மினிமம் பேலன்ஸை வங்கி அதிகரித்தால் என்ன செய்யலாம்?
மினிமம் பேலன்ஸை வங்கி அதிகரித்தால் என்ன செய்யலாம்?
ADDED : செப் 14, 2025 01:44 AM

கடந்த மாதம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை அதிகரித்தபோது, அது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மக்களின் விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த வங்கி, தன் அதிகபட்ச தொகையைக் குறைத்தது.
எதற்காக குறைந்தபட்ச இருப்பு தொகை?
சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் அதிகபட்ச தொகை, வங்கிக்கு ஒருவித 'இலவச இரை' போல உதவுகிறது. ஏனென்றால், அந்தப் பணத்திற்கு வங்கி வெறும் 2.50 சதவீத வட்டி மட்டுமே வழங்குகிறது.
குறைந்தபட்ச தொகையை அதிகரித்தால் என்ன செய்யலாம்?
பொதுத்துறை வங்கிக்கு மாறலாம்: அதிக மினிமம் பேலன்ஸ் தொகை தேவைப்படும் தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அதை மூடிவிட்டு, ஒரு பொதுத்துறை வங்கியில் புதிய கணக்கைத் துவங்கலாம்.
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு, கட்டணம் விதிப்பதில்லை. இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதமும் தனியார் வங்கிகளுக்கு இணையாக 2.50 சதவீதமாகவே உள்ளது.
குறைந்த தொகை தேவைப்படும் தனியார் வங்கிகள்: சில தனியார் வங்கிகள், குறைந்த மினிமம் பேலன்ஸ் கணக்குகளையும் வழங்குகின்றன. எந்த வங்கி உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை ஆராய்ந்து முடிவெடுங்கள்.
ஜீரோ பேலன்ஸ் கணக்கு: சில தனியார் வங்கிகள் 'ஜீரோ பேலன்ஸ்' சேமிப்புக் கணக்குகளையும் வழங்குகின்றன. ஆனால், இந்த கணக்குகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இவ்வகை கணக்குகளுக்கான கட்டுப்பாடுகள்:
ஓராண்டில் மொத்த வரவு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது
கணக்கில் உள்ள அதிகபட்ச தொகை, எந்த நேரத்திலும் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது
ஒரு மாதத்தில் ரொக்கப் பணம் எடுத்தல் மற்றும் பணப் பரிமாற்றம் வாயிலான மொத்தப் பற்று, 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது
வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை கே.ஒய்.சி., நடைமுறையை முடிக்காமல் இந்த கணக்கில் வரவு வைக்க முடியாது.
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் என்ற எண்ணம் தவறானது. எந்த ஒரு தனிநபரும் இந்த கணக்கைத் துவக்கலாம். ஆனால் ஒரு வங்கிக்கு ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
மற்ற கணக்குகள் ஏதேனும் இருந்தால், இந்த கணக்கைத் தொடங்கிய 30 நாட்களுக்குள் அவற்றை மூடிவிட வேண்டும்.
மியூச்சுவல் பண்டில் முதலீடு: உங்கள் சேமிப்புக் கணக்கு போதுமான வருமானம் தரவில்லை என்று நீங்கள் நினைத்தால், மினிமம் பேலன்ஸ் தொகைக்கு மேல் இருக்கும் பணத்தை லிக்யூட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
இந்த பண்டுகள் ஓரளவுக்கு மிதமான ரிஸ்க் உள்ளவை. கடந்த ஆண்டில் இவை சராசரியாக, 6.60 சதவீத வருமானம் தந்துள்ளன.

