மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக வட்டி சாத்தியமா?
மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக வட்டி சாத்தியமா?
ADDED : செப் 28, 2026 07:35 AM

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை வைத்துக்கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் சென்று சிறு சிறு நோய்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளலாமா?
ஆர்.ஜி. தாஸ் ஜெயசிங், வாட்ஸாப்
இந்த அட்டையை வைத்துக்கொண்டு எந்த தனியார் மருத்துவமனைக்கும் சென்று, எந்தவொரு சிறிய நோய்க்கும் இலவசமாக வைத்தியம் பார்த்துக்கொள்ள முடியாது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு அங்கீகரித்துள்ள குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கு மட்டுமே காப்பீட்டு வசதி கிடைக்கும். அதுவும், அந்த மருத்துவமனை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், அந்த மருத்துவமனை இந்த காப்பீட்டு திட்டத்தில் உள்ளதா, நீங்கள் பெறப்போகும் சிகிச்சை திட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நான் 'சிபில் ஸ்கோர்' தொடர்பாக ஒரு காணொலி பார்த்தேன். அதில், சிபில் ஸ்கோரை அமெரிக்க நிறுவனம் ஒன்று நிர்வகிக்கிறது. சிபில் என்பதே ஒரு மோசடி. கடன் வாங்காவிட்டால் சிபில் மதிப்பு உயராது. மதிப்பு உயர வாங்கிய கடனை குறித்த காலத்தில் முடிக்கவும் வேண்டும். என கூறப்பட்டது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
ஸ்ரீ. கணேஷ். சென்னை-
சிபில் உள்ளிட்ட நான்கு கிரெடிட் பீரோ நிறுவனங்களிலும், வெளிநாட்டு முதலீடு இருப்பது உண்மைதான். அதில் தவறு எதுவும் இல்லை. கிரெடிட் மதிப்பீட்டுத் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு நீண்டகால முன்னனுபவமும், தொழில்நுட்பமும், மிகப்பெரிய தரவுகளை கையாளும் திறனும், 'அல்காரிதம்' உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.
இந்திய வங்கியியல் துறைக்கும் இத்தகைய கிரெடிட் மதிப்பீட்டு முறைகள் பொருத்தமாக இருப்பதால், அவற்றின் தொழில்நுட்பங்கள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்த நான்கு கிரெடிட் பீரோக்களின் முறையையே பின்பற்றுகின்றன என்று சொல்ல முடியாது. பிரான்ஸ், பெல்ஜியம், சீனா, நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுக்கான உள்ளூர் கிரெடிட் மதிப்பீட்டு முறைகளை கொண்டுள்ளன.
இந்தியாவிலும், தற்போதுள்ள கிரெடிட் ஸ்கோர் முறைக்கு மாற்றாக, ஒருவருடைய யு.பி.ஐ., பரிவர்த்தனைகள், மின்சார கட்டணம், வாடகை போன்ற நிதி நடவடிக்கைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் மாற்று கிரெடிட் ஸ்கோரிங் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தவறு என்பதல்ல. அதே நேரத்தில், நமக்கே உரிய கிரெடிட் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களின் விலைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. ஆனால், வேதாந்தாவும், வேதாந்தா அலுமினியம் நிறுவனமும் நல்ல ரிசல்ட் கொடுத்தும் அதன் பங்கு விலைகள் உயரவில்லையே? எதிர்காலத்தில் அவை உயருமா? வீழ்ச்சி அடையுமா?
பா. சரவணன், செங்கல்பட்டு
தனிப்பட்ட நிறுவனப் பங்குகளைப் பற்றி நான் பேசக்கூடாது. நான் 'செபி' பதிவுபெற்ற பங்கு ஆலோசகன் அல்ல. ஆனால், தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகிய இரு உலோகங்களின் எதிர்காலச் சந்தைத் தேவை மற்றும் விலை உயர்வுக்கான வாய்ப்புகள் குறித்து என்னால் கூற முடியும்.
மின்சார வாகனங்கள், மின்சார உட்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவுக்கான டேட்டா சென்டர்கள் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியால் தாமிரத்துக்கான எதிர்காலத் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், தாமிரம் உள்ளிட்ட உலோகங்களின் விலை மற்றும் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களால் அலுமினியத்திற்கான பயன்பாடும் அதிகரிக்கலாம்.
சந்தையில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்டகாலத்தில் இந்த இரு உலோகங்களுக்கான தேவை வலுவாக இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்து.
கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் நிரந்தர வைப்புத் தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குவதாக தினமலரில் செய்தி வந்தது. அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கு 8.20 சதவீதம் வட்டி தரும் நிலையில், கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்வது பாதுகாப்பானதா; நம்பிக்கையானதா?
நெடுமாறன், துறையூர், திருச்சி மாவட்டம்.
போஸ்ட் ஆபிஸில் ஐந்தாண்டு 'டைம் டிபாசிட்' திட்டத்தில் 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் விசாரித்ததில், நிரந்தர வைப்பு தொகைக்கு 8.25% வட்டி தருவதாக சொல்கிறார்கள். மத்திய அரசு நிறுவனமான போஸ்ட் ஆபிஸைவிட, மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக வட்டி தருவது சாத்தியமா? பாதுகாப்பா?
நவீன், பெரம்பலுார்
வட இந்தியாவில் பல கூட்டுறவு சங்கங்கள் மூழ்கிப் போனதால், நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூட்டுறவு சங்கங்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒட்டுமொத்த முத்திரை குத்துவதும் தவறு. இன்றும் பல சங்கங்கள் ஆரோக்கியமாக நடந்து வருகின்றன.
நீங்கள் எந்தக் கூட்டுறவு சங்கத்தில் பணம் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களோ, அவர்களுடைய வரவு செலவு கணக்குகளைப் பாருங்கள். தங்க நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பாதுகாப்பான கடன்களில் தான் அவர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றால், கவலை இல்லை.
பாதுகாப்பில்லாத கடன்களின் அளவு என்ன என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். வாராக்கடன் அளவையும் தெரிந்துகொள்ளுங்கள். வட்டி அதிகம் தருகிறார்கள் என்று அதன் அருகே போக வேண்டாம். கூட்டுறவு வங்கி 'டெபாசிட் இன்சூரன்ஸ் அண்டு கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' காப்பீட்டின் கீழ் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்
எனது மகள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வீட்டின் பத்திரம் கொடுத்து, கல்வி கடன் 18 லட்சம் வாங்கினேன். இப்போது 23 லட்சம் கட்ட சொல்கின்றனர். மிகவும் சிரமப்பட்டதுடன் அலைகழிக்கப்பட்டு, சொந்த ஊரில் இருந்த வீடு நிலம் விற்று 23 லட்சம் ரூபாய் கட்டி உள்ளேன். இது நியாயமா?
பொன்னு சேதுராஜ், காரைக்குடி
உங்கள் வேதனை புரிகிறது. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள். உங்கள் குழந்தை போல் இன்னொரு குழந்தை படிக்க காத்திருக்கிறது அல்லவா? அந்தக் குழந்தைக்கு இதே வங்கிதானே கடன் கொடுத்தாக வேண்டும்? நீங்கள் திருப்பிச் செலுத்திய தொகையில் இருந்து, இன்னொரு குழந்தை படிக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியோடு இந்த வேதனையை கடந்து செல்லுங்கள்.
