கேளுங்கள்: ஓய்வூதியம் குறித்து காலதாமதமாக யோசிக்கிறீர்களா?
கேளுங்கள்: ஓய்வூதியம் குறித்து காலதாமதமாக யோசிக்கிறீர்களா?
UPDATED : டிச 15, 2025 02:12 AM
ADDED : டிச 15, 2025 02:11 AM

எனக்கு வயது 50. தனியார் நிறுவனத்தில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறேன். இன்னும் எட்டு ஆண்டுகளில் பணி ஓய்வுபெற உள்ளேன். வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களில் சிறந்த பென்ஷன் திட்டங்களை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.
-நித்யா, சென்னை
பணி ஓய்வுகால வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள உங்கள் யோசனை மிகவும் நல்லது. ஆனால், இந்த யோசனையை சிறிது தாமதமாகத்தான் எடுத்திருக்கிறீர்கள். பொதுவாக, ஓய்வு திட்டமிடுதலை 30 வயதுக்கு முன்னதாகவே தொடங்குவது சிறந்ததாக இருக்கும். இருப்பினும், இப்போது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பார்ப்போம்.
உங்கள் பணி இடத்தில் பி.எப்., பிடித்தம் செய்திருந்தால், அதிலிருந்து ஓய்வு பலன்கள் கிடைக்கும். அது எவ்வாறு இருக்கும், - ஒரு மொத்த தொகையா அல்லது மாதந்தோறும் ஓய்வூதியமா - என்று உங்கள் நிறுவனத்திடமிருந்து சரியாக கேளுங்கள். இதற்கான வரி தொடர்பான விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் பென்ஷன் திட்டம் ஒன்றை தொடங்குவதானால், இளைய வயதில் தொடங்கியவர்களுடன் ஒப்பிடும்போது பிரீமியம் அதிகமாக இருக்கும். ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழியாக மட்டுமே செய்வது. இங்கு இதை 'அன்யுட்டி பாலிசி' அல்லது 'பென்ஷன் பாலிசி' என்று சொல்வர்.
நீங்கள் சம்பாதிக்கும் காலம் வரை பிரீமியம் செலுத்தி, பின் ஓய்வூதியம் தொடங்க வேண்டிய நாளை, நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் செலுத்திய தொகைகள் சேர்ந்து உருவாகும் 'பர்சேஸ் ப்ரைஸ்' அப்போது அன்யுட்டி வாங்க பயன்படுத்தப்படும். இதை 'டெபெர்ட் அன்யுட்டி' என்பர். உங்களிடம் முதலீடு செய்ய ஒரு மொத்தத் தொகை இருந்தால், எப்போது வேண்டுமானாலும் 'இம்மீடியெட் அன்யுட்டி' வாங்கலாம்.
அதாவது, காப்பீட்டு நிறுவனத்துக்கு 'பர்சேஸ் ப்ரைஸ்' என ஒரு மொத்தத் தொகை கொடுத்தவுடன், ஓய்வூதியம் உடனே தொடங்கிவிடும். இரு வகையிலும், உங்கள் வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும் ஆப்ஷன் உண்டு. இன்று மனிதர்கள் 90 - 100 வயது வரை வாழ்கின்றனர்; எனவே, இது ஒரு பெரிய நன்மை. உங்களுக்குப் பின்னர், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாமினிக்கு பர்சேஸ் ப்ரைஸ் திரும்பச் செல்லும் வகையும் உள்ளது.
ஓய்வூதிய முதலீட்டுக்கான மற்றொரு வழி தேசிய ஓய்வூதிய திட்டம். இது அரசின் ஆதரவுடன் இயங்குகிறது. அரசு உங்கள் பணத்தை நிர்வகிப்பதில்லை; ஆனால் உங்கள் பங்களிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும், எந்த நிறுவனத்தின் கீழ் நடத்த வேண்டும் போன்ற அனைத்தையும் நீங்கள் தேர்வு செய்யும் வசதியை அரசு வழங்குகிறது.
உங்கள் கே.ஒய்.சி., உள்ளிட்ட ஆவணங்களும் இங்கு பாதுகாப்பாக இருக்கும். உங்கள் பணம் நீங்கள் தேர்வு செய்த திட்டங்களின் அடிப்படையில் முதலீடு செய்யப்படும். என்.பி.எஸ்., திட்டத்தில் நீங்கள் 55 வயது வரை சேர முடியும். ஓய்வூதியம் 60 வயதிலிருந்து அல்லது அதற்கு பின் எப்போது வேண்டுமானாலும் தொடங்க முடியும்.
இரு முறைகளிலும், உங்கள் மொத்த தொகையின் ஒரு பகுதியை வரியின்றி பெறலாம். முழுவதையும் பெற விரும்பினால், உங்கள் சாதாரண வரி விகிதப்படி வரி செலுத்த வேண்டும். மேலும், ஓய்வூதியம் என்பது சாதாரண வருமானம் போலவே வரிக்குட்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

