மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு ரூ.80.80 லட்சம் கோடியாக உயர்வு
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு ரூ.80.80 லட்சம் கோடியாக உயர்வு
UPDATED : டிச 12, 2025 01:42 AM
ADDED : டிச 12, 2025 01:41 AM

பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கடந்த நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், 21 சதவீதம் அதிகரித்து, 29,911 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான 'ஆம்பி' தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்களாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடுகள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளது.
![]() |
![]() |
அதேநேரம், கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து, 25,693 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஆனால், முந்தைய அக்டோபர் மாதத்தில் 1.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
நிறுவன முதலீட்டாளர்கள், பணப்புழக்கத்தை நிர்வகிக்க, 'ஓவர்நைட்' மற்றும் 'லிக்விட்' பண்டுகளில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக, சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டும் மியூச்சுவல் பண்டுகளின் எஸ்.ஐ.பி., முறையில் 29,445 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், பெரிய மாற்றமில்லை என ஆம்பி கூறியுள்ளது. கோல்டு இ.டி.எப்., பண்டுகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்திருப்பதும், ஆம்பி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மியூச்சுவல் பண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 80.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.



