UPDATED : டிச 22, 2025 01:33 AM
ADDED : டிச 22, 2025 01:17 AM

ஒரு வங்கியின் வாயிலாக எடுத்த மருத்துவ காப்பீட்டு பாலிசியை புதுப்பித்தோம் . அப்போது ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது. மத்திய அரசு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டு பாலிசிகளுக்கான ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த அறிவிப்புக்கு பிறகு புதுப்பித்த பாலிசிக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுவது சரியானதா?
- சுவாமிநாதன், சென்னை.
நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மருத்துவ காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி., நீக்கப்பட்ட பிறகு, செலுத்த வேண்டிய மற்றும் செலுத்தப்பட்ட பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி., கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டிருந்தால், அதை திருப்பிச் செலுத்துமாறு கேட்டு காப்பீட்டு நிறுவனத்துக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளியுங்கள்.
எனக்கு தெரிந்த நபர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்தபோது அவருக்கு விபத்து காப்பீடான ஆக்ஸிடென்ட் பெனிபிட் கவருக்கான கட்டணத்தை கேட்கவில்லை. அவரும் கட்டவில்லை. இந்த சூழ்நிலையில், பாலிசிதாரருக்கு விபத்தால் மரணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அடிப்படை காப்பீட்டு தொகையை நாமினி கிளைம் செய்து செய்து பெறலாமா?
மின்னஞ்சல்
விபத்து காப்பீடு என்பது ஆயுள் காப்பீடு பாலிசிக்கு இணைக்கப்படும் ஒரு ரைடர் அல்லது கூடுதல் காப்பீடு ஆகும். பாலிசிதாரர் இதனைத் தேர்வு செய்து, அதற்கான கூடுதல் பிரீமியத்தை செலுத்தினால் மட்டுமே இந்த நலன் அமலுக்கு வரும்.
மரணம் விபத்தால் ஏற்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் குறிப்பிடப்பட்ட அடிப்படை காப்பீட்டு தொகை நாமினிக்கு வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் நாமினி கிளைம் செய்யலாம்.
பாலிசியை விற்பனை செய்த முகவர் அல்லது புரோக்கரை அணுகலாம்; அல்லது நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு, கிளைம் செயல்முறையை தொடங்கலாம்.
காப்பீடு செய்வதற்கான வயது வரம்பு என்ன? தடைப்பட்ட காப்பீடு திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க எத்தனை ஆண்டு வரை காலவரம்பு உள்ளது?
- அ. யாழினி பர்வதம், சென்னை.
ஒவ்வொரு வகை காப்பீடுக்கும் சேரும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆயுள் காப்பீடு பொதுவாக 18 வயது முடிந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. புதிய பாலிசியை பெரும்பாலும் 60 வயது வரை, சில பாலிசிகளில் 65 வயது வரை, தொடங்க முடியும். அதிக வயதினருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பாலிசிகளும் சந்தையில் உள்ளன.
தனிப்பட்ட விபத்து காப்பீடுகளும் இதே போன்ற வயது வரம்புகளைப் பின்பற்றுகின்றன.
மருத்துவ காப்பீடு குழந்தைகள் பிறந்து 90 நாட்கள் நிறைவடைந்தவுடன் கூட எடுத்துக் கொள்ள முடியும். எந்த வயதிலும் பாலிசியை தொடங்க முடியும், ஆனால் 60 அல்லது 65 வயதுக்குப் பிறகு புதிய பாலிசி வாங்குவது கடினமாகிறது.
காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை, கடைசியாக பிரீமியம் செலுத்திய நாளிலிருந்து பொதுவாக 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் செயல்படுத்த முடியும். இதுவும் பாலிசி விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதுகுறித்து உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி, கிடைக்கும் வாய்ப்புகள் பற்றி எழுத்துப்பூர்வமாக பதில் பெற்றுக் கொள்ளுங்கள்.
மருத்துவ காப்பீடு பாலிசிகளைப் பொறுத்தவரை, காலக்கெடுவுக்குள் புதுப்பிக்க வேண்டும். சலுகைக் காலம் உள்ளது. ஆனால் அது கடந்துவிட்டால், புதிய பாலிசி வாங்குவது மட்டுமே வழி.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில், என் கால் எடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டும் பிரதம மந்திரி விபத்து காப்பீடை வங்கி வாயிலாக பெறுவது எப்படி? ஏற்கனவே வங்கியை அணுகிய போது, முறையான பதிலில்லை. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
- மணிவண்ணன், கோவை
விபத்தால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கும் துன்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
விபத்து நடந்ததற்கு முன்பே நீங்கள் ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டும் 'பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா' பாலிசியை வைத்திருந்தீர்களா, அல்லது இப்போது அதில் சேர விரும்புகிறீர்களா என்பது தெளிவாக இல்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற, விபத்து நடந்த நேரத்தில் உங்கள் பாலிசி செல்லுபடியாக இருக்க வேண்டும். இது எந்தக் காப்பீட்டுக்கும் பொருந்தும் அடிப்படை விதிமுறை.

விபத்து நடந்தபோது உங்களுக்கு இந்த காப்பீடு இருந்திருந்தால், ஆண்டு பிரீமியம் கழிக்கப்படும். உங்கள் வங்கி கணக்கு உள்ள வங்கி இழப்பீடு க்ளைம் செயல்முறையில் உங்களுக்கு உதவ வேண்டும். இதுவரை செய்யவில்லை என்றால், தயவுசெய்து உடனடியாக இழப்பீடு கிளைம் பதிவு செய்யுங்கள். இதற்கான படிவத்தை h ttps://jansuraksha.in/assets/PDF/ClaimForm_PMSBY.pdf எனும் இணைய முகவரியில் பெறலாம்.
படிவத்தை நிரப்பி, அதில் குறிப்பிடப்பட்ட ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்., மற்றும் மருத்துவமனை அல்லது சிவில் சர்ஜன் வழங்கும் ஊனமுற்றதற்கான சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
காப்பீட்டு இழப்பீடு தொடர்பான அனைத்து எழுத்துப்பூர்வ தொடர்புகளின் நகல்களையும் கவனமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில், இது அனைத்து நிதித் திட்டங்களுக்கும் பொருந்தும் நல்ல நடைமுறை.
விபத்து நடந்த 30 நாட்களுக்குள் இழப்பீடு கிளைம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. தாமதம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் ஏற்கனவே வங்கியை அணுகிய போதும் சரியான பதில் கிடைக்காததால்தான் கிளைம் தாமதமானது என்பதை விளக்கும் ஒரு கடிதத்தையும் இணைத்து சமர்ப்பிக்கவும்.

