பங்கு நிலுவை ரூ.15,700 கோடியை வசூலிக்க ஏர்டெல் முடிவு
பங்கு நிலுவை ரூ.15,700 கோடியை வசூலிக்க ஏர்டெல் முடிவு
ADDED : டிச 20, 2025 01:58 AM

பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏற்கனவே வழங்கிய உரிமை பங்குகளில் மீதமுள்ள 15,700 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்க, இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 2021ல் கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய்க்கு உரிமை பங்குகளை வெளியிட்டது. அப்போது, பங்கு ஒன்றின் விலை 535 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, இதில் 25 சதவீதம், அதாவது 133.75 ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்தது. மீதமுள்ள 75 சதவீத தொகையை நிறுவனம் கேட்கும்போது வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீதமுள்ள 401.25 ரூபாயை வசூலிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை திருப்பிச்செலுத்த அடுத்தாண்டு மார்ச் 2ம் தேதி முதல் 16ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதியுடன் இந்த பங்குகளின் வர்த்தகம் சந்தைகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலுவை, நிறுவனத்தின் கடனை திருப்பிச்செலுத்தவும், பிற பொது தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், ஏர்டெல் நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியை தவிர்த்து, கடனற்ற நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

