ADDED : மார் 23, 2024 11:22 PM
பெங்களூரு: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து சட்டக்கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ஒயிட்பீல்டு - செல்லகட்டா வழித்தடத்தில் உள்ளது. கடந்த 21ம் தேதி மதியம் அத்திகுப்பே ரயில் நிலையத்திற்குள், ரயில் வந்தபோது, நடைமேடையில் நின்ற வாலிபர் ஒருவர், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் மும்பையை சேர்ந்த துருவ் ஜதன் தக்கர், 19, என்பது தெரிய வந்தது. இவர், பெங்களூரு ஞானபாரதி வளாகத்தில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பி.ஏ., -- எல்.எல்.பி., முதலாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது.
முதல் மூன்று மாதங்களில் நடந்த தேர்வில் 'ஏ' கிரேடு பெற்றிருந்தார். இரண்டாம் பருவ தேர்வில் 'சி' கிரேடு பெற்றார். இதனால் மனமுடைந்த துருவ், மதிப்பெண் குறைந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு அவரை சமாதானப்படுத்த, அவரது தந்தை மும்பையில் இருந்து வந்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனாலும், மன உளைச்சலில் இருந்து துருவ் ஜதக் தக்கர், சம்பவ தினத்தன்று தனது பெற்றோருக்கு போன் செய்து புலம்பியுள்ளார். அவர்களும் 'கப்பன் பூங்காவுக்கு சென்று வா' என கூறியுள்ளார். மேலும் வருத்தமடைந்த அவர், தான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பதாக கூறி, மொபைல் போனை துண்டித்துவிட்டார். அப்போது அங்கு வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

