sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆ்யிரம் சந்தேகங்கள்: மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் பி.எப்., பென்ஷன் உயருமா?

/

ஆ்யிரம் சந்தேகங்கள்: மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் பி.எப்., பென்ஷன் உயருமா?

ஆ்யிரம் சந்தேகங்கள்: மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் பி.எப்., பென்ஷன் உயருமா?

ஆ்யிரம் சந்தேகங்கள்: மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் பி.எப்., பென்ஷன் உயருமா?


ADDED : ஜூலை 06, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சில, அவை துவங்கிய காலம் முதலாகவோ அல்லது 10 முதல் 15 ஆண்டு கால அளவிலோ, 10 - 15 சதவீத வருவாயை கொடுத்துள்ளன. ஆனால், சில சமயங்களில் 3, 5 ஆண்டுகளில் அவை 20 - 30 சதவீத வருவாயைக் கொடுத்துள்ளன. நிலைமை இப்படி இருக்கும்போது, ஏன் எல்லோரும் நீண்டகால முதலீட்டுக்கு மியூச்சுவல் பண்டுகளையே பரிந்துரைக்கிறீர்கள்?



விஜயகுமார், ஜெயம்கொண்டம்

சந்தையில் இன்ன நேரத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று காலத்தை நிர்ணயிக்க முடியாதே? 20, 30 சதவீத வருவாய் என்பது நீங்கள் சொல்வது போல் ஏதோ ஒரு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் தான் சாத்தியமாகிஇருக்கிறது.

அது எந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. நீண்ட கால அளவில் 10 முதல் 15 சதவீதம் என்பதை, இதர முதலீட்டு வகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தான் அதன் மகத்துவம் தெரியும்.

உதாரணமாக, 15 ஆண்டு காலத்தில், வைப்பு நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு 7 சதவீத 'கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை' தான் அடைந்திருக்கும். அதோடு ஒப்பிடும்போது, மியூச்சுவல் பண்டு திட்டங்கள் இரு மடங்கு அதிக வருவாயை ஈட்டித் தந்திருக்கின்றன அல்லவா?

ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத அளவுக்கு முதலீடு வளருமானால், 57 மாதங்களில் பணம் இரட்டிப்பாகிவிடுமே. 15 ஆண்டுகளில் தோராயமாக, பணம் மும்மடங்கு பெருகிவிடாதா? அதனால் தான், மியூச்சுவல் பண்டில் நீண்டகால முதலீடு செய்யுங்கள் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

நான் மியூச்சுவல் பண்டு திட்டத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? அதில் உள்ள நன்மைகள் மற்றும் சுணக்கங்களை தெரிவிக்கவும்.



ராம லக் ஷ்மணன்,

கோயம்புத்துார்



முதலில், மியூச்சுவல் பண்டு உங்கள் மனநிலைக்கும் பணநிலைக்கும் உகந்ததா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பங்குச் சந்தை அல்லது கடன் பத்திரம் சார்ந்த பண்டு திட்டங்களில் நிச்சயம் ஏற்ற இறக்கம் இருக்கும். உத்தரவாதமான வருவாய் வளர்ச்சி உண்டு என்று சொல்வதற்கில்லை.

இந்த ரிஸ்க்கை எடுப்பதற்குத் துணிவிருந்தால், மியூச்சுவல் பண்டு பக்கம் வாருங்கள். இது தான் இதில் உள்ள சுணக்கம். ஏற்ற இறக்கம் இருந்தாலும், நீண்ட கால அளவில் வளர்ச்சி இருக்கும் என்பது தான் இதில் உள்ள ஒரே முக்கியமான நன்மை.

நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி 2025 மே மாதம் 58 வயதில் பணி ஓய்வு பெற்றேன். தபால் அலுவலகத்தில் சீனியர் சிட்டிசன் ஸ்கீமில் இணைய விருப்பம் தெரிவிக்க அஞ்சல் அலுவலகத்தை அணுகும் போது, 60 வயது பூர்த்தியானால் தான் இணைய முடியும் என்று கூறினர். தங்களுடைய ஆலோசனை என்ன?

ரா.ராஜா, பாளையம்பட்டி

அவர்கள் சொல்வது சரி தான். 60 வயது ஆகியிருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால், 55 - 60 வயதுக்குள்ளாக ஓய்வுபெறும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு ஒரு சிறப்பு விதி இருக்கிறது. இத்தகைய கணக்கைத் துவங்க போகும்போது அவர் முழுமையாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும். நிறுவனத்தில் இருந்து ஓய்வூதிய பலன்களைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் கணக்கு துவங்க வேண்டும்.

மேலும், நிறுவனத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். அதில், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய பலன், எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தார் என்பன போன்ற விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு சீனியர் சிட்டிசன் ஸ்கீமில் இணைய முடியும்.

தங்கம், இனிவரும் சில மாதங்களில் 30 சதவீதம் வரை விலை குறையும் என்று கேள்விப்படுகிறேன்! ஆனால், பொதுத்துறை வங்கியில் நகைக்கடனுக்கு, சென்ற மாதத்தை விட இந்த மாதம் சவரனுக்கு 5,000 ரூபாய் அதிகமாக கொடுக்கின்றனர்; எப்படி சாத்தியம்?



ஆர்.மணிகண்டன், கோவை

நீங்கள் சொல்வது போல் தங்கத்தின் மதிப்பு விழுமானால், அப்போதைய மதிப்புக்கு ஏற்ப, வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக கூடுதல் தங்கத்தை அடகு வைக்கவோ அல்லது பணத்தைக் கட்டவோ சொல்வர். ஒருவேளை இவற்றை செய்ய முடியவில்லை என்றால், அடகு வைத்த நகையை ஏலத்துக்குக் கொண்டு வந்துவிடுவர்.

இப்போதைக்கு இவையெல்லாம் நடக்காது என்பது தான் நம்பிக்கை, துணிச்சல். ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. 2011ல் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. அடகு வைக்கும் அவசரத்தில், வரலாறு படிக்க நேரமா இருக்கப் போகிறது?

நான் தனியார் சுயநிதி கல்லுாரியில் இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். இ.பி.எப்.,ல் இருந்து 1,000 ரூபாய் ஓய்வூதியம் தான் வருகிறது. இது, 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. இணைய செய்திகளிலும் சமூக ஊடங்களிலும், 3,000 முதல் 7,500 ரூபாய் வரை பென்ஷன் வரும் சொல்கின்றனரே? எப்போது இது கிடைக்கும்?

பேரா., கே.மனோகரன்,

கோவை

ஓய்வூதிய உயர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பி.எப்., அலுவலகத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், 'இதுபோன்ற சமூக ஊடக செய்திகள் போலியானவை, நம்ப வேண்டாம். இ.பி.எஸ்., பண்டு 2000ம் ஆண்டு முதல், பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது.

மத்திய அரசின் பட்ஜெட் நிதியுதவியுடன் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதியமான 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போதைக்கு ஓய்வூதிய உயர்வு கண்ணில் தெரியவில்லை.

என் கணவருக்கு வயது 58. ஆறு கிரெடிட் கார்டு வைத்துள்ளார். அவற்றுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கான, 'ஒன்டைம் செட்டில்மென்ட்' கேட்கலாம் என்று விசாரித்தால், மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக கட்டாமல் இருந்தால் தான், செட்டில்மென்ட் போக முடியும் என்று வங்கியில் சொல்கின்றனர். கார்டை குளோஸ் செய்ய விரும்பவில்லை.

அதற்குத் தேவையான முழுப்பணம் எங்களிடம் இல்லை. செட்டில்மென்ட் என்றால் பாதியளவு தானே இருக்கும்? இப்போது கையில் பணம் இருக்கிறது. இனிமேல் லோன் எதுவும் எடுக்கப் போவதில்லை. எப்படி செட்டில்மென்ட் பெறுவது?



சீதாலட்சுமி, வாட்ஸாப்



முழுத்தொகையும் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம், 'ஒன்டைம் செட்டில்மென்ட்' செய்து கொடுங்கள் என்று, கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் கோரிக்கை தான் வைக்க முடியுமே தவிர வலியுறுத்த முடியாது. ஏற்பதும், மறுப்பதும் வங்கிகளின் உரிமை.

செட்டில்மென்ட்டே போனால் கூட, நீங்கள் எதிர்பார்ப்பது போல் பாதிக்குப் பாதி பணம் கட்டினால் போதும் என்பது சாத்தியமில்லை. வட்டியையும், அபராத வட்டியையும் வேண்டுமானால் தள்ளுபடி செய்வரே தவிர, அசல் தொகையைச் செலுத்தித் தான் ஆக வேண்டும்.

கிரெடிட் கார்டு கடன் தவணைகளை, மறுசீரமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். மாதாமாதம் எவ்வளவு கட்ட முடியுமோ, அதற்குள் தவணைத் தொகையை மாற்றிக்கொள்ள முயலுங்கள்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us