சேமிப்பில் இருந்து முதலீட்டுக்கு மாறும் இந்தியர்கள்; தேசிய பங்கு சந்தை ஆய்வறிக்கை தகவல்
சேமிப்பில் இருந்து முதலீட்டுக்கு மாறும் இந்தியர்கள்; தேசிய பங்கு சந்தை ஆய்வறிக்கை தகவல்
UPDATED : டிச 20, 2025 02:02 AM
ADDED : டிச 20, 2025 02:01 AM

நடப்பாண்டில் இந்திய பங்குச் சந்தையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 4.50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக, தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
என்.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய குடும்பங்கள், தங்களின் சேமிப்பை வங்கி வைப்புத்தொகை போன்ற பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி, மியூச்சுவல் பண்டு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, 2019ம் ஆண்டில், 3 கோடியாக இருந்த தனிநபர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில் 12 கோடியாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வரும் நிலையிலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் பலத்தால், இந்திய சந்தை நிலையாக உள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு நிப்டி 50 குறியீடு 10.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2020 முதல் தற்போது வரை, இந்திய குடும்பங்கள், சந்தை சார்ந்த திட்டங்களில், 17 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து உள்ளன.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு காரணமாக, மக்கள் ரொக்கமாக பணத்தை வைத்திருப்பது குறைந்துள்ளது. அதேபோல, பாதுகாப்பான சேமிப்பைத் தாண்டி ஆபத்துகள் இருந்தாலும், அதிக வருவாய் தரும் பங்கு சார்ந்த முதலீடுகளை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர். இவைதவிர, உலகளாவிய அரசியல், பொருளாதார பதற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியிலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.


