ADDED : ஜன 19, 2025 01:55 AM
அமராவதி ஆற்று பாலத்தில்குடிநீர் குழாய் உடைப்பு
கரூர்,:கரூர், அமராவதி ஆற்று புதிய பாலத்தில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு சராசரி அளவை விட, அதிக மழை பெய்தாலும், தொடர்ந்து மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. அமராவதி, காவிரி ஆற்று தண்ணீரை நம்பி மக்கள் இருக்கின்றனர். கரூர் மாநகராட்சியில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
இந்நிலையில், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே, அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் வீணாக சாலையில் சென்றது. நகரின் பல பகுதிகளில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல், மாநகராட்சி உள்ளது. கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், குடிநீர் வீணாகும் சம்பவம் நகர மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

