1,178 அடி மேலே காஷ்மீரில் உயரமான ரயில் பாலம்: மோடி திறப்பு
1,178 அடி மேலே காஷ்மீரில் உயரமான ரயில் பாலம்: மோடி திறப்பு
UPDATED : ஜூன் 07, 2025 04:53 PM
ADDED : ஜூன் 06, 2025 11:33 PM

உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். செனாப் நதியின் மீது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் வகையிலான இந்த பாலம், காஷ்மீர் முதல் -கன்னியாகுமரி வரை ஒரே தேசம் என்ற கோஷத்துக்கு உயிரூட்டுகிறது.
ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் பாதை வழியாக இணைக்கும் நடவடிக்கைகளை, பல ஆண்டுகளாகவே மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் உட்புறங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் ரயில் இணைப்பு ஏற்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது.
மலைகள், ஆறுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் ரயில் சேவைக்கு தடையாக இருந்தன. காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதி ஓடுகிறது. இதன் மீது ரயில் பாலம் அமைத்தால் மட்டுமே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இணைப்பு ஏற்படுத்த முடியும்.
செனாப் ஆற்று படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்தில் பாலம் அமைக்க வேண்டியிருக்கும் என பொறியியல் நிபுணர்கள் கணக்கிட்டனர்.
உலகில் வேறு எங்குமே அவ்வளவு உயரத்தில் ரயில் பாலம் கட்டவில்லை. எனினும், நம்மால் நிச்சயமாக முடியும் என பொறியாளர்கள் உறுதி அளித்தனர். எனவே, உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, செனாப் நதி மீது பாலம் அமைக்க வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நிலநடுக்கம், பனிப்பொழிவு, உறைபனி உட்பட பல்வேறு இயற்கை அபாயங்கள் நேரக்கூடிய மலைப்பகுதி என்பதால், அனைத்தையும் சமாளித்து நிற்கும் வகையில் துல்லியமான பொறியியல் தொழில்நுட்பத்துடன் திட்டம் தயாரிக்க வேண்டியிருந்தது.
கடந்த 2002ல் பாலம் கட்டுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், பணி 2017ல் தான் துவங்கியது. பாலம் கட்டுவதற்கான இடத்தை அடையவே 26 கி.மீ.,, நீளத்துக்கு தற்காலிக சாலைகள் அமைக்க நேரிட்டது. மலையை குடைந்து, 1,312 அடி நீள சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டது.
அவற்றின் வழியாகவே அனைத்து கட்டுமான பொருட்களும் எடுத்து செல்லப்பட்டன. காற்று, மழை, புயல் என பல்வேறு சவால்களுக்கு நடுவே இரவு, பகலாக நூற்றுக்கணக்கான பொறியாளர்களும், தொழிலாளர்களும் எட்டு ஆண்டுகள் வேலை செய்து, பாலக்கனவை நனவாக்கினர்.
பாலத்துக்கு மட்டும் 1,486 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதிவேக ரயிலான வந்தே பாரத் சோதனை ஓட்டமும் ஜனவரியில் நடத்தப்பட்டது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
அதையடுத்து, கத்ரா மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் புதிய ரயில் பாதையில், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூவர்ணக்கொடியை ஏந்தியவாறு பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்றார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பம்சங்கள்
மொத்தம் 4,314 அடி நீளமுள்ள இந்த பாலம், முழுக்க முழுக்க எக்குவால் கட்டப்பட்டுள்ளது. 1.31 கி.மீ., நீளமுள்ள இந்த பாலம் முழுதும் கட்டமைக்க, 30,000 மெட்ரிக் டன் எக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை விட, செனாப் ரயில் பாலம் 115 அடி உயர்ந்தது. 'ஆர்ச்' வடிவ ரயில்பாதை பாலமான இது, மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
![]() |
- நமது டில்லி நிருபர் -