளர்ச்சி தருமா?
கார்த்திக், ஈரோடு.
வாராவாரம் ஒரு குறிப்பிட்ட நாளில் 1,000 ரூபாய் போடுவதும் எஸ்.ஐ.பி., தான். பொதுவாக, ஒரு சிலரிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும் நாட்களாகப் பார்த்து முதலீடு செய்வர். இதன் வாயிலாக, கூடுதல் யூனிட்டுகளை ஈட்டலாம் என்பது நோக்கம். ஆனால், இது தொல்லையான வேலை.
ஒவ்வொரு நாளும் சந்தையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், மாதத்தில் ஒரு நாளை குறித்து, அந்த நாளில் தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி.,யில் போட்டுவந்தால், நீண்ட கால அளவில் கூடுதல் யூனிட்டுகளைப் பெற முடியும். அதேசமயம், ஒழுங்கும் இருக்கும். நீண்டகால மூலதன வளர்ச்சிக்கு இந்த ஒழுங்கு முக்கியம்.
பங்குச் சந்தை சற்றே சரிவாக உள்ள நேரத்தில் 'லம்ப்சம்' முதலீடு செய்வதும் லாபகரமானது தான். கடந்த 10, 15 ஆண்டுகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைப் பார்த்த பண்டுகளாக கண்டுபிடித்து முதலீடு செய்யுங்கள்.
அத்தகைய ஏற்ற இறக்கங்களிலும், ஒரு குறிப்பிட்ட பண்டு நியாயமான, கணிசமான வருவாயை உருவாக்கியிருந்தால், பண்டு மேனேஜர் திறமையானவர் என்று அர்த்தம்.
மூத்த குடிமகனான நான், கடந்த 2009ல், ஆபீஸில் 100 ரூபாயுடன் ஒரு தனியார் வங்கியில் ஆரம்பித்த சேமிப்பு சம்பளக் கணக்கு, 15 ஆண்டுகளாக வரவு செலவு இன்றி முடங்கி இருந்தது. கடந்த ஜனவரியில் அதை ஆக்டிவ் செய்து, குளோஸ் பண்ணும் போது, வட்டியுடன் இருந்த 167 ரூபாயில், 118 ரூபாயை, ஜி.எஸ்.டி., உடன் பிடித்துவிட்டு, 49 ரூபாயை மட்டும் என் வேறு பேங்க் அக்கவுண்டுக்கு, கிரெடிட் செய்தது சரியா? குளோசிங் சார்ஜ் உண்டா?
கே. இராமகிருஷ்ணன், மதுரை.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தனியார் வங்கியில் குளோசர் சார்ஜ் இருக்கிறது. மூத்த குடிமகன் என்பதால், சிறப்புப் பிரிவின் கீழ் 100 ரூபாய் குளோசர் சார்ஜ் பிளஸ் ஜி.எஸ்.டி.,யும் வசூல் செய்யப்பட்டுள்ளது. 'சரியா' என்ற கேள்வி நபருக்கு நபர், நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும்.
ஆர்.பி.ஐ., இத்தகைய கட்டண வசூல் விஷயத்தை, வங்கிகளிடமே விட்டுவிட்டது. குளோசர் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும், அதீதமாக இருக்கக் கூடாது என்று மட்டும் சொல்லியிருக்கிறது.
பெரிய பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், கணக்கு துவங்கிய ஓராண்டுக்குள் அந்தக் கணக்கை மூடினால், ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கின்றன. ஓராண்டுக்குப் பிறகு மூடினால் எந்தக் கட்டணமும் இல்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்வது தான்.
வங்கித் துறை என்பது நாம் பழைய காலத்தில் நினைப்பது போன்ற 'சேவை துறை' அல்ல. அது, லாபம் நோக்கமுள்ள துறை. அதனால், எல்லா சேவைகளும் இலவசமாக கிடைக்காது. வங்கிக் கணக்கு துவங்கும்போதே, அத்தகைய விபரங்களையும் தெரிந்துகொள்வது உங்கள் கடமை.
எனது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவரது பி.எப்., கணக்கில், சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, முறையாக வரவு வைக்கப்படாமல் உள்ளது. இது குறித்து கேட்டால், தகுந்த பதில் அளிக்க மறுக்கின்றனர். யாரிடம் முறையிடுவது?
எஸ். ஜி.ரமேஷ், திண்டுக்கல்.
மதுரையில் பி.எப்., மண்டல அலுவலகம் இருக்கிறது. அங்கே போய் புகார் அளிக்கலாம். அல்லது, பி.எப்., குறைதீர் வலைதளமான https://epfigms.gov.in/ சென்றும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். சம்பளத்தில் பி.எப்., பிடித்ததற்கான ஆதாரமும், பி.எப்., அலுவலகத்தில் அந்தத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரத்தையும் வைத்துக்கொண்டு, புகார் அளியுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881