ADDED : செப் 03, 2011 10:16 PM

புனே : ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே மேற்கொண்ட அகிம்சை வழி போராட்டத்தை கவுரவிக்கும் வகையில், மராத்தி மொழியில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
அவரது அகிம்சை வழி போராட்டம், இந்திய இளைஞர்களிடையே புது எழுச்சியை உருவாக்கியுள்ளது. அன்னா ஹசாரேயின் அகிம்சை வழிமுறையில் ஈர்க்கப்பட்டு, அதன் அடிப்படையில், 'மலா அன்னா வாச்சாய்' (அன்னாவாக விரும்புகிறேன்) என்ற பெயரில் மராத்தி திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
இதுகுறித்து, அந்த திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் சிண்டே கூறியதாவது:ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து இளைஞன், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் தனக்கு ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்வதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.ஒருகட்டத்தில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்வதுடன், ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் நாட்டு மக்கள் பங்கெடுக்குமாறு, அவர் அழைப்பு விடுக்கிறார். அதைப் பின்பற்றி, படத்தின் நாயகனும், போராட்டத்தில் கலந்து கொள்கிறார். சமூக நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.படத்தின் சில காட்சிகளில், அன்னா ஹசாரே கதாபாத்திரத்தில், அவரே தோன்றி நடிப்பார். இதுகுறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், நவம்பர் மாதம் 13ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு கணேஷ் சிண்டே கூறினார்.

