அடுக்குமாடி குடியிருப்பின் வேலைகளை 'அவுட்சோர்ஸ்' செய்யலாமா?
அடுக்குமாடி குடியிருப்பின் வேலைகளை 'அவுட்சோர்ஸ்' செய்யலாமா?
ADDED : ஆக 10, 2026 08:39 AM

எங்கள் அடுக்ககத்தில் 350 வீடுகள் உள்ளன. யாருமே அசோசியேஷனுக்கான நிர்வாக பொறுப்பை ஏற்க மாட்டேன் என்கின்றனர். பல்வேறு வேலைகளை அவுட்சோர்ஸ் செய்ய முடியுமா?
ரத்திகா, சென்னை
தாராளமாகச் செய்யலாம். பெரிய குடியிருப்புகளை நிர்வகிப்பதற்கு என்றே 'பெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' அமைப்புகள் உள்ளன. அடுக்ககத்தின் பராமரிப்பு, செக்யூரிட்டி, வரவு- -- செலவு கணக்குகள் உள்ளிட்ட வேலைகளை அவர்கள் கவனித்து கொள்வர். அவர்களோடு ஒப்பந்தம் போட்டு, அவுட்சோர்ஸிங் செய்யலாம். ஆனால், அவர்களை நிர்வகிப்பதற்கு நிச்சயம் அடுக்ககத்துக்கு ஒரு அசோசியேஷனும், நிர்வாகிகளும் அவசியம். வங்கி காசோலைகளில் கையெழுத்திட தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் என குறைந்தபட்சம் 3 பேர் கொண்ட ஒரு சிறிய நிர்வாக குழு மட்டும் இருந்தால் போதுமானது. தினசரி தலைவலிகளை அந்த நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.
2,000 வீடுகள் கொண்ட மிகப்பெரிய அடுக்ககத்தில், ஒரு வீடு வாங்க முயல்கிறேன். அடிமனை கிட்டத்தட்ட 50 முதல் 80 ஏக்கர் பரப்பளவு. 100 சர்வே எண்களுக்கு மேல் இருக்கின்றன. என் வீடு இருக்க போகும் சர்வே நம்பரை எப்படி கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை .
நாகராஜன், மேடவாக்கம்
உங்கள் சர்வே எண்ணைக் கண்டுபிடிக்க இந்த வழிமுறைகள் உதவுமா என்று பாருங்கள். பில்டரிடம் அந்த குறிப்பிட்ட டவருக்கான ரெரா (RERA) எண்ணை கேட்டு, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி (TNRERA) வலைத்தளத்தில் தேடுங்கள். அங்கே அந்த ப்ராஜெக்ட் தொடர்பான பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்க முடியும். குறிப்பாக, நிலத்தின் உரிமை ஆவணங்கள், சர்வே எண்கள், வில்லங்கம் தொடர்பான விபரங்கள், அங்கீகரிக்கப்பட்ட திட்டம் ஆகியவற்றை தேடி பாருங்கள்.
அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன் 'வரைவு விற்பனை ஒப்பந்தம்' கேளுங்கள். அதில் உங்கள் வீடு அமைந்திருக்கும் டவர் மற்றும் அதற்குரிய நிலத்தின் சர்வே எண்கள், உங்களுக்கு கிடைக்கப்போகும் பிரிபடாத நிலப்பங்கு உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக இருக்கிறதா என்று பாருங்கள்.
பெரிய வங்கிகளில் இந்த பிராஜெக்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என கேளுங்கள். அவர்கள் அனுமதித்திருந்தால், வங்கியின் சட்டக் குழு ஏற்கனவே அந்த 100 சர்வே எண்களையும் முழுமையாக சரிபார்த்திருப்பர்.
உங்கள் வழக்கறிஞரை வைத்து, பில்டர் கொடுக்கும் 'மாஸ்டர் லீகல் ரிப்போர்ட்', ரெரா ஆவணங்கள், தாய் பத்திரங்கள், விற்பனை ஆவணங்கள், சர்வே விபரங்கள், அங்கீகரிக்கப்பட்ட திட்டம் உள்ளிட்டவற்றை தனியாக சரிபார்த்து கொள்ளுங்கள். குறிப்பாக, நீங்கள் வாங்க போகும் டவருக்கு சம்பந்தப்பட்ட சர்வே எண்களில் ஏதேனும் அடமானம், வில்லங்கம், வழக்கு அல்லது வேறு உரிமை கோரல் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க சொல்லுங்கள்.
நான் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்க உள்ளேன். பிளாட்டின் விலையுடன் அதற்கான ஜி.எஸ்.டி.,யையும் கொடுக்க வேண்டும் என புரமோட்டர் கோருகிறார். இதை ரிஜிஸ்டர் செய்யும் போது பிளாட்டின் விலைக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ஜி.எஸ்.டி., தொகையையும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டுமா?
ராமராஜன், சென்னை 42
நீங்கள் ஜி.எஸ்.டி., தொகைக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. பில்டர் ஜி.எஸ்.டி.யை தனியாகப் பிரித்து காட்டாமல், மொத்தமாக வீட்டின் விலையோடு பத்திரத்தில் எழுதிவிட்டால், அந்த மொத்த தொகையின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் மதிப்பு குறித்து சார்--பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் கட்டணம் கணக்கிடப்படுமா என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.
அதனால், பத்திர பதிவின் போது ஆவணங்களில் பிளாட்டின் அசல் விலை மற்றும் ஜி.எஸ்.டி., வரி ஆகியவற்றை தனித்தனியாக குறிப்பிடும்படி உங்கள் பில்டரிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுங்கள்.
பில்டருக்கு செலுத்தும் ஜி.எஸ்.டி., வேறு; பத்திர பதிவின்போது செலுத்தும் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் வேறு. ஜி.எஸ்.டி., தொகைக்கு தனியாக முத்திரைத்தாள் அல்லது பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
என் கணவர் அரசுப் பணியிலிருந்து 2.5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். சி.பி.எஸ். திட்டம் எனும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்ததால் ஓய்வுக்கு பின்பு, ஓய்வூதியம் இல்லை; வேறு வருமானம் இல்லை.
நான் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்தும், மறு முறையீடு செய்தும் இதுநாள்வரை கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்டபோது, என் கணவர் அரசும் பணியின் போதும், ஓய்வு பெற்ற பின்பும் (2.5 வருடங்களுக்கு முன்பு) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததை வைத்து விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரியவந்தது. இதற்கு தீர்வு குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
வி.எஸ். தனலட்சுமி, தேனி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தெளிவான அரசாணை உள்ளது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்துபவராகவோ, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்பவராகவோ இருந்தால், அந்த குடும்பம் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.
உங்கள் கணவர் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் பணியில் இருந்த நிதியாண்டிற்கும், அதன் பிறகு ஓய்வுபெற்ற பலன்களில் உள்ள டி.டி.எஸ்.ஐ., திரும்ப பெறுவதற்கும் அவர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்கலாம். அரசு உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, பான் மற்றும் ஆதார் எண்கள் வாயிலாக வருமான வரித்துறையின் தரவுகளை கணினி தானாகவே ஒப்பிட்டு பார்க்கும். அவர் ஐ.டி.ஆர்., தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், உங்களை 'தகுதியற்றவர்' என்று சொல்லி விட்டது.
மேலும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றாலே அவர்களுக்கு பென்ஷன் வரும் என்ற பொதுவான நம்பிக்கை இருப்பதால், சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் இல்லை என்பதற்கான தகுந்த ஆவணங்கள் மூலம் அதிகாரிகளுக்கு புரியவைக்க வேண்டும்.
எனவே, உங்கள் தாலுகாவின் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து உங்களின் தனிப்பட்ட சூழ்நிலையை விளக்குங்கள். அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆவணங்களை வைத்து வலுவாக வாதிட்டால் மட்டுமே இந்த தொழில்நுட்ப சிக்கலுக்குத் தீர்வு காண முடியும்.
