மம்முட்டிக்கு அநீதி; தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படாத படங்கள் : தேர்வுக் குழு பகீர்
மம்முட்டிக்கு அநீதி; தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படாத படங்கள் : தேர்வுக் குழு பகீர்
ADDED : ஆக 18, 2024 10:13 AM

திருவனந்தபுரம்: தேசிய விருதுக்கு கேரள முன்னணி நடிகர் மம்முட்டியின் திரைப்படம் ஒன்று கூட பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்வுக்குழு கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது
2022ம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு நேற்று முன்தினம் (ஆக.,16) அறிவித்தது. அதில், சிறந்த படமாக மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஆட்டம் படம் தேர்வானது. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டியும், சிறந்த நடிகையாக மானஷி பரேக் (குட்ச் எக்ஸ்பிரஸ்) மற்றும் நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, சிறந்த மலையாளப் படமாக தரூண் மூர்த்தி இயக்கிய சவுதி வெல்லக்கா படம் தேர்வானது.
ரசிகர்கள் கேள்வி
தேசிய விருது பட்டியலில் மலையாள உலகின் முன்னணி நடிகர் மம்முட்டியின் படம் இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கேள்வியையும் எழுப்பியது.
அதிர்ச்சி
இந்த நிலையில், தேசிய விருதுக்கு மம்முட்டியின் திரைப்படம் ஒன்று கூட பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்வுக்குழுவின் தென்னிந்திய உறுப்பினரும், இயக்குநருமான எம்.பி., பத்மகுமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிந்துரைக்கப்படவில்லை
இது தொடர்பாக அவர் கூறியதாவது : 2022ம் ஆண்டு மக்களால் பாராட்டப்பட்ட லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், தேசிய விருது பெற தகுதியான படமாகும். அந்த அளவுக்கு மம்முட்டியின் நடிப்பு அந்தப் படத்தில் இருந்தது. ஆனால், உண்மையை சொல்லப் போனால், இந்த ஆண்டு மம்முட்டியின் ஒரு படம் கூட தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. உடனே அரசாங்கத்தை குறை சொல்லிவிடுவார்கள். ஆனால், இந்த முடிவை யார் எடுத்தது என்பதைத் தான் நாம் கேட்க வேண்டும்.
இழப்பு
விருது கிடைக்காமல் போனது மம்முட்டிக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவுக்கும் தான் இழப்பு, எனக் கூறினார்.

