UPDATED : அக் 05, 2026 11:11 AM
ADDED : அக் 04, 2026 10:04 PM

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் ஹோம் பைனான்ஸில், மனைவியின் பெயரில் வீட்டுக்கடன் வாங்கினேன். பின், மேல் மாடி கட்ட மீண்டும் அதே இடத்தில் கடன் பெற்றேன். தற்போது அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு கிடைக்கக் கூடிய பணப்பலன்களின் வாயிலாக, அந்த இரு கடன்களையும் அடைத்து விடலாம் என்ற முடிவில் உள்ளேன். இதனால் பயன் உள்ளதா? அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் அடைக்கலாமா?
ஜவஹர் பாபு, மின்னஞ்சல்
இரண்டையும் அடைப்பது தான் சிறப்பு. ஓய்வு காலத்தில் கடனே இல்லாமல், நிம்மதியாக இருப்பது முக்கியம். ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ., செலுத்த வேண்டும் என்ற அழுத்தம் இராது. 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பனே எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்; அது எவ்வளவு பெரிய இம்சை என்று.
ஆனால், உங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு இனிமேல் வரக்கூடிய ஓய்வூதியம் போதுமானதாக இருக்குமா என்று கணக்கு போட்டு பாருங்கள். வீட்டு வாடகை உள்ளிட்ட இதர வருவாய் ஏதேனும் வரும் என்றால், அதையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த பணமெல்லாம் மாதாந்திர செலவுகளுக்கு போதாது என்று தோன்றினால், ஒரு கடனை மட்டும் அடைத்துவிட்டு, இ.எம்.ஐ., சுமையை குறைத்துக் கொள்ளுங்கள்.
நான் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் எடுத்தேன். அந்தக் கடன் தள்ளுபடி ஆகுமா?
பிரசாந்த், நீலகிரி
'கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு சொல்கிறதே. இது தான் ஆரம்பம். த.வெ.க., ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை நிறைவேற்றும் என்று தான் தெரிகிறது.
நம் நாட்டில் பங்குச்சந்தை தொடர்ந்து இறக்கத்தை சந்திப்பதற்கான முக்கிய காரணிகள் என்ன?
முனைவர் கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம்
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்கா நோக்கி செல்கின்றனர். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளில் இருந்து வெளியேறுகின்றனர். கச்சா எண்ணெய் விலையேற்றமும், அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் உயர்வும், நமது ரூபாய் மதிப்பின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதோடு இந்த நிதியாண்டில் ஏராளமான புதிய பங்கு ஐ.பி.ஓ.,க்கள் வந்துள்ளன, வருகின்றன. பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் பெரு நிறுவனங்களும், ஐ.பி.ஓ.,க்களில் பணத்தை போடுவதால், வழக்கமான முதலீட்டில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் மேல், அமெரிக்காவில் ஏற்கனவே கால் சதவீதம் வட்டி உயர்ந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள், இன்னொரு கால் சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இதை பார்க்கும் போது, ஆர்.பி.ஐ.,யும் வட்டியை உயர்த்துமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து தான் பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாகியுள்ளன.
கிரெடிட் ஸ்கோர் விபரங்களை சேகரிக்கிறார்களே, அந்த தகவல்கள் பத்திரமாக இருக்குமா?
வேதகிரி, வில்லிவாக்கம்
பல அடுக்கு பாதுகாப்புடன் தான் உங்களை பற்றிய தகவல்களை கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனங்கள் வைத்துள்ளன. அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் இன்னொருவருடைய கிரெடிட் ஸ்கோர் விபரங்களை பார்த்துவிட முடியாது; பயன்படுத்தவும் முடியாது. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோரை பார்த்தபோது, அதில் நீங்கள் செய்யாத நிதி பரிவர்த்தனை விபரம் இருக்கிறது என்று தோன்றினால், உடனே இரண்டு விஷயங்களை செய்யுங்கள்.
ஒன்று, அந்த கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனத்துக்கு இ - மெயில் அனுப்பி, எது உங்களுடைய பரிவர்த்தனை இல்லையோ அதை குறிப்பிட்டு புகார் அளியுங்கள். அந்த விபரத்தை நீக்க சொல்லி கேளுங்கள்.
இன்னொன்றையும் செய்யலாம். இன்றைக்கு இந்தியாவில் உள்ள நான்கு 'கிரெடிட் ஸ்கோரிங்'நிறுவனங்களும் 'கிரெடிட் பிரீஸ்' அல்லது 'கிரெடிட் லாக்' என்ற ஒரு பூட்டும் வசதியை உருவாக்கி தந்துள்ளன.
அந்த நிறுவனங்களை தொடர்புகொண்டு, 'என்னுடைய கிரெடிட் ஸ்கோர் விபரங்களை யாருக்கும் காண்பிக்க கூடாது' என்று கேட்டுக்கொண்டு, உங்கள் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை பூட்டு போட்டு வைத்துக்கொள்ளலாம். இப்படி செய்யும்போது, எந்த வங்கியோ, இதர நிதி நிறுவனங்களோ, உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பார்க்க அனுமதி கிடைக்காது.
நாளை ஒருவேளை நீங்களே ஏதோ ஒரு கடன் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த பூட்டை நீக்கிவிட்டு தான் கடனுக்கு மனு செய்ய முடியும்.
'எலக்ட்ரானிக் கோல்டு ரெசிப்ட்' என்ற இ.ஜி.ஆர்., கணக்கு எப்போது துவங்கலாம்? எனக்கு ஒரு புரோக்கர் நிறுவனத்தில் டீமேட் கணக்கு உள்ளது.
ஜெகதீசன், உடுமலைப்பேட்டை
கடந்த ஒரு மாதத்தில் பார்க்கும் போது தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3 முதல் 7 சதவீதம் வரை விழுந்திருந்தாலும், கடந்த ஓராண்டில், அதன் விலை 16 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் மேலும் குறையக்கூடும் என்பதால், தங்கத்தின் விலை சரியலாம் என்று சொல்லப்படுவது ஒரு யூகமே, நடந்தால் தான் நிச்சயம்.
ஆனால், இ.ஜி.ஆர்.,ரில் தங்கம் விலையில் உள்ள ஏற்ற இறக்கத்தை கவனத்தில் கொள்ளாமல், எஸ்.ஐ.பி., மாதிரி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இதில் முதலீடு செய்து வந்தால், அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் கணிசமான தங்க சேமிப்பு நடைபெற்றிருக்கும். அதேநேரத்தில் விலை உயர்வால், கணிசமான லாபமும் கிடைத்திருக்கும்.
இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவும். வருங்காலத்தில் உங்கள் குடும்பத்தில் நடைபெறவிருக்கும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் சேர்க்க விரும்பினால், இந்த இ.ஜி.ஆர்.,ரில் முதலீடு செய்து வருவது நல்லது. அன்று, இந்த யூனிட்டுகளை தங்கமாக மாற்றிக்கொள்ளும் போது உதவிகரமாக இருக்கும்.
ஆனால், கையில் தங்கமாக வாங்கப் போவதில்லை, தங்கத்தின் விலை உயர்வை வைத்து மட்டுமே வருவாய் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், தங்க இ.டி.எப்.,பில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில், இ.ஜி.ஆர்.,ரில் போதுமான டிரேடிங் வால்யூம் இன்னும் உருவாகவில்லை. ஆனால், தங்க இ.டி.எப்.,களை வாங்குவோர், விற்போர் அதிகமாக இருப்பதால், அங்கே உங்கள் யூனிட்டுகளை விற்றுவிட்டு வெளியே வருவது சுலபமாக இருக்கும்.
