ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் கல்மாடி "எய்ம்ஸ்'சில் அனுமதி
ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் கல்மாடி "எய்ம்ஸ்'சில் அனுமதி
ADDED : ஆக 01, 2011 11:32 PM
புதுடில்லி: காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஆண்டு டில்லியில் நடந்தன. இப்போட்டிக்கான ஆயத்த ஏற்பாடுகள் துவங்கியது முதலே, ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி,67, கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கடந்த மாதம் 19ம் தேதி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதில், இவருக்கு ஞாபக மறதி நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக, டாக்டர்கள் கூறியதாக, கல்மாடியின் உறவினர்கள், திகார் சிறை அதிகாரிகளிடம் விவரங்களை அளித்தனர். இந்நிலையில், அவர், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று காலை 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதியம் 3.30 மணிக்கு தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதய நிபுணர் டாக்டர் பத்மா மற்றும் ராகேஷ் யாதவ், ஆர்த்தி விஜ் ஆகிய டாக்டர்கள் அடங்கிய குழுவினர், கல்மாடிக்கு பரிசோதனை நடத்த உள்ளனர். அனைத்து பரிசோதனைக்காக 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் சிறை துறை சார்பில் செலுத்தப்பட்டது. நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் அவருக்கு இருப்பதால் அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்படும், என டாக்பர் பத்மா தெரிவித்துள்ளார்.