ADDED : அக் 24, 2026 09:17 PM
புதுச்சேரி: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, இன்று முதல் 27ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அதன்படி, இன்று (25ம் தேதி) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்திலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இதேபோல், 26 மற்றும் 27ம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, மணிக்கு 90 முதல் 165 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே சூறாவளிக்காற்று 185 கி.மீ வரை வேகமெடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாட்களில் கடல் பகுதிகளுக்கு புதுச்சேரி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
