கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : அக் 28, 2025 12:10 AM

கி ரிப்டோகரன்சியை இந்திய சட்டத்தின் கீழ், டிஜிட்டல் சொத்தாக பார்க்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கிரிப்டோ எக்சேஞ்ச் ஆன வாஷிரக்ஸில், கடந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது பல்வேறு கிரிப்டோக்கள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், இந்திய சட்டத்தின் கீழ், கிரிப்டோகரன்சிகள் சொத்தாக தகுதி பெறுவதாக கூறினார்.
கிரிப்டோகரன்சி என்பது சட்ட பூர்வமானது இல்லை என்றாலும், அது ஒரு சொத்துக்கான அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். வருமான வரி சட்டத்தின் பிரிவு 2(47ஏ)யின் கீழ், கிரிப்டோகரன்சிகளை மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக கருத வேண்டும் என, நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிப்டோ எக்சேஞ்சுகளை சுயாதீன தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்; வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிதிகளை பிரித்து ஆய்வு செய்ய வேண்டும்; கே.ஒய்.சி., நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், உத்தரவில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் போது, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றூம் நிதி பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், நிர்வாக கட்டமைப்புகள் உருவாக வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தீர்ப்பு, கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

