தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மஹாராஷ்டிராவில் புயலை கிளப்பிய ரூ.500 கோடி ‘டீல்’ ஆடியோ சர்ச்சை: உத்தவ் சிவசேனா மீது பா.ஜ., குற்றச்சாட்டு

மஹாராஷ்டிராவில் புயலை கிளப்பிய ரூ.500 கோடி ‘டீல்’ ஆடியோ சர்ச்சை: உத்தவ் சிவசேனா மீது பா.ஜ., குற்றச்சாட்டு

மஹாராஷ்டிராவில் புயலை கிளப்பிய ரூ.500 கோடி ‘டீல்’ ஆடியோ சர்ச்சை: உத்தவ் சிவசேனா மீது பா.ஜ., குற்றச்சாட்டு


UPDATED : அக் 24, 2026 09:26 PM

ADDED : அக் 24, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 09:26 PM ADDED : அக் 24, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., மற்றும் சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆடியோவை எதிர்க்கட்சியினர் உருவாக்கி உள்ளனர் என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2024 சட்டசபை தேர்தல் நெருங்கிய சமயத்தில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் நடந்தது.

இந்நிலையில், அந்த போராட்டத்தை நசுக்க பா.ஜ., திட்டமிட்டதாக போராட்டக் குழு தலைவர் மனோஜ் ஜராங்கே குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டார். அதில், ‘போராட்டத்தை ஒடுக்க பா.ஜ.,விடம் இருந்து 500 கோடி ரூபாயை பெற்ற, துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, அதை தன் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம் ஜராங்கேவிடம் கொடுக்க ஏற்பாடு செய்தார்’ என, பேசப்படும் குரல் பதிவாகி இருந்தது.

இதனை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறுத்தார்.

இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன் கைகோர்த்து, ஏக்நாத் ஷிண்டே, ஜராங்கே மற்றும் பா.ஜ., இடையே பிளவை ஏற்படுத்தும் சதித் திட்டத்தை உத்தவ் சிவசேனா அரங்கேற்றி வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவ்நாத் பன் நேற்று கூறியதாவது:

நவி மும்பையின் வாஷி பகுதியில் ‘வார் ரூம்’ அமைத்து, அங்கு இருந்தபடிதான் உத்தவ் சிவசேனாவின் எம்.பி., சஞ்சய் ராவத் இந்த சதியை ஒருங்கிணைத்துள்ளார். சிவசேனாவின், ‘சாம்னா’ பத்திரிகை அலுவலகத்தில் இதற்கான திரைக்கதை எழுதப்பட்டு, யூ டியூப்பில் உள்ள குரல் மாதிரிகளை சேகரித்து ஏ.ஐ., மூலம் அந்த ஆடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டத்திற்காக ராகுலிடம் இருந்து சஞ்சய் ராவத் ஏதேனும் நிதி பெற்றாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் மஹாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலானய்வு குழுவை அமைத்துள்ளார். மேலும், ஆடியோவின் உண்மைதன்மையை கண்டறிய தடயவியல் சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us