விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
ADDED : செப் 14, 2024 08:08 AM
பெங்களூரு: நாகமங்களா கலவரத்தை அடுத்து, பெங்களூரில் இன்றும், நாளையும் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலம்; 16ம் தேதி நடக்கின்ற மிலாடி நபி ஊர்வலத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, கலவரம் வெடித்தது. இதனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் ஊர்வலத்தின்போது, எச்சரிக்கை வகிக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரின் வெவ்வேறு பகுதிகளில், இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலமும்; வரும் 16ம் தேதி மிலாடி நபி நடப்பதால், போலீசார் அலர்ட் ஆகி உள்ளனர்.
முக்கிய ஆலோசனை
இது தொடர்பாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, உயர் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் பல பகுதிகளில், 14, 15ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், சட்டம் - ஒழுங்கு காக்கும் வகையில், 14ம் தேதி விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்கின்ற ஜே.சி., நகர், ஆர்.டி.நகர், ஹெப்பால், சஞ்சய்நகர், டி.ஜே., ஹள்ளி, பாரதிநகர், புலிகேசிநகர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 14ம் தேதி காலை 6:00 மணி முதல், 15ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.
பாரதிநகர், சிவாஜிநகர்
இது போன்று, 15ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடக்கின்ற கமர்சியல் தெரு, பாரதிநகர், சிவாஜிநகர், புலிகேசிநகர், ஹலசூரு, எலஹங்கா உபநகரா, எலஹங்கா, வித்யாரண்யபுரா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 15ம் தேதி காலை 6:00 மணி முதல், 16ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.
மேலும், மிலாடி நபி ஊர்வலம் நடக்கின்ற 16ம் தேதி, சம்பிகேஹள்ளி, பாகலுார், ஹென்னுார், கோவிந்தபுரா, கே.ஜி., ஹள்ளி, டி.ஜே., ஹள்ளி, புலிகேசிநகர், சிவாஜிநகர், கமிர்சியல் தெரு.
பாரதிநகர், ஜே.சி., நகர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 16ம் தேதி காலை 6:00 மணி முதல், 17ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.
ஹோட்டல், ரெஸ்டாரண்டகளில் விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்தும் அமைப்பினரிடம், எத்தனை சிலைகள் வருகின்றன, அவர்களின் விபரம் குறித்து போலீசார் முன் கூட்டியே நேற்றுசேகரித்தனர்.