ADDED : ஆக 21, 2024 02:15 AM
திருவனந்தபுரம், கேரளாவில், பிரபல நடிகை மீது, 2017ல் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகாரை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை மாநில அரசு அமைத்தது. மலையாள திரையுலகில் பெண்களின் நிலை குறித்து இந்த கமிட்டி ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான விபரங்களை கமிட்டி தெரிவித்துள்ளது. 'இச்சைகளுக்கு இணங்குபவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மறுப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தலையிட்டு உடனடி விசாரணை நடத்த மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
“நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரையின்படி, படப்பிடிப்பு தளங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குறைகளை தீர்க்கவும் கமிட்டிகளை உருவாக்கும்படி அரசுக்கு பரிந்ரைப்போம்,” என, மகளிர் ஆணைய தலைவி சதி தேவி தெரிவித்தார்.

