விஸ்வரூபம் எடுக்கும் சிவாஜி சிலை விவகாரம் :மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
விஸ்வரூபம் எடுக்கும் சிவாஜி சிலை விவகாரம் :மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
ADDED : செப் 02, 2024 12:54 AM

மும்பை,: மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி கூட்டணியான, 'மஹா விகாஸ் அகாடி' சார்பில் நேற்று நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “பிரதமர் மோடியின் மன்னிப்பில் திமிர் இருந்தது,” என, ஆவேசமாக தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை, 2023 டிச., 4ல், பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சிலை, கடந்த ஆக., 26ல் உடைந்து நொறுங்கியது. இது குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி, சிவாஜி சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்கு மாநில அரசை கண்டித்து, காங்., - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை அடங்கிய, எதிர்க்கட்சி கூட்டணியான, மஹா விகாஸ் அகாடி சார்பில், மும்பையில் நேற்று போராட்டம் நடந்தது.
ஹுதாத்மா சவுக் முதல் கேட்வே ஆப் இந்தியா வரை நடந்த பேரணியில், உத்தவ் தாக்கரே, சரத் பவார், மஹாராஷ்டிர காங்., தலைவர் நானா படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில், உத்தவ் தாக்கரே பேசியதாவது:
சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்கு, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பில், திமிரும், ஆணவமும் இருந்ததை நீங்கள் கவனித்தீர்களா? மோடி மன்னிப்பு கேட்ட போது, மேடையில் இருந்த ஒரு துணை முதல்வர் சிரித்து கொண்டிருந்தார்.
சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. சிலை உடைந்ததற்காக மோடி மன்னிப்பு கேட்டாரா அல்லது ஊழலில் ஈடுபட்டதற்காக மன்னிப்பு கேட்டாரா? சத்ரபதி சிவாஜியை அவமதித்த சக்திகளை, நாம் தோற்கடிக்க வேண்டும். இந்த நாட்டை விட்டு பா.ஜ.,வை வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சரத் பவார் கூறுகையில், “சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த சம்பவம், மற்றொரு ஊழலுக்கு உதாரணம்,” என்றார்.
நானா படோல் கூறுகையில், “சட்டசபை தேர்தலை கருதி, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுள்ளார். தே.ஜ., கூட்டணியை தேர்தலில் வீழ்த்த வேண்டும்,” என்றார்.