ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: நிலையான மதிப்பை உருவாக்கும் பஜாஜ் ஆட்டோ
ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: நிலையான மதிப்பை உருவாக்கும் பஜாஜ் ஆட்டோ
UPDATED : டிச 07, 2025 01:19 AM
ADDED : டிச 07, 2025 01:17 AM

இந்தியாவின் பிரபலமான 'பஜாஜ்' குழுமத்தின் ஓர் அங்கமாக 'பஜாஜ் ஆட்டோ லிமிடெட்' நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் கடந்த 1945ம் ஆண்டு, 'பஞ்ச்ராஜ் டிரேடிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனமாக துவக்கப்பட்டது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்து வந்தது. அதன்பிறகு 1960ம் ஆண்டு, ஜூன் மாதம், 'பஜாஜ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் 'நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
![]() |
இந்நிறுவனத்தின் 55.04 சதவீத பங்குகள் புரோமோட்டர்கள் வசம் உள்ளது. இந்தியாவில் ஐந்து இடங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் 72 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
உள்நாட்டு மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்நிறுவனம் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து அதிகளவு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தகவலின் படி, உள்நாட்டு மோட்டார் சைக்கிள் சந்தையில் 2024 - -25ம் நிதியாண்டின் படி, 16.6 சதவீத சந்தையை வைத்துள்ளது. ஏற்றுமதி சந்தையில் 46.2 சதவீதத்தை வைத்துள்ளது.
இருப்பினும், உள்நாட்டில் தன் சந்தையை சற்றே இழந்துள்ளது. இதற்காக நிறுவனம் ஏற்கெனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்தவும், 125 சி.சி.,+ இருசக்கர வாகன சந்தையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
![]() |
மூன்று சக்கர வாகன சந்தையிலும் 75 சதவீத சந்தையுடன் (2024- - 25ம் நிதியாண்டின் படி) முன்னணி நிறுவனமாக உள்ளது. ஏற்றுமதியில் 45 சதவீத சந்தையை வைத்துள்ளது. 2024 -- 25ம் நிதியாண்டின் படி, மொத்த விற்பனையில் 40 சதவீதம் ஏற்றுமதி மூலமாக வருகிறது.
பஜாஜ் ஆட்டோ பல்வேறு வகையான பிரீமியம், எக்ஸ்கியூட்டிவ் பிரிவுகளிலும் சேவையை வழங்கி வருகிறது. மூன்று சக்கர வாகனப் பிரிவில், பயணியர் வாகனப் பிரிவு மற்றும் சரக்கு வாகனப் பிரிவில் மிக வலுவான தயாரிப்புகளை கொண்டிருக்கிறது.
மின்சார வாகனம் தயாரிப்பு
பல்வேறு நிறுவனங்கள் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்புகளை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி வரும் சூழலில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இருசக்கர வாகன பிரிவில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
'சீட்டாக்' என்ற பிராண்டை எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்த பிராண்டு, எலெக்ட்ரிக் வாகன சந்தையில், 2025 - -26 நிதியாண்டின் படி முதல் மூன்று இடங்களுக்குள் ஒன்றாக உள்ளது. மேலும் மூன்று சக்கர வாகனப் பிரிவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் மூன்று சக்கர பயணிகள் மற்றும் சரக்கு வாகன எல்5 பிரிவில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களுக்குள் ஒரு நிறுவனமாக உள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் 2024--25ம் நிதியாண்டில், 17 சதவீத வருவாய் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் இருந்து வருகிறது.
பிரீமியம் சந்தை
மாறிவரும் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப 125சிசி-க்கும் அதிகம் கொண்ட வாகனங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் 70 சதவீத விற்பனை பிரீமியம் இரு சக்கர வாகனப் பிரிவில் இருந்து வருகிறது. மேலும் சர்வதேச நிறுவனமான 'டிரையம்ப்' உடன் 2017ம் ஆண்டு கூட்டு சேர்ந்தது. 2023-ம் ஆண்டு, இரு நிறுவனங்களும் இணைந்து, 'ஸ்பீடு 400, ஸ்கிராம்ளர் 400' என்ற இரு டிரையம்ப் வாகனங்களை அறிமுகப்படுத்தின.
மேலும், இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் விற்பனை பிரிவையும் பஜாஜ் எடுத்துக் கொண்டது. இந்தியாவில் இந்த விற்பனை மையங்கள் எண்ணிக்கை 15லிருந்து 78 ஆக தற்போது உயர்ந்துள்ளது.
கேடிஎம் கையகப்படுத்துதல்
நெதர்லாந்தை மையமாக கொண்டு இயங்கும் தனது துணை நிறுவனமான, 'பஜாஜ் ஆட்டோ இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ்' வாயிலாக, கேடிஎம், ஹ்ஸ்குவர்னா, கேஸ்கேஸ் ஆகிய பிராண்டுகளின் தாய் நிறுவனமான பியரரர் மொபிலிட்டி நிறுவனத்தின் 74.9 சதவீத பங்கை கைவசப்படுத்தியது.
இந்த கையகப்படுத்துதலுக்கு பிறகு, பியரரர் மொபிலிட்டி நிறுவனத்தின் தற்போதைய வருவாயான 1.9 பில்லியன் யூரோ மூலமாக (2024ம் ஆண்டின் படி) பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள்
கடந்த 2024--25ம் நிதியாண்டில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. இந்த முதலீட்டில் பெரும்பாலும் எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளது.
மேலும் பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பை மேம்படுத்தவும் இந்த முதலீட்டை பயன்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த முதலீட்டு செலவினத்தில் 420 கோடி ரூபாய் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்த முன்முயற்சிகளுக்கு செலவிடப்பட்டது. இதில் புதிய மூன்று சக்கர எலெ க்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையும் அடங்கும்.
அடுத்த நிதியாண்டில் 2026--27ல் நிறுவனம் 700- 800 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதிலும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் 60 சதவீத முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம், நிறுவனம் 40 லட்சம் பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து திரும்ப பெற்றுக்கொண்டது. இது மொத்த பங்குகளில் 1.41 சதவீதமாகும்.
மேலும் ஒரு பங்கு விலை 10,000 ரூபாய் என்ற விலையில் திரும்ப பெற்றுக்கொண்டது. கிட்டத்தட்ட எஞ்சியிருந்த 4,000 கோடி ரூபாயை இதற்கு பயன்படுத்தி ஒரு பங்கு அளவீடுகளை மேம்படுத்த பயன்படுத்தியது.
மேலும் 2024--25ம் நிதியாண்டில், வரிக்கு பிந்தைய வருமானத்தில் 80 சதவீதத்தை, டிவிடெண்டாக பங்குதாரர்களுக்கு வழங்கியுள்ளது. வளர்ச்சி சார்ந்த முதலீடுகளுக்கு முழுமையாக நிதியளிக்கப்பட்ட பிறகு உள்ள பணத்தை திரும்ப பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு தெளிவான கொள்கையை இது காட்டுகிறது.
இத்தகைய செயல்பாட்டு உறுதியும், கட்டுப்பாடான முதலீட்டு ஒதுக்கீடு அணுகுமுறையும், பஜாஜ் ஆட்டோவை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிலையான மதிப்பு உருவாக்கும் நிறுவனமாக நிலைநிறுத்துகின்றன.
பொறுப்பு அறிக்கை
நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ, இந்த பங்குகளை வைத்திருக்கலாம்; வாங்கிக் கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.



