ஃபண்டமென்டல் அனாலிசிஸ் :மாற்றத்துக்கான பாதையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் :மாற்றத்துக்கான பாதையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
UPDATED : அக் 19, 2025 02:09 AM
ADDED : அக் 19, 2025 02:04 AM

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்'. எனர்ஜி, சில்லறை வணிகம், டிஜிட்டல் சேவைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கிளீன் எனர்ஜி என பெரும்பாலான துறைகளில், இந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் இயங்கி வருகிறது.
![]() |
தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ஜியோவுக்கு, 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 5ஜி சேவையை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், 'ஜியோ ஏர் பைபர்' உலகின் மிகப் பெரிய 'பிக்ஸட் ஒயர்லஸ்' சேவையை வழங்கிவரும் பிராண்டாக உயர்ந்துள்ளது.
மாதந்தோறும் 10 லட்சம் வீடுகளுக்கு, புதிய சேவை ஜியோ ஏர் பைபர் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு சேவையில் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐ.பி.ஓ.,வும் வர இருக்கிறது இந்நிறுவனத்தின் மதிப்பு 11.44 - 13.20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது.
சில்லரை வணிகம் இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமான ரிலையன்சுக்கு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 19,000 ஸ்டோர்கள் உள்ளன. மேலும், ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 ஸ்டோர்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத விற்பனை, நேரடி விற்பனை வாயிலாக வருகிறது.
![]() |
ஆன்லைன் விற்பனையையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் வருவாய் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று ஆண்டுகளில், 20 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்.எம்.சி.ஜி., நிறுவனமான 'ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்' கடந்த 2024--25ம் நிதியாண்டில் மட்டும் 11,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா நாடுகளில் தனது சந்தையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆட்டோமேஷன், ஏஐ, புட் பார்க்ஸ் உள்ளிட்டவற்றில் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளது.
புதிய கவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மிக முக்கிய வணிகமாக இப்பிரிவு உள்ளது. கடந்த 2024--25ம் நிதியாண்டில், கிட்டத்தட்ட 720 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்துள்ளது இந்நிறுவனம். சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுவதால், இந்த தொழிலுக்கான லாப வரம்பு வலுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய திட்டங்களில் 75,000 கோடி ரூபாயை முதலீடு செய்து வருகிறது. அத்துடன் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் மற்றும் கிரீன் கெமிஸ்ட்டிரி துறைகளிலும் புதிதாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
நியூ எனர்ஜி அடுத்த ஏழு ஆண்டுகளில் நியூ எனர்ஜி தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாம்நகரில் தற்போது உலகின் மிகப்பெரிய கிளீன் எனர்ஜி திட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் சூரியசக்தி பிவி பிளாட்பார்ம் தற்போது உயர் திறன் கொண்ட எச்.ஜே.டி., மாட்யூல்கள் உற்பத்தியையும் தொடங்கியுள்ளது.
இதை 20 கிகாவாட் திறனுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 40 கிகாவாட் திறன் கொண்ட பேட்டரி கிகா தொழிற்சாலை, மற்றும் 3 கிகாவாட் எலக்ட்ரோலைசர் ஆலை ஆகியவை தற்போது கட்டுமானத்தில் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2032ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 30 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பயோ எனர்ஜியிலும் முதலீடு செய்து வருகிறது. தற்போது 55 கம்பிரஸ்ட் பயோகேஸ் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 2030க்குள் 500க்கும் மேற்பட்ட ஆலைகளை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டலிஜன்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய கருதுகோளாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக, 'ரிலையன்ஸ் இண்டலிஜன்ஸ்' என்ற துணை நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம் ஜாம்நகரில் கிகாவாட் அளவிலான டேட்டா சென்டர்கள் அமைப்பதாகும்.மேலும் 'மெட்டா' நிறுவனத்துடன் இணைந்து, எல்.எல்.ஏ.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஏ.ஐ., தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கூகுள் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில், சிறப்பு 'ஏ.ஐ., கிளவுட்' பிராந்தியத்தை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்கவும் ரிலையன்ஸ் முதலீடு செய்து வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மாற்றத்துக்கான பாதையில் உள்ளது. செயல்படுத்துவதில் உள்ள சிரமம் மற்றும் எரிசக்தி துறையில் சில அபாயங்கள் இருந்தாலும், அடுத்த 10 ஆண்டுகளில், மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்த ௧0 ஆண்டுகளில், மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஷ்யாம் சேகர்,
ஐதாட்பிஎம்எஸ் பங்கு ஆய்வு குழு