வைப்புநிதி, ‘ஸ்வீப் - இன்’ வைப்புநிதி: - எது அதிக லாபம்?
வைப்புநிதி, ‘ஸ்வீப் - இன்’ வைப்புநிதி: - எது அதிக லாபம்?
UPDATED : அக் 12, 2026 12:00 AM
ADDED : அக் 11, 2026 10:34 PM

நான் கடந்த 9 ஆண்டுகளாக எஸ்.ஐ.பி.,யில், 2,000 ரூபாயை பங்கு சந்தை முகவர் வாயிலாக போட்டு வருகிறேன். அவரும் அதை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து, எனக்கு போர்ட்போலியோ அனுப்புகிறார். இதில் அவருடைய கமிஷன் எவ்வளவு எடுக்கிறார் என்பது தெரிவதில்லை. எனக்கு தெரியாமல் எடுப்பதால், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வாரா?
கலா ரவி, மின்னஞ்சல்.
பெரும்பாலும், முகவர்கள் வாடிக்கையாளரிடம் இருந்து கமிஷன் வசூலிப்பதில்லை. அவர்களுக்கு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே, இத்தகைய திட்டங்களை வளப்படுத்துவதற்காகவும், வாடிக்கையாளர்களை அழைத்து வந்து முதலீடு செய்ய வைப்பதற்காகவும் கமிஷன் கொடுத்து விடுகின்றன. அல்லது, இதுபோன்று செய்யும் பெரிய நிறுவனத்தில் அவர் பணியாளராக இருப்பார். ஒட்டுமொத்தமாக சம்பாதிக்கும் கமிஷனில் இருந்து, இத்தகைய முகவர்களுக்கு அந்த நிறுவனமே சம்பளம் கொடுத்துவிடும்.
செபியின் கடுமையான விதிகளின்படி, முகவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கமிஷன் எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு திட்டத்திற்கும் அதிகபட்சமாக இவ்வளவுதான் செலவு கட்டணம் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) வசூலிக்க வேண்டும் என்ற வரம்பை செபி நிர்ணயித்துள்ளது. இந்த மொத்த செலவு கட்டணத்திற்குள் தான் முகவருக்கான கமிஷனும் அடங்கியிருக்கும்.
நீங்களே உங்களது முதலீட்டை பார்க்கலாமே? அதில், நீங்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு, அதில் அந்தந்த திட்டங்களுக்கான சேவை கட்டணம் எவ்வளவு, அது போக மீதமுள்ள தொகைக்கு எத்தனை யூனிட்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை உங்களுக்கு வரும் போர்ட்போலியோவே சொல்லிவிடும். மேலும், ஒவ்வொரு மாதமும் அல்லது அரையாண்டிற்கு ஒருமுறை, உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையில், உங்கள் முகவருக்கு குறிப்பிட்ட அந்த மாதத்தில் எத்தனை ரூபாய் கமிஷனாக சென்றது என்ற விபரம் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொதுவாக, முகவர் வாயிலாக, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும்போது, தோராயமாக முக்கால் முதல் ஒரு சதவீதம் வரை, பண்டு திட்டங்களின் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
பொதுவாக வட்டி கடைகளிலோ, வங்கிகளிலோ தங்கத்தின் பேரில் தானே கடன் தருகின்றனர். வைரம், பிளாட்டினத்தை அடமானமாக பெற்று கடன் கொடுப்பதில்லையே, ஏன்?
அ.யாழினி பர்வதம்,
சாலிகிராமம்
தங்கத்துக்கு இருக்கும் எளிமையான மறுவிற்பனை மற்றும் மாற்று மதிப்பு, வைரத்துக்கோ பிளாட்டினத்துக்கோ இல்லை. தங்கம் என்பது உலகளவில் எங்கு வேண்டுமானாலும் உடனடியாக விற்று பணமாக்கக்கூடிய மிக அதிகபட்ச பணப்புழக்கம் கொண்ட பொதுவான உலோகம். அதன் துாய்மையையும் எடையையும் கணக்குப்போட்டு, அன்றைய சந்தை மதிப்பை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
பிளாட்டினமும் ஓர் அரிய உலோகம் என்றாலும், தங்கம் அளவுக்கு அதற்கான மறுவிற்பனை சந்தை நம் ஊர்களில் பரவலாக இல்லை. அதேபோல், வைரம் ஒரு ரத்தினக்கல். வைரத்தின் மதிப்பை தீர்மானிக்க அதன் நிறம், வெட்டு (கட்), தெளிவு மற்றும் காரட் (4Cs) உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை ஆராய வேண்டும். இதற்கு பெரிய நிபுணத்துவம் தேவைப்படுவதால், சாதாரண வங்கிகளிலோ அல்லது வட்டிக்கடைகளிலோ வைரத்தின் துல்லியமான மதிப்பை அவர்களால் கணக்கிட முடியாது.
தங்கத்திற்கு இருக்கும் உலகளாவிய நிலையான விலை நிர்ணயம் மற்றும் கணிக்கக்கூடிய சந்தை மதிப்பு இவற்றுக்கு கிடையாது. அடமானம் வைத்தவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால், வைரம் மற்றும் பிளாட்டினத்தை ஏலம் போட்டு உடனடியாகப் பணத்தை மீட்பது வங்கிகளுக்கு பெரிய சவால். அதனால் தான், வட்டிக்கடைகளிலும் வங்கிகளிலும் அவற்றை அடமானமாக ஏற்று கடன் கொடுப்பதில்லை.
பணத்தை ஸ்வீப் - இன் வைப்புநிதியில் வைப்பது சரியா, வழக்கமான வைப்புநிதி திட்டங்களில் வைப்பது சரியா?
சுகன்யா வஜ்ரவேல்,
திண்டுக்கல்
வழக்கமான வைப்பு நிதி தான் எப்போதும் சவுகரியமானது. ஓராண்டுக்கு பணத்தை போட்டு வைத்தால், அதற்குரிய வட்டியை அது ஈட்டித்தரும். ஸ்வீப் – -இன் வைப்பு நிதி என்பது, உங்கள் கணக்கில் பல மாதங்களாக சும்மா துாங்கிக் கொண்டு இருக்கும் உபரி நிதிக்கு கூடுதல் வட்டி ஈட்டித்தர வைப்பது.
இங்கே கவனிக்க வேண்டிய அம்சம், அந்த உபரித்தொகை எப்போது உங்களுக்கு மீண்டும் தேவைப்படும் என்பது தான். ஓராண்டுக்கு மேல் அதை தொட மாட்டீர்கள் என்றால், அதை வழக்கமான வைப்பு நிதி திட்டங்களில் போட்டு, வட்டி வாயிலான வளர்ச்சியை உறுதி செய்துகொள்ளலாம்.
ஒருவேளை நடுவிலேயே பணம் தேவைப்படலாம் என்ற சூழல் இருக்குமானால், அதுவரை, வழக்கமான சேமிப்பு கணக்கு பெற்றுக்கொண்டிருப்பதை விட, சற்றே கூடுதல் வட்டியை ஈட்டுவதற்கு ஸ்வீப் – -இன் வைப்பு நிதி உதவும். ஒன்று சரி, மற்றொன்று சரி என்று எதுவும் இல்லை. வாடிக்கையாளர்களது வசதிக்கேற்ப உருவாக்கப்பட்ட வழிமுறை தான் இந்த ஸ்வீப்- – இன் வைப்பு நிதி.
இந்த ஆண்டு, எனக்கு வரும் மாத சம்பளம் சற்றே உயர்ந்து உள்ளது. இந்த கூடுதல் தொகையை இன்னொரு மியூச்சுவல் பண்டு திட்டத்தின் எஸ்.ஐ.பி.,யில் போடுவதா? அல்லது ஏற்கனவே இருக்கும் எஸ்.ஐ.பி.,க்களில் கூடுதல் தொகையாக சேமிப்பதா? என்ன செய்யலாம்?
பரமேஸ்வரி ஆனந்த், வாட்ஸாப்
மியூச்சுவல் பண்டு திட்டங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது உங்களுடைய வாழ்க்கை தேவைகளை ஒட்டி அமைந்திருக்க வேண்டும். உதாரணமாக, வீடு வாங்க வேண்டும், வெளிநாடு பயணம் போக வேண்டும், வாரிசின் எதிர்கால படிப்புக்கு சேமிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்குகள் நிர்ணயித்து, நீங்கள் எஸ்.ஐ.பி., போட்டு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த திட்டங்கள் உங்களுடைய கனவு நனவாகும் விதமாக தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றனவா என்று பாருங்கள்.
உங்கள் இலக்கை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள திட்டங்களே போதுமான அளவு செயல்படுகின்றன என்றால், உங்கள் கூடுதல் சம்பள பணத்தை ஏற்கனவே உள்ள திட்டங்களில் கூடுதலாக முதலீடு செய்து வருவது தான் உகந்தது. இன்னும் சொல்லப் போனால், உங்கள் இலக்குகளை விரைவாக அடைவதற்கு இந்த உபரி தொகை உதவியாக இருக்கும்.
மியூச்சுவல் பண்டுகளை அவை ஈட்டித்தரும் வருவாயை வைத்தும், உங்கள் இலக்குகளை வைத்தும் முடிவு செய்யுங்கள். முதலீடு செய்யும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகமானால், அதை புரிந்துகொள்வதும், டிராக் செய்வதும் மிகப்பெரிய மண்டையிடியாக மாறிவிடும்.
