தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ ஆயிரம் சந்தேகங்கள்

 ஆயிரம் சந்தேகங்கள்

 ஆயிரம் சந்தேகங்கள்


ADDED : ஆக 03, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவறான 'சிபில்' பதிவுகளை சரி செய்வது எப்படி?

எந்த விபரமும் குறிப்பிடாமல், ஒரு பார்ட்டி, எங்களுக்கு ஒரு காசோலை கொடுத்திருந்தார். ஆனால், அது வரப்பெற்று 10 முதல் 12 ஆண்டுகள் ஆகியிருக்கும். இனிமேல் அதை வைத்துக்கொண்டு ஏதேனும் வழக்கு போட முடியுமா?

ரமேஷ், ஈரோடு

அதாவது நீங்கள் வாங்கி வைத்திருப்பது 'பிளாங்க் செக்' என்று புரிந்து கொள்கிறேன். இனிமேல் அதை வைத்துக்கொண்டு சட்டப்படி பணத்தை திரும்பப் பெறுவது மிகவும் கஷ்டம். நம் நாட்டில் ஒரு கடனையோ பணத்தையோ திரும்ப கேட்க, லிமிடேஷன் சட்டம், 1963ன்படி, பொதுவாக மூன்று ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உண்டு. உங்களுக்கு பணம் தர வேண்டிய தேதியிலிருந்து அந்தக் காலக்கெடுவுக்குள் நீங்கள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். 10 முதல் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அந்த பணத்தை சட்டப்படி வசூலிப்பது மிகவும் கஷ்டம்.

சமீப காலமாக வங்கியில் முழு தொகையையும், எப்.டி.யில் போட்டால், வட்டி 7 முதல் 8 சதவீதத்துக்கு மேலே வருவதில்லை. ஆனால் பல வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வந்துள்ளன. அவை வருடத்திற்கு 10 அல்லது 12 சதவீத வட்டி கொடுக்க தயாராக உள்ளன. இவையெல்லாம் நம்பகத்தன்மை வாய்ந்தவையா, இல்லையா?

மோகன், திருவள்ளூர்

வங்கி சாரா பல நிதி நிறுவனங்கள் நமது நாட்டில் பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றன. அவர்கள் தங்களுக்கென ஒரு சில கடன் வகைகளை வைத்துக்கொண்டு, அதில் வெற்றிகரமாக செயல்பட்டு லாபம் ஈட்டுகின்றன. ஆனால், அவர்கள் சொல்லும் வரவு- - செலவு கணக்குகள் உண்மைதானா? அவர்கள் பாதுகாப்பான துறைகளில்தான் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறார்களா என்றெல்லாம் கண்டுபிடிப்பது சாதாரண வாடிக்கையாளர்களால் முடியாத விஷயம்.

மேலும், எல்லா வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகை பெறுவதற்கு அனுமதி கிடையாது. எனவே, அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்துள்ளதா, பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பெற அதிகாரம் பெற்றுள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

மற்றவர்கள் எல்லாம் முதலீடு செய்து லாபம் பார்த்துவிட்டார்கள்; நாம் மட்டும் தயங்கி தயங்கியே வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம் என்று 'போமோ' (FOMO) மனப்பான்மைக்கு இடம் கொடுக்காதீர்கள். அதிக வட்டி என்ற ஒரே காரணத்துக்காக எந்த முதலீட்டிலும் இறங்க வேண்டாம். பாதுகாப்பு முதலில்; வட்டி அதன் பிறகுதான். உங்கள் நம்பிக்கைதான் உங்கள் வழிகாட்டி.

எனது மகளின் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த போது சிபில் ஸ்கோர் சரியில்லை என்று காண்பித்தது. வங்கியில் வழங்கப்பட்ட சிபில் அறிக்கையில் என் பிறந்த தேதி, தந்தை பெயர், குடும்ப அட்டை எண், ஓட்டுநர் உரிமம், வீட்டு முகவரி போன்றவை வேறுபட்டு இருந்தன. கடந்த 2011ல் தான் நான் வங்கி கணக்கு துவங்கினேன். ஆனால், சிபிலில் 1997ம் ஆண்டு முதல் கடன் பெற்றுள்ளதாக அறிக்கையில் உள்ளது. கடன் நிலுவையில் உள்ளதால் கடன் வழங்க இயலாது என்று வங்கியில் தெரிவித்தார்கள். இந்த சிபில் விபரங்களை சரிசெய்ய உரிய வழிகாட்டுங்கள்.

நா.சீனிவாசன், பட்டாபிராம்

சிபில் வலைத்தளத்துக்கு (https://www.cibil.com/) போய் பதிவுசெய்து கொண்டு உள்ளே நுழையுங்கள். அங்கே உங்கள் 'பான்' எண்ணை கொடுத்தாலே, உங்கள் விபரங்கள் அனைத்தும் பட்டியல் இடப்படும். ஏற்கனவே நீங்கள் கையில் வைத்துள்ள அறிக்கையையும், அங்கே பட்டியல் இடப்பட்டுள்ள விபரங்களும் ஒன்றாக இருக்கின்றனவா என்று பாருங்கள். உங்களை பற்றி எல்லா விபரங்களும் தவறாகத்தான் இருக்கின்றன என்றால் அங்கே ஒவ்வொரு பகுதியாக போய், உங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யுங்கள். குறிப்பாக 'இந்தக் கடனை நான் வாங்கவே இல்லை' என்று தெளிவாக சொல்லுங்கள்.

இன்னொரு வேலையையும் செய்யுங்கள். இந்த கடனை உங்கள் பெயரில் பதிவு செய்துள்ள வங்கி அல்லது நிதி நிறுவனம் எதுவோ, அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்து, தவறான பதிவுகளை நீக்கும்படி கோருங்கள்.

பொதுவாக இதுபோன்ற புகார்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால், இதை சொல்வது ஈஸி. ஆனால், நடைமுறையில் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து விளக்கம் வாங்க வேண்டியிருப்பதால், ஒருசில மாதங்கள் கூட ஆகலாம். தவறான விவரங்களை நீக்குவதற்கு தேவையான ஆவணங்களை கொடுத்து பொறுமையாக தான் சீர்செய்துகொள்ள வேண்டும்.

சொந்த காரணத்தால் நான் ஒரு கம்பெனியில் இருந்து ராஜினாமா செய்தேன். அப்போது பி.எப். சர்டிபிகேட் கொடுத்தனர். நான் அதை கவனிக்கவில்லை. இப்போது அந்த பணத்தையும் என் மாத பென்ஷனையும் வாங்க முடியுமா? என்னிடம் யு.ஏ.என். (UAN) நம்பர் இல்லை.

எஸ். ஜனார்த்தன ராவ், பாலக்கோடு, தர்மபுரி

ஒரு தனியார் ஸ்வீட் உற்பத்தி நிறுவனத்தில் 16 வருடம் 2 மாதம் பணிபுரிந்தேன். அந்த நிறுவனத்தின் ஜி.எம். சொன்னதால் ஜனவரி மாதம் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். பணியில் இருந்து விலகிய பிறகு என் பி.எப். தொகை 90 நாட்கள் கழித்து வரும் என்றார் ஜி.எம். ஆனால், 152 நாட்கள் ஆகிறது. இது வரைக்கும் பி.எப். பணம் வரவில்லை. 3 மாதம் வேலை தேடி நொந்து போய்விட்டேன். எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

த.இராமு, அண்ணா நகர், சென்னை பி.எப். பணத்தை நிறுவனம் தானாக உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பாது. அதற்கான விண்ணப்பத்தை நீங்கள்தான் அளிக்க வேண்டும். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/ என்ற இ.பி.எப்.ஓ. வலைத்தளத்திலோ, 'உமங்' என்ற செயலியிலோ உங்களுடைய யு.ஏ.என். எண்ணை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். யு.ஏ.என். தெரியாவிட்டாலும், ஆதார் எண், பான் எண், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் போன்ற விபரங்களின் உதவியுடன் அதை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம்.

ஜனார்த்தன ராவ்: உங்களிடம் இருக்கும் பி.எப்., சான்றிதழை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள இ.பி.எப்.ஓ. அலுவலகத்திற்கு சென்றால், உங்கள் பழைய கணக்கை கண்டுபிடித்து, யு.ஏ.என். உடன் இணைப்பதற்கான வழிகாட்டுவார்கள். நீங்கள் இ.பி.எஸ். பென்ஷனுக்கு தகுதியானவரா என்பதையும் அங்கேயே சொல்லுவார்கள்.

ராமு: உங்கள் நிறுவனம் சொன்னது போல '90 நாட்கள் கழித்துத்தான் பி.எப். வரும்' என்பது பொதுவான விதிமுறை அல்ல. நீங்கள் வேலையை விட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டதால், உங்கள் யு.ஏ.என். கணக்கில் பி.எப். கணக்கில் இருப்புத் தொகை மற்றும் சேவை விபரங்களைச் சரிபாருங்கள். அதன் பிறகு, பி.எப். தொகை கேட்டு ஆன்லைனிலேயே விண்ணப்பியுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us